பூரத்தில் உதித்த புகழ்க்கொடி!

பூரத்தில் உதித்த புகழ்க்கொடி!
Published on

– ரேவதி பாலு

தென்பாண்டி நாட்டில் வில்லிபுத்தூரில் விஷ்ணு சித்தர் என்பவர் இருந்தார்.  திருமாலிடத்தில் மிகுந்த பக்தி கொண்ட பக்திமான் ஆதலால், பெரியாழ்வார் என்று இவர் அழைக்கப்பட்டார். ஸ்ரீவில்லிபுத்தூர் வடபத்ரசாயி என்று அழைக்கப்படும் பெருமாளுக்கு மலர் கைங்கர்யம் ஆற்றுவது இவரது திருப்பணி. தன் வீட்டில் ஒரு நந்தவனம் அமைத்து, அதில் பூக்கும் மலர்களை பூமாலையாகத் தொடுத்து தனது பாமாலைகளுடன் அவற்றைப் பெருமாளுக்கு தினமும் சமர்ப்பித்து வந்தார்.

ஒரு ஆடி மாத பூர நட்சத்திரன்று அவர் துளசி தளங்களைப் பறித்துக் கொண்டிருந்தபோது செடியின் அடியில் ஒரு பச்சிளங் குழந்தை இருப்பதைப் பார்த்து திகைத்துப் போனார். இதுவும் பெருமாளின் லீலையே என்றெண்ணி அந்தக் குழந்தையை அன்போடு தூக்கியபோது, அது அவரைப் பார்த்து மலர்ந்து சிரித்தது.  பூமியிலிருந்து கிடைத்த குழந்தையாதலால் அவள் பூமி பிராட்டியின் அவதாரமே என்று நினைத்து குழந்தையை உச்சி முகர்ந்து கோதை எனப் பெயரிட்டு தனது மகளாகவே வளர்க்க ஆரம்பித்தார்.

பூமிப் பிராட்டியின் அவதாரமாய்ப் பிறந்த கோதையை சீராட்டி, பாராட்டி, கண்ணும் கருத்துமாய் வளர்க்கும் ஒப்பற்ற பேறு பெற்றவர் விஷ்ணு சித்தர். இளம் வயதிலேயே சமயம், தமிழ் என்று தனக்குத் தெரிந்த அனைத்தையுமே கோதைக்குச் சொல்லிக் கொடுத்தார். இப்படியாக சிறு வயது முதலே தம் தந்தையாரான பெரியாழ்வாரிடம் இருந்து கவிச் சிறப்பையும், பக்திச் சிறப்பையும் கோதை கற்றுத் தேர்ந்தாள். இதனால் கோதை இளம் வயதிலேயே கண்ணன் மீது மிகுந்த பக்தியுணர்வு கொண்டவராயும், தமிழில் நன்கு கவி பாடும் திறமை கொண்டவராகவும் இருந்தாள்.

னுதினமும் அரங்கனுக்காக புத்தம் புதிய நறுமணம் கமழும் மலர்களால் ஆன பெரிய மாலைகளைத் தொடுத்து கோயிலில் கொண்டுபோய் பெருமாளுக்குச் சமர்ப்பிப்பதை தன்னுடைய பிரதான கைங்கரியமாகக் கொண்டிருந்தார் பெரியாழ்வார். அவ்வாறு மலர்களைப் பறிக்கும்போதும் மாலைகளைத் தொடுக்கும்போதும் பெருமாளுக்குரிய மலர்களின் நறுமணத்தை தன்னையறியாமல் தாம் நுகர்ந்து விடுவோமோ எனும் அச்சம் அவருக்கு ஏற்படுமாம். அதனால் தனது மூக்கைச் சுற்றி ஒரு துணியைக் கட்டிக் கொண்டு பூக்களைக் கொய்து மாலையாகக் கட்டுவாராம்.

அவ்வளவு தூய்மையாக அரங்கனின் சேவையில் ஈடுபட்டிருந்த பெரியாழ்வாரின் வாழ்க்கையில் ஒரு சோதனை ஏற்படுகிறது. தனது அன்பு மகள் கோதைக்கு அரங்கனைப் பற்றிய கதைகளை பெரியாழ்வார் தினமும் கூறுவது வழக்கம்.  அக்கதைகளைக் கேட்டு, அவள் வளர வளர கண்ணன் மேல் கொண்ட பக்தியும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளரத் தொடங்கியது.  பெருமாளின் மேல் கொண்ட அன்பு கோதையை முழுமையாக ஆக்ரமித்தது. அது, சாதாரண மானிடர் போல உடலால், உணர்ச்சியால் அல்லாது, ஞானம், வைராக்கியம், பக்தி போன்றவற்றால் நன்கு முதிர்ந்து வளர்ந்து வந்தது.

