கதம்பமாலை

கதம்பமாலை
Published on

குரல் வளம் அருளும் ஈசன்!

டலூர் மாவட்டம், விருத்தாசலத்துக்கு அருகே, கொள்ளிடம் ஆற்றின் வடக்கிலும், சுவேத நதி எனப்படும் வெள்ளாற்றின் தெற்கிலும் அமைந்துள்ளது ராஜேந்திரபட்டினம் சுவேதாரண்யேஸ்வரர் திருக்கோயில். இத்தலத்தின் புராண காலப் பெயர் சுவேதார்க்கவனம் என்பதாகும். கயிலாயத்தில் ஒரு சமயம் சிவபெருமான் வேதாகமத்தின் உட்பொருளை பார்வதிக்கு உபதேசித்துக் கொண்டிருந்தார். பார்வதி தேவி அதை சரியாக கவனிக்காததால், அவளை பூமியில் பரதவர் குல பெண்ணாகப் பிறக்குமாறு சபித்தார் ஈசன். இதனால் கோபமடைந்த முருகன், தனது தாயை சிவபெருமான் சபிப்பதற்குக் காரணமாக இருந்த வேதாகம நூல்களை கடலில் வீசி எறிந்தார்.

இக்குற்றத்திற்காக முருகனை, மதுரையில் வணிகர் குலத்தில் ஊமைப்பிள்ளையாக பிறக்கும்படி சபித்தார் சிவபெருமான். மதுரையில் தனபதி, குணசாலினி என்ற பெற்றோருக்கு, 'உருத்திரசன்மர்'என்ற பெயரில் அவதரித்தார் முருகன். உரிய வயது வந்தபோது பல சிவத்தலங்களுக்கு சென்று வழிபாடு செய்தார். கடைசியாக, இத்தலம் வந்து சிவலிங்கம் அமைத்து வழிபட்டு பேசும் திறன் பெற்றார் முருகப்பெருமான். பேச்சுக் குறைபாடு உள்ளவர்கள் இத்தல தீர்த்தக் குளத்தில் நீராடி, இறைவனை வேண்டி வழிபட்டால், அந்தக் குறைபாடு நீங்கி நலம் பெறலாம். குமரன் வழிபட்டதால் இத்தல சிவன், 'குமாரசாமி'என்றும் அழைக்கப்படுகிறார். உருத்திரசன்மரின் உருவம் இக்கோயிலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

– ஜி.ஜெயலட்சுமி, சென்னை

காரிய வெற்றி தரும் தூங்காபுளி!

ன்னியாகுமரியிலிருந்து திருச்செந்தூர் செல்லும் கடற்கரை சாலையில், குட்டம் திருத்தலத்தில் அமைந்துள்ளது ஸ்ரீ ஆனந்தவல்லியம்மன் திருக்கோயில். இந்தக் கோயிலில் ஆடிப்பெருக்கு விழா மிகவும் பிரசித்தமாகக் கொண்டாடப்படுகிறது. இந்தக் கோயிலின் அருகே அமைந்துள்ள தூங்கா புளியமரம் தீராத நோய்களையும் தீர்க்கும் சக்தி வாய்ந்ததாக விளங்குகிறது. வெளியூர் செல்லும் பக்தர்கள் இந்தப் புளிய மரத்தின் இலைகளையும் கூடவே எடுத்துச் செல்கின்றனர். இதனால் தங்கள் பயணம் பாதுகாப்பாக அமையும் என்பதும், இந்த இலைகள் தங்களுடன் இருக்கும் பட்சத்தில், தங்களுக்கு எல்லாமே வெற்றியாகும் என்பதும் அவர்களது அசைக்க முடியாத நம்பிக்கை.

– பே.சண்முகம், செங்கோட்டை

மாங்கல்ய வரம் தரும் சிவசக்தி திருக்கோலம்!

ங்கள் வீட்டுப் பிள்ளைகளுக்குத் தடை நீங்கி, திருமணம் விரைந்து நடைபெற வேண்டுமா? சுவாமியும் அம்பாளும் சேர்ந்து ஒரே கருவறையில் உமா மகேஸ்வரத் திருக்கோலத்தில் காட்சி தரும் தலங்களை தரிசித்தால் உங்கள் வீட்டில் சீக்கிரமே கெட்டி மேளச் சத்தம் கேட்கும். சிவசக்தி திருக்கோலத்தில் அமைந்த சில சிவாலயங்கள் கீழே…

திருக்கழிப்பாலை, திருவேள்விக்குடி, திருநல்லூர், திருக்கறிப்பறியலூர், அம்பர் பெருந்திருக்கோயில், இடும்பாவனம், திருநாகைக்காரோணம், வேதாரண்யம், திருப்பரங்குன்றம், கொடுங்குன்றம், திருவேற்காடு, திருவெண்பாக்கம், திருவதிகை, திருக்கச்சி ஏகம்பம், சீர்காழி, திருவீழிமிழலை, திருமணஞ்சேரி போன்றவையாகும்.

– எம்.வசந்தா, சிட்லபாக்கம்

பிரசாதத்தை விஷமாக்கும் பைரவர்!

திருப்பத்தூரில் இருந்து 6 கி.மீ. தொலைவில் பெருச்சி எனும் ஊரில் அமைந்துள்ளது ஆண்ட பிள்ளை நாயனார் திருக்கோயில். இந்தக் கோயிலின் தனிச்சன்னிதியில் அருள்பாலிக்கும் நவபாஷாண கால பைரவருக்கு அணிவிக்கப்படும் வடைமாலை சற்று நேரத்தில் நீல நிறமாக மாறி விடுகிறது. இதை யாருக்கும் பிரசாதமாகத் தருவதில்லை. கோயிலுக்கு வெளியே வீசி விடுகிறார்கள். காகம் போன்ற பறவைகள் கூட இதைத் தொடுவதில்லை. வடைமாலை மட்டுமின்றி, சுண்டல் மாலை அணிவித்தாலும் விஷமாகி நீல நிறமாக மாறி விடுவது ஆச்சரியம். பொதுவாக, கோயில்களில் காட்சி தரும் பைரவர் தனது வாகனமான நாயுடன் காட்சி தருவார். ஆனால், மிகவும் பழைமையான இந்த கால பைரவர் தலையில் சுருள் சுருளான கேசத்துடன் இடது கையில் ஒரு கனியையும், வலது கையில் சூலாயுதத்தையும் ஏந்தி காட்சி தருகிறார். இந்த வித்தியாசமான காலபைரவரை தரிசித்துவிட்டுச் சென்றால், தடைப்பட்ட எந்தக் காரியமும் விரைவில் நிறைவேறிவிடுவது பக்தர்களின் அனுபவம். மேலும், இந்த பைரவருக்கு தீப ஆராதனை காட்டும்போது அதன் நிழல், பழநி முருகனின் தோற்றத்தைப் பிரதிபலிப்பது விசேஷம்.

– ஆர்.பிரசன்னா, திருச்சி

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com