விழித்திருக்கும் மஹாதேவ்!

விழித்திருக்கும் மஹாதேவ்!
Published on

– எம்.அசோக்ராஜா

ரு சமயம் சிவ பக்தர் ஒருவர் தனது கிராமத்திலிருந்து கேதார்நாத் சிவபெருமானை தரிசிக்கப் புறப்பட்டார். அக்காலத்தில் போக்குவரத்து வசதிகள் இல்லை. அதனால் அவர் நடை பயணமாக கேதார்நாத் வழியை கேட்டபடியே மனதில் சிவனை இருத்தியபடி சென்றார். நடை பயணம் துவங்கி பல மாதங்கள் கடந்து விட்டன. இறுதியாக ஒரு நாள் அவர் கேதார்நாத்தை அடைந்தார்!

கேதார்நாத்தில் கோயில் ஆறு மாதங்கள் திறந்திருக்கும்; ஆறு மாதங்கள் மூடப்பட்டிருக்கும். சிவ பக்தர் சென்ற நேரம் கோயிலின் கதவுகள் மூடப்பட்டன. அதைக்கண்ட பக்தரோ, பண்டிட் ஜி அவர்களிடம், "நான் தொலைவிலிருந்து மாதக்கணக்கில் நடந்து வந்துள்ளேன். தயவு செய்து கோயில் கதவுகளைத் திறந்து ஈசனை தரிசிக்க அனுமதியுங்கள்" எனக் கெஞ்சினார்.

ஆனால் பண்டிட்ஜியோ, "இந்தக் கோயிலுக்கென்று ஒரு விதி உள்ளது. ஒரு முறை கோயில் மூடப்பட்டது என்றால் மீண்டும் திறக்க ஆறு மாதம் ஆகும். அதனால் தற்போது உடனே கோயிலைத் திறக்க இயலாது" என்கிறார்.

அந்த பக்தரோ, அவரிடம் மன்றாடி அழுதார். மீண்டும் மீண்டும் சிவபெருமானை மனதினுள்ளே வேண்டினார். கோயிலில் இருந்த அனைவரிடமும் கெஞ்சினார். ஆனால், யாரும் கேட்கவில்லை. "பக்தரே, தாங்கள் இப்போது சென்று மீண்டும் ஆறு மாதங்கள் கழித்து வாருங்கள். ஆறு மாதம் கழித்து வந்தால் கோயில் கதவு திறக்கப்படும். அப்போது இறைவனை தரிசிக்கலாம்' என்றார் பண்டிட்ஜி.

கோயிலில் இருந்து அனைவரும் சென்று விட்டனர். ஆறு மாதங்கள் பனிக்கட்டியால் கோயில் உறைந்து போய் இருக்கும். அந்த பக்தர் அழுது அழுது களைப்படைந்து கோயிலிலேயே இருந்தார். இரவு வரத்தொடங்கியது. எல்லாமே இருட்டாக இருந்தது. ஆனால் அந்த பக்தரோ. சிவனை தியானிப்பதை நிறுத்தவில்லை. நிச்சயம் ஈசன்
அருள்புரிவான் என்று நம்பினார். ஒரு கட்டத்தில் மிகவும் பசியாகவும் தாகமாகவும் உணர்ந்தார். அப்போது யாரோ ஒருவர் வரும் சத்தம் அவருக்குக் கேட்டது.

ஒரு சன்யாசி அவரிடம் வருவதைப் பார்த்தார். வந்த சன்யாசி அவரருகே அமர்ந்து, "எங்கிருந்து வருகிறாய் மகனே?" எனக் கேட்டார்.

தனது நிலையை விளக்கிய பக்தர், "என் வருகை இங்கே வீணாகிவிட்டது" என அழுது புலம்பினார்!