அழகுத் தமிழால் அரங்கனை ஆண்டதால், 'ஆண்டாள்' என்ற சிறப்புப் பெயரைப் பெற்றாள் கோதை. கிருஷ்ணனின் சிறு வயது லீலைகளைப் பற்றி பெரியாழ்வார் கதைகளாகச் சொன்னது அவளுடைய உள்ளத்தில் ஆழப் பதிந்து விட்டது.   எந்நேரமும் குழந்தை கிருஷ்ணனுடன் தான் விளையாடுவது போல ஒரு பிரமையிலேயே அவள் சிறு பிராயம் கழிந்தது. கண்ணனின் பெருமைகளையே எப்போதும் துதித்து துதித்து, எப்போதும் அவன் நினைவிலேயே வாழ்ந்ததால், அவனையே மணம் முடிக்க எண்ணம் கொண்டாள். நாட்கள் செல்லச் செல்ல தன்னை கண்ணனின் மணப்பெண்ணாகவே பாவனை செய்து கொண்டு வாழ ஆரம்பித்தாள். பெரியாழ்வார் கட்டி வைத்த மாலைகளையே கண்கொட்டாமல் பார்த்து வந்த கோதைக்கு இந்தப் பூவை சூடிக்கொள்ளும் அரங்கன் எப்படி கம்பீரமாக, அழகாகத் தோற்றமளிப்பான் என்கிற எண்ணம் வந்தது. தன்னையே அந்த அரங்கனாக பாவித்துக் கொண்டு பெருமாளுக்கு அணிவிப்பதற்காக பெரியாழ்வார் தொடுத்து வைத்திருக்கும் மாலைகளை ஒவ்வொரு நாளும் அவருக்குத் தெரியாமல் தான் அணிந்து அழகு பார்ப்பாள். பிறகு மிக்க மன மகிழ்வோடு திரும்பவும் பெரியாழ்வார் மாலைகளை வைக்கும் இடத்தில் கொண்டு போய் வைத்து விடுவாள். இதனால் கோதை சூடிக்கொண்டு அழகு பார்த்த மாலைகளே தினமும் கோயிலில் இறைவனுக்கு சூட்டப்பட்டன. இந்த காரியம் வெகு நாட்களாக நடந்து கொண்டிருந்தது.

ரு நாள் கோயில் அர்ச்சகர் பெரியாழ்வார் கொண்டு வந்த பூமாலையை பெருமாளுக்கு அணிவிக்க எடுத்தபோது, அதில் ஒரு நீண்ட முடி இருப்பதைக் கண்டவர், அதைத் தூக்கி எறிந்து விட்டு வேறு மாலை கொண்டு வரும்படி பெரியாழ்வாரிடம் கூறினார். பெரியாழ்வார் மனம் பதைத்துப் போனார். தான் வெகு நாட்களாக செய்து கொண்டிருக்கும் பகவத் சேவையில் இப்படி ஒரு பிழை நேர்ந்து விட்டதே என்று எண்ணி மனம் கலங்கினார்.

அடுத்த நாள் பெரியாழ்வார் மிகுந்த கவனத்துடன் மாலை தொடுத்து வைத்து விட்டு கோயிலுக்குக் கிளம்ப யத்தனித்தபோது, ஆண்டாள் அந்த மாலையை அணிவதைப் பார்த்து விட்டார். மிகுந்த கோபத்துடன் ஆண்டாளைக் கண்டித்தார். இதை எப்படி இத்தனை நாட்கள் தான் கவனியாமல் விட்டு விட்டோம் என்றெல்லாம் எண்ணி மீளா துயரத்திற்கு ஆளானார். அன்றும் பெருமாள் சேவைக்கு மாலை கொடுக்க அவரால் இயலவில்லை.

மிகுந்த மன வருத்தத்துடன் அன்று இரவு உறங்கப்போனார். அவரது கனவில் அரங்கன் தோன்றி, இரண்டு நாட்களாக ஏன் தனக்கு மாலை கொணரவில்லையென வினவினான். பெரியாழ்வாரும் தனது செல்ல மகள் செய்த காரியத்தை மிகுந்த துயரத்துடனும் மன வருத்தத்துடனும் அரங்கனிடம் பகிர்ந்து கொண்டார்.

