கூம்பு லிங்க மூர்த்தியாய் பீமாசங்கரர்!

கூம்பு லிங்க மூர்த்தியாய் பீமாசங்கரர்!
Published on

– எ.எஸ்.கோவிந்தராஜன்

காராஷ்டிரா மாநிலம், புனே மாவட்ட சகியாத்திரி மலைத்தொடரில் பீமாசங்கர் என்னும் திருத்தலத்தில் அமைந்துள்ளது அருள்மிகு பீமாசங்கரர் ஆலயம். சுயம்பு மூர்த்தியாக அருளும் இத்தல சிவபெருமான் திருக்கோயில் பன்னிரு ஜோதிர்லிங்கங்களுள் ஒன்றாகத் திகழ்கிறது. மூலவர் பெருமான் கூம்பு வடிவில் அமைந்திருப்பது இத்தலத்தின் சிறப்பாகும். அதேபோல். இந்தக் கோயிலின் கோபுரமும் வாழைப்பூ போன்று கூம்பு வடிவில் மிக உயரமாகக் காட்சி தருகிறது. மிகவும் நுட்பமான அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன் இந்தக் கோயில் அமைந்துள்ளது.

இந்த ஆலய சிவலிங்கத்துக்கு நடைபெறும் அனைத்து பூஜைகளும் தரிசனங்களும் கவசமிட்டே நடைபெறுவது விசேஷம். தினசரி பகல் 12 மணிக்கு நடைபெறும் மகா பூஜையின்போது மட்டும் சில நிமிடங்கள் கவசம் இல்லாமல் மூலவப் பெருமான் பீமாசங்கரரை தரிசிக்கலாம்.

பொதுவாக, அனைத்து சிவாலயங்களிலும் கருவறையை நோக்கிக் காட்சி தரும் நந்தி பகவானை மட்டுமே தரிசித்திருப்போம். ஆனால், இந்த ஆலயத்தில் மூலவரை நோக்கி கடல் ஆமையும் வீற்றிருப்பதைக் காணலாம். பொறுமைக்கு உதாரணமாக ஆமையைக் குறிப்பிடுவார்கள். எந்தவொரு காரியத்திலும் அவசரமில்லாமல் பொறுமையாக இருக்க வேண்டும் என்பதை உணர்த்தவே கருவறை மூலவருக்கு முன்பு ஆமை அமைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

கோயிலின் முன் மண்டபம் மிகவும் விசாலமாக அமைந்துள்ளது. பூமியை ஒட்டி சிவலிங்க ஆவுடையார் வட்ட வடிவமாகவும், சுமார் ஒரு அடி உயரத்தில் சிவலிங்க பாணமும் காட்சி தருகிறது. கோயிலில் விநாயகர், கௌரி, இராமர், இலக்குமணர் ஆகிய பரிவார மூர்த்திகளையும் தரிசிக்கலாம். கருவறைக்கு வெளியே காலபைரவரும், நேர் எதிரே சனி பகவானும் தரிசனம் தருகின்றனர்.

கோயிலின் வலதுபுறம் பீமா நதி, சிறு ஓடை போல ஓடுகிறது. இந்த நீரை சிறு தொட்டியில் தேக்கி வைத்து பக்தர்கள் நீராடுகின்றனர். மேலும், இத்தலத்தில் மோட்ச குண்டம், சர்வ தீர்த்தம், குடசாரண்ய தீர்த்தம் ஆகியவையும் உள்ளன. பீமா நதியில் நீராடி இத்தல சிவபெருமானை வழிபட்டால் வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேறும் என்பது நம்பிக்கை. அதேபோல், கோயிலின் அருகே அமைந்துள்ள மோட்ச குண்டத்தில் நீராடி இறைவனை வழிபட்டால் மோட்ச கதி கிடைக்கும்.

வேண்டுதல் நிறைவேறியவர்கள் சுவாமிக்கு பாலபிஷேகம் செய்தும் வாசமுள்ள பூக்கள் மற்றும் வில்வத்தால் அர்ச்சனை செய்தும் வழிபடுகிறார்கள். அதேபோல். அம்பாளுக்கு வளையல், மஞ்சள், குங்குமம், ரவிக்கை துணி ஆகியவற்றை சாத்தியும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

பிரதி மாதம் சிவராத்திரி, பிரதோஷம் ஆகியவை மிகவும் விசேஷமாக இந்தக் கோயிலில் அனுசரிக்கப்படுகிறது.

அமைவிடம்: புனேவிலிருந்து சுமார் 110 கி.மீ. புனேயில் இருந்து பீமாசங்கருக்குச் செல்ல நிறைய பேருந்து வசதிகள் உள்ளன.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com