சன்யாசி அவருக்கு ஆறுதல் கூறி, உணவும் கொடுத்தார். பிறகு அவருடன் நீண்ட நேரம் பேசிக்கொண்டே இருந்தார். அப்போது சன்யாசி பக்தரிடம் கருணையோடு, "காலையில் கோயில் திறக்கும் என்று நினைக்கிறேன் மகனே… நீ கண்டிப்பாக சிவனை தரிசிக்கலாம்" என்றார்.

சன்யாசியிடம் பேசிக்கொண்டிருந்த பக்தனுக்கு தூக்கம் வந்ததே தெரியவில்லை. அயர்ந்து தூங்கி விட்டார்.

திடீரென பேச்சுக் குரலாலும் சூரிய ஒளியாலும் பக்தனின் கண்கள் திறந்தன. அவர் சன்யாசியைத் தேடினார். ஆனால், அவர் அங்கு இல்லை. அப்போது பண்டிட் ஜி தனது முழு சபையுடன் கோயிலைத் திறக்க வந்துக்கொண்டிருக்கிறார்.

தன் அருகே வந்த பண்டிட் ஜியை வணங்கிய பக்தர், ''ஐயா நேற்று ஆறு மாதம் கழித்துதான் கோயில் திறக்கும் என்று சொன்னீர்கள். இடைப்பட்ட காலத்தில் யாரும் இங்கு வரப்போவதில்லை என்றும் கூறினீர்கள். ஆனால், நீங்கள் இப்போது வந்திருக்கிறீர்களே'' என்றார் அந்த பக்தர்.

பண்டிட் ஜி அவரை கவனமாகப் பார்த்தார். அதோடு, அவரை அடையாளம் காணவும் முயற்சித்தார். ஆனால், அடையாளம் தெரியவில்லை. "நீங்கள் நேற்று கோயிலுக்கு வந்தீர்களா? என்னைச் சந்தித்தீர்களா? நாங்கள் ஆறு மாதங்களுக்குப் பிறகு இப்போதுதான் திரும்பி வருகிறோம்! என்ன ஆச்சரியம்" என்றார்!

பக்தரோ, "இல்லை… நான் எங்கும் போகவில்லை. நேற்று நான் உங்களைச் சந்தித்தேன், இரவு நான் இங்கேயே தூங்கிவிட்டேன். நான் எங்குமே போகவில்லையே" என்றார்.

பண்டிட் ஜிக்கு ஆச்சரியத்தின் அளவு எல்லை கடந்தது! "நான் ஆறு மாதங்களுக்கு முன்பு கோயிலைப் பூட்டிவிட்டு சென்று இன்றுதான் வருகிறேன். இப்படி ஒரு குளிர்காலத்தில் தனி ஒருவனாக உங்களால் எப்படி ஆறு மாத காலம் வாழ முடியும்?" பண்டிட் ஜி மற்றும் அனைத்து சபைகளும் ஆச்சரியத்தில் உறைந்தனர்.

தொடர்ந்து, அந்த சிவ பக்தர் இரவு சன்யாசி ஒருவரோடு சேர்ந்து சாப்பிட்டதையும் அவரோடு பேசிக்கொண்டிருந்ததையும் பண்டிட்ஜி மற்றும் குழுவினரிடம் விரிவாகக் கூறினார்.

அதைக் கேட்ட அவர்கள் நடந்தவை அனைத்தும் மகாதேவனின் லீலையே எனப் புரிந்து கொண்டனர்! பண்டிட் ஜி மற்றும் அனைவரும் அவரது கால்களில் விழுந்து வணங்கினர்.

"இறைவனின் தரிசனம் கண்ட நீங்கள்தான் உண்மையான பக்தன்" என்றனர். அதைத் தொடர்ந்து, "அவர் உங்கள் ஆறு மாதங்களை தனது சக்தி மூலம் இரவாக மாற்றி, காலத்தைச் சுருக்கி விட்டார். அதுவே, 'மாயா' எனப்படும். இவையெல்லாம் உங்கள் உண்மையான பக்தி, நம்பிக்கையின் காரணமாக விளைந்தவை. உங்கள் பக்தியை நாங்கள் வணங்குகிறோம்" என்றனர்.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com