இன்னல் தீர்க்கும் இரண்டாம் காசி!

இன்னல் தீர்க்கும் இரண்டாம் காசி!
Published on

– எம்.அசோக்ராஜா

விருதுநகர் மாவட்டம், சாத்தூரில் இருந்து சங்கரன்கோவிலுக்கு ஏழாயிரம்பண்ணை வழியாகச் செல்லும் சாலையில், நடுசத்திரம் கிராமத்தில் அமைந்துள்ளது அருள்மிகு அன்னபூரணி சமேத ஸ்ரீ காசிவிஸ்வநாதர் திருக்கோயில். இதை, 'இந்தியாவின் இரண்டாவது காசி' என்று பக்தர்கள் போற்றி வழிபடுகின்றனர். சுமார் 1,200 ஆண்டுகளுக்கு முன், பாண்டிய மன்னர்களால் நிர்மாணிக்கப்பட்ட கோயில் இது. தற்போது கோயில் அமைந்த இடம், அக்காலத்தில் வனமாக இருந்திருக்கிறது. இந்த வனப்பகுதியின் வழியாகத்தான் கன்னியாகுமரியில் இருந்து காசிக்குச் செல்லும் பக்தர்கள் பயணம் மேற்கொள்வார்கள். கோயிலின் அருகிலேயே ஓர் நீர்நிலை உள்ளது. இப்பகுதியை ஆண்ட பாண்டிய மன்னர்கள் இதைக் கருத்தில் கொண்டு, காசிக்குச் செல்லும் மக்களுக்கு வசதியாக இந்த ஆலயத்தை காசியைப் போன்றே வடிவமைத்திருக்கின்றனர். காசிக்குச் செல்பவர்கள் இந்த ஆலயத்தில் தங்கி, இங்குள்ள சிவபெருமானையும் தரிசித்துவிட்டுச் செல்வது வழக்கம்.

பாண்டிய மன்னர்கள், அப்போதிருந்த குறுநில மன்னர்களான எட்டையபுரம் ஜமீன்தார்களிடம் ஆலய நிர்வாகத்தை ஒப்படைத்தனர். அவர்களது காலத்துக்குப் பின், ஏழாயிரம்பண்ணை ஜமீனிடம் பராமரிக்கும் பொறுப்பு வந்து சேர்ந்தது. இவர்கள் சில தலைமுறைகளாக இந்தக் கோயிலைப் பாதுகாத்து வந்துள்ளனர். அதன்பின், இந்த ஆலயம் செவல்பட்டி ஜமீன் வசம் ஒப்படைக்கப்பட்டது. கடைசியாக, ஹரிச்சந்திர நாயுடு என்பவர் இந்தக் கோயிலின் திருப்பணிகளைக் கவனித்து வந்ததாகச் சொல்கிறார்கள், இந்த ஊர்ப் பெரியவர்கள். தற்போது இந்த ஆலயம் இந்து அறநிலையத்துறையின் மேற்பார்வையில் உள்ளது.

ந்தக் கோயிலில் மட்டுமே காசிக்கு அடுத்தபடியாக தேவி அன்னபூரணி தெற்கு நோக்கிக் காட்சி தருகிறார். இத்தலம் பாண்டியர் காலத்தைச் சேர்ந்தது என்பதற்குச் சான்றாக, இங்குள்ள தூண்களில் மீன் சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது. தல விருட்சம் வில்வ மரம். மூலவர் பெருமானுக்கு எதிரில் வீற்றிருக்கும் நந்தீஸ்வரரின் ஒரு கண் சிவபெருமானை நோக்கியபடியும் மற்றொரு கண் அன்னபூரணியை நோக்கியபடியும் தலை சாய்த்து அமைந்திருப்பது இத்தலத்தின் ஒரு சிறப்பு. மற்றொரு சிறப்பாக இந்தத் திருத்தலத்தில் அருளும் சனி பகவான், 'குபேர சனீஸ்வரர்' என்ற பெயரில் தனித்து அருள்பாலிக்கிறார். இவரும் நந்தி பகவானைப் போன்றே தலை சற்றே சாய்த்து காட்சி தருவது விசேஷம். இச்சன்னிதியின் அருகே வற்றாத நூபுரகங்கை என்ற தீர்த்தக் கிணறு அமைந்துள்ளது. அதேபோன்று சண்டிகேஸ்வரர் தெற்கு பார்த்து. காளை வாகனத்தில் அமர்ந்திருப்பது வேறு எந்த சிவாலயத்திலும் காண முடியாத சிறப்பம்சமாகும்.

