போனாலு பண்டிகை!

போனாலு பண்டிகை!
Published on

– ஆர்.சாந்தா

'போனம்' என்னும் சொல் சாப்பாட்டைக் குறிக்கும். 'போனாலு' எனப்படும் இந்தத் திருவிழா தெலங்கானா பகுதியில், குறிப்பாக ஹைதராபாத், செகந்திராபாத் பகுதிகளிலும் அதன் சுற்றுவட்டாரங்களிலும் கொண்டாடப்படும் ஒரு பிரசித்திப் பெற்ற திருவிழாவாகும். கி.பி.1813ல் ஹைதராபாத், செகந்திராபாத் நகரங்களில் உள்ள மிலிட்டரி காலனியில் காலராவும், அம்மை நோயும் பரவி லட்சக்கணக்கில் மக்கள் மாண்டனர்.

அப்போது அங்கு முகாமிட்டிருந்த ஒரு படைப்பிரிவு, உஜ்ஜைனிக்குப் பாதுகாப்புக்காகச் சென்றது. அவர்கள் அந்நகர காவல் தெய்வமான மகாகாளியிடம் தங்கள் மக்களை இக்கொடிய நோயிலிருந்து காப்பாற்றினால் கோயில் கட்டி வழிபடுவதாக வேண்டிக் கொண்டனர். மகாகாளியின் அருளால் அந்தத் தொற்று நோய் நீங்கி மக்கள் காப்பாற்றப்பட்டனர். அதற்கு நன்றி கூறும்விதமாக உஜ்ஜைனியிலிருந்து ஒரு காளி சிலையைக் கொண்டு வந்து இங்கு பிரதிஷ்டை செய்து, கோயில் கட்டி வழிபட ஆரம்பித்தனர். அதோடு, காளிக்குப் புதுப்பானையில் புது அரிசியிட்டு, பால், வெல்லம் கலந்து பொங்கல் படைத்து வழிபட்டனர். இப்படி ஏற்பட்டதுதான், 'போனாலு' திருவிழா.

ந்தத் திருவிழா ஆடி மாதம் முதல் ஞாயிறு அன்று கோல்கொண்டா மகாகாளி கோயிலில் ஆரம்பித்து, இரண்டாம் ஞாயிறு பால்கம்பட் எல்லம்மாள் கோயில் மற்றும் லால்தர்வாஜாவிலுள்ள மாதேஸ்வரி கோயிலில் மூன்றாம் ஞாயிறும், இறுதியாக அப்பண்ணா மாதண்ணா கோயிலில் நான்காம் ஞாயிறு அன்றும் கொண்டாடப்படுகிறது. இவ்விழாவில் லட்சக்கணக்கில் பக்தர்கள் கலந்து கொள்கின்றனர்.

அன்று பெண்கள் புத்தாடை, நகைகள் அணிந்து அலங்காரமாகப் பொங்கல் பானையைத் தலையில் சுமந்து வரிசையாகக் கோயிலுக்குச் செல்வார்கள். அப்போது மகாகாளியின் சகோதரர் எனக் கருதப்படும் போத்திராஜ் அங்கு வந்து, காவி உடை உடுத்தி கால்களில் சலங்கை கட்டி, நெற்றில் சிந்தூரமும் உடலில் மஞ்சளும் பூசியபடி, பறை வாத்தியங்களுக்கு ஏற்ப நடனமாடுவார். இவர்தான் இத்திருவிழாவைத் தொடங்கி வைத்து, பின்பு வரிசையில் நிற்கும் பெண்களை காளியின் சன்னிதிக்கு அழைத்துச் செல்வார். இதற்கு மறுநாள் 'ரங்கம்' என்னும் குறி சொல்லும் நிகழ்ச்சி நடைபெறும்.

மயங்கிய நிலையில் மண் குடத்தின் மீது ஏறி நிற்கும் ஒரு பெண்மணியின் உடலில் காளி புகுந்து குறி சொல்வதாக மக்கள் நம்புகின்றனர். பொதுவாக, அடுத்து வரும் வருட விளைச்சல், திருமணம், மகப்பேறு போன்ற பக்தர்களின் கேள்விகளுக்கு உரிய பதில் கிடைக்கும். இந்நிகழ்ச்சி முடிந்தவுடன் பூசாரி, ஒரு அலங்கரித்த பித்தளைக் குடத்தில் வேப்பிலை தோரணம் கட்டி, மந்திரம் ஜபித்த நீரை நிரப்பி அதை ஊர்வலமாக எடுத்துச் சென்று அந்த நீரை நதியில் கலப்பார். இத்துடன் இத்திருவிழா நிறைவுபெறும். நம் ஊர்களில் ஆடிப்பெருக்கன்று வண்ணக் காகிதங்களால் அலங்கரித்த சிறிய தேர்கள் இழுக்கப்படுவது போல இத்திருவிழாவில் சிறிய அலங்கரித்த தேர்கள் இழுக்கப்படுவதும் உண்டு.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com