வைகுந்தத்துக்கு வழிகாட்டிய வள்ளல்!

வைகுந்தத்துக்கு வழிகாட்டிய வள்ளல்!
Published on

– ஆர்.வி.பதி

'வைணவ சம்பிரதாயத்தில் உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற பாகுபாடு கூடாது. வைணவன் என்பவன் பெருமாளுக்கு சேவை செய்பவன்' என்பது ஸ்ரீ ராமானுஜரின் கருத்து. இந்தக் கருத்தினை தனது வாழ்வில் பல செயல்களின் மூலம் அவ்வப்போது உணர்த்தியவர் எம்பெருமானார்.

புரட்சித்துறவி ஸ்ரீ ராமானுஜர் ஸ்ரீபெரும்பூதூரில் கேசவ சோமயாஜி – காந்திமதி தம்பதியருக்கு பிங்கள ஆண்டு (கி.பி.1017) சித்திரை மாதம் வளர்பிறை பஞ்சமி திதி வியாழக்கிழமை திருவாதிரை நட்சத்திரத்தில் அவதரித்தவர்.

'எல்லோரும் சமம். அனைவரும் வாழ்வில் மேன்மை அடைய வேண்டும்' என்பதே எம்பெருமானாரின் குறிக்கோளாக இருந்தது. இதை நிரூபிக்கும் விதமாக அவர் வாழ்வில் பலப்பல சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.

திருக்கோட்டியூரில் திருக்கோட்டியூர் நம்பி எனும் வைணவ மகான் வாழ்ந்து வந்தார். அவரைச் சந்திக்க எண்ணி திருவரங்கத்திலிருந்து புறப்பட்டு திருக்கோட்டியூருக்குச் சென்று நம்பியைச் சந்தித்தார் ராமானுஜர். திருக்கோட்டியூர் நம்பியை வணங்கினார். 'தம்மை நாடி வந்த காரணம் யாது?' என்று திருக்கோட்டியூர் நம்பி விசாரிக்க, அதற்கு ராமானுஜர் 'த்வயமந்திர ரகசியத்தை அறிய வந்திருக்கிறேன்' என்றார். அதற்கு நம்பி 'இப்போது போய் பிறகொரு நாள் வாரும்' என்றார். இவ்வாறு ஒரு முறை… இரு முறை அல்ல. பதினெட்டு முறை ராமானுஜரை திருப்பி அனுப்பினார் நம்பி. ராமானுஜரும் சளைக்காமல் நம்பியை மீண்டும் மீண்டும் சந்திக்கச் சென்றார்.

ஒரு கட்டத்தில் ராமானுஜரின் உறுதியும் நம்பிக்கையும் நம்பியைக் கவர, அவருக்கு மந்திரோபதேசம் செய்ய முடிவு செய்தார். ஒரு சிஷ்யரை அனுப்பி, ராமானுஜரை தெண்டம் பவித்திரம் ஆகியவற்றோடு வரும்படி அழைப்பு விடுத்தார்.

ராமானுஜர் தன்னோடு கூரேசரையும் முதலியாண்டானையும் அழைத்துக் கொண்டு திருக்கோட்டியூர் சென்றார். அதைக் கண்ட நம்பி, துணுக்குற்றார்.

"உம்மை தெண்டம் பவித்திரம் ஆகியவற்றோடு மட்டும்தானே வரச்சொன்னேன்.  நீர் ஏன் இவர்களை உம்மோடு அழைத்து வந்திருக்கிறாய்?" என்றார்.

"இவர்கள் இருவருமே எனது தெண்டம் பவித்திரம்" என்றார் ராமானுஜர்.

ராமானுஜரின் இந்த பதிலைக் கேட்டுத் திருப்தி அடைந்தார் நம்பி. பின்னர், ராமானுஜரை ஒரு தனி இடத்திற்கு அழைத்துச் சென்றார் நம்பி. அவரிடம், 'தாம் சொல்லப்போகும் மந்திர ரகசியத்தை யாருக்கும் சொல்லக்கூடாது. மீறினால் நரகம் கிடைக்கும்' என்று கூறி ராமானுஜரிடமிருந்து உறுதிமொழியை வாங்கிக் கொண்டார். ராமானுஜருக்கு 'ஓம் நமோ நாராயணாய' என்ற எட்டெழுத்து மந்திரத்தின் ரகசியங்களை போதித்த நம்பி, 'இந்த மந்திரத்தின் ரகசியங்களை அறிந்தவர்கள் வைகுண்டம் செல்லுவது நிச்சயம்' என்றும் எடுத்துரைத்தார்.   குருவிற்கு நமஸ்காரம் செய்து விடைபெற்ற ராமானுஜர் திருவரங்கம் புறப்பட்டார்.

ராமானுஜர் திருவரங்கம் புறப்பட்டதும் அவர் மனதில் ஒரு எண்ணம் மின்னல் போன்று உண்டானது. 'இந்த மந்திரத்தின் ரகசியங்களை அனைத்து மக்களுக்கும் ஏன் சொல்லக்கூடாது? என்று அவர் தனக்குத்தானே கேட்டுக் கொண்டார்.

உடனே, ராமானுஜர் அந்த ஊர் கோயிலுக்குச் சென்று பெரிய கோபுரத்தின் மீது ஏறி நின்று, "மக்களே. அனைவரும் வாருங்கள். நான் உங்களுக்கு த்வய மந்திரத்தின் ரகசியங்களை சொல்லப்போகிறேன். கேட்டு வைகுந்தம் செல்லுங்கள்" என்று சொன்னதும், ஊர் மக்கள் அனைவரும் அங்கே கூடிவிட்டார்கள்.

