
– கோ.காந்திமதி
ஆடி மாதம் வளர்பிறையில் வரும் சப்தமி திதிக்கு சீதளா சப்தமி என்று பெயர். இந்த நாளில் விரதமிருந்து அம்பிகையை சீதளா தேவியாக பூஜிக்க வேண்டும். அம்மனின் பல உருவங்களில் சீதளா தேவி வடிவமும் ஒன்று. 'சீதளம்' எனும் சொல்லுக்கு குளிர்ச்சி எனப் பொருள். வெப்பு நோய்களான அம்மைக் கட்டி போன்றவை உடலைத் தாக்காமல் காத்து, குளிர்மையூட்டுபவள் சீதளா தேவி.
இவளே அம்மை உள்ளிட்ட நோய்களை ஏற்படுத்துபவளாகவும், அதை குணப்படுத்தபவளாகவும் நாடெங்கும் வழிபடப்படுகிறாள்.
ஜுவராசுரனால் தேவர்களுக்கு உண்டான வெப்ப நோயைக் குணப்படுத்த சிவபெருமான் மற்றும் கங்கையிடமிருந்து வெளிப்பட்டவள் சீதளா தேவி என்று புராணம் சொல்கிறது. தென்னகத்தைப் பொறுத்தவரை இது பரசுராமன் மற்றும் ரேணுகா தேவி சரிதத்தோடு தொடர்புடையதாகக் கூறப்படுகிறது. கார்த்தவீரியனின் புதல்வர்கள் ஜமதக்னி ரிஷியைக் கொன்றதும், அவரது பத்னி ரேணுகை தீயில் புகுந்தாள். அச்சமயம் மழை பெய்து தீ அணைந்ததால் மேனியில் கொப்புளங்களோடு அவள் வெளிப்பட்டாள். தீயின் எரிச்சல் நீங்க வேப்பிலையை ஆடையாகத் தரித்தாள். ரேணுகாவின் கற்பு மாண்பினை மேன்மைப்படுத்த சிவபிரானின் திருவுளப்படி ரேணுகா தேவியே மாரியம்மனாக, வெப்பு நோயை நீக்குபவளாக விளங்குகிறாள் என்றும் சொல்லப்படுகிறது.
வடநாட்டில் சீதளா தேவிக்கு கழுதையே வாகனமாகவும், துடைப்பம் ஆயுதமாகவும் விளங்குகிறது. அம்பிகையின் இடக்கரத்தில் உள்ள குடத்தில் நீர் மற்றும் வேப்பிலை வைத்திருப்பதாக ஐதீகம். காத்யாயினி தேவியே சீதளாவாக உருக்கொண்டாள் என்றும் ஒரு புராணம் சொல்கிறது. இப்படிப் புராணக் கதைகள் வெவ்வேறாக இருப்பினும், அம்பிகை வெப்பு நோயைத் தணிப்பவள், பக்தர்களிடம் பேரன்பு கொண்டு குளிர்ந்து அருள்பவள் என்பதே பொதுவான கருத்தாக உள்ளது. சீதளா தேவியின் திருவருளைப் பெற உகந்த தினம். ஆடி வளர்பிறை சப்தமி நாளாகும்.
இன்று காலை நித்ய கர்மாவை முடித்துவிட்டு, ஒரு இலையில் தயிர் சாதம், மாம்பழம், இளநீர், வெள்ளரிக்காய் ஆகியவற்றை சீதளா தேவிக்கு நைவேத்யம் செய்து, வாசமிகு மருக்கொழுந்து, மாசிப்பச்சை போன்றவற்றால் அர்ச்சிக்கலாம். முடியாதவர்கள் அம்பிகையை வேப்பிலையாலும் அர்ச்சிக்கலாம். பூஜையின்போது,
'மம புத்ர பெளத்ராதி அபிவ்ருத்தி த்வாரா
ஸபரிவார சீதளாதேவி ப்ரீத்யர்த்தம்
சிராவண சுக்ல ஸப்தமி புண்ய காலே
இதம் ஆம்ர பலம், கர்கடீ பல ஸஹித தத்யோதனம்
சீதளா தேவி ப்ரீத்யர்த்தம் தானம் அஹம் கரிஷ்யே'
எனும் சுலோகத்தைச் சொல்லி வழிபட்டு, அதை ஏழை ஒருவருக்கு தானம் செய்துவிட வேண்டும். பூஜை செய்ய முடியாதவர்கள் மேற்சொன்னவற்றை ஏழை, எளியோருக்கு தானமாகக் கொடுப்பதும்கூட புண்ணியப் பலனைப் பெற்றுத் தரும். அதேபோல், வீட்டில் வழிபட முடியாதவர்கள் அம்மன் கோயிலுக்குச் சென்றும் வழிபடலாம்.
இதனால் நீண்ட நாட்களாக உடலை வருத்தும் நோய்கள் விரைவில் குணமாகும். குறிப்பாக, அதிக வெப்பத்தால் ஏற்படும் கட்டிகள், அம்மை, வைசூரி முதலான நோய்கள் குணமாவதோடு, மீண்டும் இதுபோன்ற நோய்கள் அந்தக் குடும்பத்தில் யாருக்கும் வராது என்கிறது ஸ்காந்த புராணம்.