நலம் சேர்க்கும் நாக பஞ்சமி நன்னாள்!

நலம் சேர்க்கும் நாக பஞ்சமி நன்னாள்!
Published on

– கே.சூரியோதயன்

ச்யபருக்கு கத்ரூ என்பவளிடம் உண்டானவர் நாகர். தாய் சொல்லைக் கேட்காததால் தாயே அவனை தீயில் விழுந்து இறக்கும்படி சபித்தாள். அந்த சாபத்தால் பல பாம்புகள் தீயில் மாண்டன. ஜனமேஜயனின் சர்ப்ப யாகத்தை நிறுத்தி சாபத்தை அகற்றினார் அஸ்தீகர். அது நிகழ்ந்தது சிராவண சுக்ல பக்ஷ பஞ்சமி திதி அன்று. இத்தினத்தில் நாகத்தை பூஜித்தால் நன்மைகள் ஏற்படும். ஆகவே, இன்று பாம்புப் புற்றுக்குப் பால் ஊற்றி, பூஜை செய்வது விசேஷம்.

ஒரு வம்சத்தில் நல்ல குழந்தைகள் பிறக்கவும், தீய குணமுடைய குழந்தைகளை உண்டாக்கவும் சக்தி பெற்றவர் நாகராஜா. நல்ல ஸந்தான பிராப்தி உண்டாக நாகப் பிரதிஷ்டை செய்யச் சொல்கிறது சாஸ்திர விதி. அதனால்தான் தினசரி சந்தியா வந்தனத்தில், 'அபஸர்ப்ப ஸர்ப்ப பத்ரந்தோ' என்று சொல்லி பாம்புகளை பிரார்த்திக்கிறோம். அனந்தன் என்ற பாம்பாக இருந்து கொண்டு பூமியைத் தாங்கி வருகிறார் மஹாவிஷ்ணு. அவருக்கு உதவியாக தக்ஷன், வாஸுகி, கார்கோடன் என்ற பாம்புகளும் உள்ளன.

யலில் வேலை செய்து கொண்டு இருந்த ஒரு பெண்மணியின் நான்கு சகோதரர்களை ஸர்ப்பம் தீண்டியது. அந்தப் பெண்மணி ஸர்ப்ப பூஜை செய்து பிரார்த்தித்து தனது நான்கு சகோதரர்களைக் காப்பாற்றினாள் என்கிறது ஒரு புராணக் கதை. அப்படி அந்தப் பெண் ஸர்ப்ப பூஜை செய்தது ஒரு நாக பஞ்சமி தினம். ஆகவே, இன்று சகோதரிகள் தனது உடன் பிறந்த சகோதரர்களின் நன்மைக்காக வீட்டில் ஏதாவது ஒரு உலோகத்தில் செய்த பாம்பு பிம்பத்தையும், நடுவில் புஷ்பம் கட்டிய ஒரு மஞ்சள் சரட்டையும் பூஜை செய்து தனது வலது கையில் கட்டிக்கொள்ள வேண்டும். வீட்டில் பூஜை முடிந்த பிறகு அருகில் உள்ள பாம்புப் புற்றுக்குப் பால் விட்டு தாம்பூலம், பழம் வைத்து நிவேதனம் செய்து கற்பூரம் ஏற்றி வழிபட வேண்டும். புற்றுக்கு சென்று பால் விட்டு வர வசதி இல்லாதவர்கள் நாக பிம்பத்திற்கே பாலபிஷேகம் செய்தும் வழிபடலாம்.

வீட்டிற்கு வந்ததும் வாயிற்படியின் இரு பக்கங்களிலும் மஞ்சள் பூசி, குங்குமத்தால் மேலே வால், கீழே தலை உள்ளபடி பாம்பு படம் வரைந்து கற்பூரம் ஏற்றி நமஸ்கரித்து விட்டு உள்ளே செல்ல வேண்டும்.

பாம்புப் புற்றின் மண் எடுத்து வந்து, அத்துடன் சிறிது அக்ஷதை சேர்த்து சகோதரரிடம் கொடுப்பதோடு, அவர் வயதில் மூத்தவராக இருந்தால் நமஸ்காரம் செய்யலாம். சிறியவராக இருந்தால் ஆசீர்வாதம் பெறலாம். சகோதரர்களும் தங்களது சக்திக்கு ஏற்றபடி சகோதரிகளுக்கு ஏதாவது பொருளை அன்று அன்பளிப்பாக தாம்பூலத்துடன் கொடுக்க வேண்டும். சகோதரர்கள் வெளியூரில் இருந்தால் தபாலில் கூட அனுப்பலாம்.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com