அதையடுத்து, நம்பி தனக்கு உபதேசித்த மந்திர ரகசியங்களை உரத்த குரலில் ஊர் மக்களுக்கு வெளியிட்டார் ராமானுஜர். ஊர் மக்கள் அனைவரும் மனம் குளிர்ந்தார்கள். ராமானுஜர் மந்திர ரசியங்களை வெளியிட்டது திருக்கோட்டியூர் நம்பியின் காதிற்கு எட்டியது. உடனே அவர் வெகுண்டெழுந்து ராமானுஜரை அழைத்து வரச்சொன்னார்.

"நீ சத்தியத்தை மீறி விட்டாய். இதன் பலன் என்ன என்பது உனக்குத் தெரியுமா?" என்றார்.

ராமானுஜர் பணிவுடன் பதிலளித்தார், "குருவே, செய்து கொடுத்த சத்தியத்தை மீறிய எனக்கு நிச்சயம் நரகம் கிடைக்கும்!"

"தெரிந்துமா இந்த பெரும் தவறைச் செய்தாய்?" என்று நம்பி கேட்க, "மன்னிக்க வேண்டும் குருவே. சத்தியத்தை மீறியதற்காக நான் ஒருவன் மட்டுமே நரகம் செல்லுவேன். ஆனால், இந்த ஊர் மக்கள் அனைவரும் வைகுந்தம் செல்வார்கள் அல்லவா?" என்று பணிவோடு பதிலுரைத்தார்.

ராமானுஜரின் இந்த வார்த்தைகளைக் கேட்ட நம்பி, நெகிழ்ந்து போனார். ராமானுஜரின் பரந்த மனசு அவருக்கு அப்போதுதான் புரிந்தது.

இதுபோன்ற பல நிகழ்ச்சிகள் மகான் ஸ்ரீ ராமானுஜரின் வாழ்வில் நடைபெற்றுள்ளன. அனைவரையும் சரிசமமாக பாவித்த பெருமை உடையவர் நம் உடையவர் பெருமான்.

ரு சமயம் ராமானுஜர் தமது சிஷ்யகோடிகளுடன் திருமலைக்குச் சென்று கொண்டிருந்தார். நடந்து சென்று கொண்டிருக்கும்போது வழி தவறி விட்டார்கள். அப்போது அந்தப் பகுதியில் வேலை செய்து கொண்டிருந்த ஒருவனிடம் ராமானுஜர் திருமலைக்குச் செல்லும் வழியைக் கேட்டார். அவனும் திருமலைக்குச் செல்லும் வழியைச் சொன்னான். உடனே ராமானுஜர் அவனை வணங்கி, நன்றி தெரிவித்தார். இதைக்கண்ட சிஷ்யர்கள் முகம் சுளித்தார்கள்.

"சுவாமி. அவன் சாதாரண குலத்தைச் சேர்ந்தவனாயிற்றே. அவனை நீங்கள் வணங்கலாமா?" என்றார்கள்.

"அதனால் என்ன? அவன் நமக்கு திருமலைக்குச் செல்லும் வழியைக் காட்டியிருக்கிறான். திருமலைக்குச் செல்வது வைகுந்தத்திற்குச் செல்லும் வழி அல்லவா? வைகுந்தத்திற்கு வழிகாட்டியவனை வணங்குவதில் ஒரு தவறும் இல்லையே" என்றார்.

ராமானுஜரின் புகழ் இன்றளவும் மங்காதிருப்பதற்கு அவருடைய இத்தகைய பரந்த மனப்பான்மையும் ஒரு காரணமாகும். எம்பெருமானார் ஸ்ரீ ராமானுஜர் பலவிதமான திருநாமங்களால் அழைக்கப்பட்ட பெருமை உடையவர். ராமானுஜர் துறவறம் மேற்கொண்டு துறவிக் கோலத்தை அடைந்தபோது திருக்கச்சி நம்பிகள் அவரை, "யதிராஜா" என்றழைத்தார். அதாவது, இதற்கு துறவிகளின் அரசன் என்று பொருள். ஆளவந்தாரின் ஆதீனத்தை ஏற்று திருவரங்கம் சென்ற ராமானுஜரை, 'உடையவர்' என்று அழைத்தார்கள். பிரம்ம சூத்திரத்திற்கு வியாக்கியானம் எழுதி பாஷ்யம் அருளிய காரணத்தினால் ராமானுஜர், 'பாஷ்யக்காரர்' என்றழைக்கப்பட்டார். ராமானுஜர், 'எம்பெருமானார்' என்றும் அழைக்கப்பட்டார். பிட்சைக்குச் செல்லும்போது ஆண்டாளின் பாசுரங்களைப் பாடியபடி சென்ற காரணத்தினால், 'திருப்பாவை ஜீயர்' என்றும் அழைக்கப்பட்டார். இப்படி இன்னும் பல திருநாமங்கள் உடையவருக்கு உண்டு.

இவ்வாண்டு மே மாதம் ஆறாம் தேதி அன்று ஸ்ரீ ராமானுஜர் ஜயந்தி அனுசரிக்கப்படுகிறது. இந்த நன்னாளில் எம்பெருமானாரை வணங்கி வாழ்வில் மேன்மை அடைவோம்.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com