
– லதானந்த்
ஓர் ஊரில் எந்த வீட்டுக்கும் கதவுகளே இல்லை என்பது ஆச்சரியமான விஷயம்தானே! கதவுகளே இல்லாத அந்த ஊரில் களவுகளே நடைபெறுவதில்லை என்பதும் ஆச்சரியம்தானே!
அப்படிப்பட்ட ஓர் ஊர் இருக்கிறது. அதுதான் மகாராஷ்டிரா மாநிலத்தில் இருக்கும் சனி சிக்னாப்பூர். இந்த ஊரில் வீற்றிருந்து அருளாசி அளிப்பவர் சனி பகவான். இவரை மக்கள் சனீஸ்வர மஹராஜ் என அழைக்கின்றனர். அவரது சிலை கல் வடிவில் வெட்ட வெளியில் இருக்கிறது. மொத்தக் கருவறையே வெட்டவெளிதான். மேற்கூறையோ பக்கவாட்டுச் சுவர்களோ கிடையாது. ஐந்தரை அடி உயரமும், ஒன்றரை அடி அகலமும் கொண்டு சுயம்புவாக எழுந்தருளியிருக்கிறார் இங்கு சனி பகவான். மழை, வெய்யில் போன்ற எதற்கும் தடுப்புக் கிடையாது. இவரது திருமேனிக்கு மேல் இருக்கும் கும்பத்தில் இருந்து சொட்டு சொட்டாக எண்ணெய் விழுந்து கொண்டிருக்கிறது.
அவருடன் சிவபெருமானுக்கும் அனுமனுக்கும் திருச்சிலையும் உள்ளன. இந்தத் தல சனி பகவானை பக்தர்களே தொட்டு அபிஷேகம் செய்யலாம். ஆனால், பெண்கள் அபிஷேகம் செய்ய அனுமதி இல்லை. சமீப காலம் வரை பெண்கள் கோயிலுக்குள் நுழையவே தடை இருந்தது. இப்போது பெண்கள் இந்தக் கோயிலுக்கு வர எந்தத் தடையும் இல்லை.
இந்த ஆலயம் ஏற்பட்ட வரலாறு மிகவும் சுவாரசியமானது. சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்னால் இந்த ஊருக்கு அருகே இருக்கும் பானஸ்நாலா என்ற நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியிருக்கிறது. அந்த வெள்ளப்பெருக்கில் அதிசயக் கல் ஒன்று மிதந்து வந்திருக்கிறது. நதியின் அருகில் ஆடு மேய்த்துக்கொண்டிருந்த சிறுவன் ஒருவன் இதைப் பார்க்கிறான். இரும்பு வளையம் மாட்டப்பட்டிருந்த தனது கைத்தடியால் அந்தக் கல்லை அடிக்கிறான். என்ன ஆச்சாரியம்! கல்லிலே இருந்து ரத்தம் வழிகிறது.
அந்த ஊரில் இருக்கும் ஒருவரின் கனவில் தோன்றுகிறார் சனி பகவான். "நானே இந்தக் கல் வடிவில் நதியில் மிதந்து வந்திருக்கிறேன். என்னை இங்கே பிரதிஷ்டை செய்து வழிபட ஆவன செய்யவும்" என அருள்வாக்குச் சொல்லியிருக்கிறார். அவரும் அவ்வாறே செய்திருக்கிறார். அன்றிலிருந்து சனி பகவானே இந்த ஊரைப் பாதுகாத்துவருவதாக மக்கள் நம்புகின்றனர். அவர் மீது கொண்டிருக்கும் நம்பிக்கையின் காரணமாக எந்த வீட்டுக்கும் கதவுகள் அமைப்பது இல்லை. வங்கிக் கட்டடங்களுக்குக்கூடக் கதவுகள் இல்லை! யாராவது திருட்டுச் செயலில் ஈடுபட்டால் அவர்களது பார்வை பறிபோய்விடும் என ஊர் மக்கள் நம்புகிறார்கள். அப்படிப்பட்ட சில வரலாற்று நிகழ்வுகளையும் உதாரணங்களாகச் சொல்கிறார்கள்.
சனிக்கிழமைகளில் வரும் அமாவாசை தினங்கள் இத்தல சனி பகவானுக்கு உகந்த சிறப்பு தினங்களாகும். அன்று, நல்லெண்ணெய் மற்றும் கருப்பு உளுந்து, பூ போன்றவை சிறப்பு வழிபாட்டுப் பொருட்களாகத் திகழ்கின்றன. இத்தினங்களில் ஆயிரக்கணக்கான லிட்டர் நல்லெண்ணெய் அபிஷேகம் செய்யப்படுகிறது. பல நூறு கிலோ எள் எரிக்கப்படுகிறது.
ஏழரைச் சனி மற்றும் அஷ்டமச் சனி திசை நடப்பவர்கள், தங்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் நீங்க இந்த ஆலயத்துக்கு வந்து சனி மஹராஜுக்கு அபிஷேகம் செய்வது சிறப்பான பலன்களைக் கொடுக்கும் என நம்பப்படுகிறது.
சீரடி செல்லும் பக்தர்கள் மற்றும் மஹாராஷ்ட்ராவில் அமைந்துள்ள மூன்று ஜோதிர்லிங்க ஆலயங்களான திரியம்பகேஸ்வரர், க்ருஷ்னேஷ்வர் மற்றும் பீமா சங்கர் ஆலய தரிசனம் செய்பவர்கள், கூடவே சனி சிக்னாப்பூரையும் தங்கள் ஆலய வழிபாட்டுப் பட்டியலில் சேர்த்துக்கொண்டு தரிசித்து அருள் பெறலாம்.
அமைவிடம் : புனே நகரில் இருந்து 162 கி.மீ. தொலைவிலும், சீரடியில் இருந்து 70 கி.மீ. தொலைவிலும், நாசிக்கிலிருந்து 145 கி.மீ. தொலைவிலும் அஹமதுநகர் மாவட்டத்தில் அமைந்திருக்கிறது சனி சிக்னாப்பூர்.