அதைக் கேட்ட அரங்கன், "நீர் அளிக்கும் மாலைகளைக் காட்டிலும் உம் மகள் ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலைகளே எனக்கு உவப்பானது!" என்று சொல்லி அரங்கன் அவரைத் தேற்றி கோதை நாச்சியாரின் பிறப்பின் பெருமையையும் அவருக்குப் புரிய வைத்தான்.

காலை கண் விழித்த பெரியாழ்வாருக்கு கனவு நினைவுக்கு வர, உண்மை நிதர்சனமாகப் புரிந்தது. அன்று தான் தொடுத்த மாலைகளை ஆண்டாளுக்குக் கொடுத்து அணியச் சொன்னார். பின்னர் அதை அரங்கனுக்கு சாத்த கோயிலுக்கு விரைந்தார். அரங்கனுக்குரிய மாலையை தான் சூடிக் கொடுத்த செயலால் ஆண்டாள், 'சூடிக்கொடுத்த சுடர்க்கொடி' என்று சிறப்பித்து அழைக்கப்பட்டாள்.

ஆண்டாளுக்கு மண வயது வந்தது. 'மானிடவர்க்கென்று பேச்சுப்படில் வாழகில்லேன் கண்டாய்…' என்று உரைத்து தனது மணவாளன் அரங்கனே என்று தந்தைக்கு உணர்த்தினாள். மார்கழி மாதம் முப்பது நாளும் பாவை நோன்பு நோற்று திருப்பாவை பாடிச் சிறப்பித்த ஆண்டாளுக்கு தனது மணவாளனை என்று, எவ்வாறு அடைவோம் என்ற சிந்தனையே மனதை வாட்டிக் கொண்டிருந்தது.

அவளது மன வாட்டத்தைப் போக்கும் விதமாக அரங்கனே அவள் கனவில் தோன்றி, அவளது திருமணம் ஸ்ரீரங்கம் கோயிலில் அரங்கனுடன் எவ்வாறு சீரோடும் சிறப்போடும் நடைபெறும் என்று உணர்த்துகிறார். அவ்வாறே ஒரு பங்குனி உத்திர திருநாளன்று சூடிக்கொடுத்த சுடர்க்கொடி ஆண்டாள் நாச்சியாருக்கும் அரங்கநாதப் பெருமாளுக்கும் திருமண ஏற்பாடுகள் நடைபெற, ஆண்டாள் நேரே சன்னிதிக்குச் சென்று அரங்கனோடு கலந்து விடுகிறாள்.

'திருவாடிப் பூரத்தில் செகத்துதித்தாள் வாழியே
திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே
பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை வாழியே
பெரும்புதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே
ஒரு நூற்று நாற்பத்து மூன்றுரைத்தாள் வாழியே
உயர் அரங்கர்க்கே கண்ணி உகந்தளித்தாள் வாழியே
மருவாரும் திருவல்லி வள நாடி வாழியே
வண்புதுவை நகர்க்கோதை மலர்ப்பதங்கள் வாழியே'

என்று ஆண்டாள் நாச்சியாரை வாழ்த்தி வணங்குகிறது வைணவ சமயம். அனைத்துப் பெருமாள் கோயில்களிலும் சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாம் ஆண்டாள் நாச்சியாருக்குத் தனிச் சன்னிதி உண்டு என்பது இவருக்கு அளிக்கப்படும் தனிப் பெருமையாகும். பன்னிரண்டு ஆழ்வார்களில் ஸ்ரீ ஆண்டாள் ஒருவரே பெண் ஆழ்வார் ஆவார். கோதை நாச்சியாரின் திருநட்சத்திரமான ஆடிப்பூரம் இந்த வருடம் ஆகஸ்ட் மாதம் முதல் தேதியன்று கடைபிடிக்கப்படுகிறது.

சூடிக்கொடுத்த சுடர்க்கொடி சூடிய பூமாலைகளைப் போலவே, அவர் திருநாவால் பாடிக்கொடுத்த பாமாலைகளும் புகழ் பெற்றவை. அவர் இயற்றிய திருப்பாவை, நாச்சியார் திருமொழி என்பவை தேனினும் இனிய பாமாலைகளாகத் திகழ்கின்றன. ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் அவதரித்த ஆடி பூரம் திருநாளில், பூமித்தாய் அம்சமான திருமகளைப் போற்றித் துதித்து நலம் பெறுவோம்.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com