ஆலயத்தின் கன்னி மூலையில் கணபதியும், வாயு மூலையில் வள்ளி- தெய்வானை சமேத முருகப் பெருமானும் அமைந்து உள்ளனர். ஈசான்ய மூலையில் பைரவர் சன்னிதி உள்ளது. அக்னி மூலையில் மடப்பள்ளி அமைந்திருக்கிறது. கோயிலில் அமைந்துள்ள கொடி மரத்தின் அடிப்பாகம் தாமரைப் பூ போன்ற வடிவமைப்புடன் காட்சி தருகிறது. ஆலயத்தைச் சுற்றியுள்ள கல்தூண்களில் பெருமாள், ஹனுமன், நாகம்மாள் என தெய்வச் சிற்பங்கள் வடிக்கப்பட்டிருக்கின்றன. இங்கு தென் திசை நோக்கிய குரு பகவானும், சிவனுக்கு நேர்எதிராக வலதுபுறம் சூரியனும், இடதுபுறம் சந்திரனும் அமைந்துள்ளனர். மேலும், இக்கோயிலில் அன்னபூரணி, காலபைரவர், சண்டிகேஸ்வரர், நடராஜர் மற்றும் குபேர சனீஸ்வர பகவான் அனைவரும் தென் திசை நோக்கி அமைந்திருப்பது தனிச் சிறப்பாகும்.

செய்யும் தொழிலில் நஷ்டம் அடைந்தவர்கள், தேய்பிறை அஷ்டமி அன்று காலபைரவருக்கு வெள்ளைப் பூசணிக்காய் ஒன்றை (தடியங்காய்) இரண்டாகப் பிளந்து, வெள்ளை மிளகு 108 எடுத்து பாதியாகப் பிரித்து பூசணிக்காயில் வைத்து, இலுப்பை எண்ணெய் ஊற்றித் தீபம் ஏற்றினால், தொழில் விருத்தியாகும் என்பது நம்பிக்கை. இதுதவிர, திருமண வரம் வேண்டிவரும் பெண்கள், பிரதோஷ நாளில் எலுமிச்சை மாலையை அன்னபூரணியம்பிகைக்குச் சூடி, சுவாமியை தரிசித்துவிட்டுச் சென்றால், விரைவில் நல்ல வரன் அமையும்.

அதேபோல், ஆண்கள் தொடர்ந்து மூன்று பிரதோஷ தினங்களில், அன்னபூரணிக்கு பூமாலை சமர்ப்பித்து வழிபட்டுச் சென்றால், விரைவில் திருமண மாலை அவர்கள் தோள் சேரும். குழந்தைப் பேறு இல்லாதவர்கள் இளநீர் வாங்கி வந்து, அம்பிகைக்கு அபிஷேகம் செய்தால் விரைவில் குழந்தை பாக்கியம் அமையும் என்பது நம்பிக்கை. சனி பெயர்ச்சி, குரு பெயர்ச்சி மற்றும் பௌர்ணமி பூஜை ஆகியவை இங்கு சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.

அமைவிடம்: சாத்தூரிலிருந்து சங்கரன்கோவிலுக்கு ஏழாயிரம் பண்ணை வழியாகச் செல்லும் சாலையில் சுமார் 22 கி.மீ., சிவகாசியிலிருந்து சங்கரன்கோவிலுக்குச் செல்லும் சாலையில் 20 கி.மீ. தொலைவில் உள்ள குகன்பாறையிலிருந்து கிழக்குப்புறமாக 3 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது கோயில்.

தரிசன நேரம்: காலை 6 முதல் 12 மணி வரை; மாலை 4 முதல் 7.30 மணி வரை. விசேஷ நாட்களில் கூடுதல் நேரம் நடை திறந்திருக்கும்.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com