இறை வழிபாட்டில் மாலைகள் தெய்வீக ஆற்றலைக் கொண்டு வருவதாகவும், தூய்மையான சூழலை உருவாக்குவதாகவும், பக்தியின் வெளிப்பாடாகவும் கருதப்படுகின்றது. ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒரு குறிப்பிட்ட வகை மாலைகள் சாற்றப்படுகின்றன.
பைரவருக்கு ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்திலோ, வளர்பிறை அல்லது தேய்பிறை அஷ்டமியிலோ முந்திரிப் பருப்பு கொண்டு மாலை அணிவிப்பது கடன் தொல்லை, எதிரிகள் தொல்லை, திருமணத் தடைகள் நீங்கவும், குழந்தை பாக்கியம் பெறவும் உதவும்.
விநாயகருக்கு எருக்கம் பூ மாலை சாத்துவது மிகவும் விசேஷம். அதிலும் குறிப்பாக வெள்ளெருக்கம்பூ மாலை அணிவிப்பதன் மூலம் தடைகள் நீங்கும், ஆரோக்கியம் பெருகும், எதிர்மறை சக்திகள் விலகும். மாதந்தோறும் வரும் வளர்பிறை மற்றும் தேய்பிறை சதுர்த்தி நாட்களில் எருக்கம்பூ மாலை சாற்றி வழிபடுவது சிறப்பான பலன்களைத் தரும்.
விநாயகர் சதுர்த்தி போன்ற சிறப்பு தினங்களில் மட்டுமின்றி புதன்கிழமைகளிலும் விநாயகரை அருகம்புல் மாலை சாற்றி வழிபடுவது வாழ்வில் சுபிட்சம், அமைதி மற்றும் எல்லா துறைகளிலும் வெற்றி கிடைக்கும். அருகம்புல் ஆன்மீக சக்தி வாய்ந்தது என்றும், இதை மாலையாக சாற்றுவதன் மூலம் சகல செல்வங்களையும் பெற முடியும் என்றும் கூறப்படுகிறது.
விநாயகருக்குச் சுண்டைக்காய் மாலை அணிவிப்பது, உடலில் உள்ள தீய சக்திகளை நீக்குவதாகவும், மன அமைதியைத் தருவதாகவும் நம்பப்படுகிறது. இந்த மாலை, ஆன்மீக ரீதியான நன்மைகளை வழங்குவதோடு, குரல் வளம் சிறக்கவும், சளித்தொல்லை நீங்கவும் உதவுவதாகக் கருதப்படுகிறது.
அம்மனுக்கு எலுமிச்சம் பழ மாலை சாற்றுவது குடும்ப ஒற்றுமை, குழந்தை பாக்கியம் மற்றும் நினைத்த காரியங்கள் நிறைவேற உதவுகிறது. குறிப்பாக மாரியம்மன், காளி, நரசிம்மர், பைரவர் மற்றும் விநாயகர் போன்ற தெய்வங்களுக்கு எலுமிச்சம்பழ மாலை உகந்தது. மேலும் ஆடி, தை போன்ற மாதங்களில் அம்மனுக்கு எலுமிச்சம்பழ மாலை சாற்றி வழிபடுவது கஷ்டங்கள் தீரவும், குடும்பத்தில் அமைதி நிலவும் உதவும்.
ஆடிப்பூர தினத்தன்று அம்மனுக்கு வளையல் மாலை அணிவித்து வழிபாடு செய்வது வழக்கம். இது மிகவும் விசேஷமாக சொல்லப்படுகிறது. அம்மனுக்கு வளையல் மாலை அணிவிப்பது குடும்பத்தில் மங்களங்கள் பெருகும் என்றும், வீட்டில் சுபிட்சம் நிறைந்திருக்கும் என்றும் நம்பப்படுகிறது. வளையல்களை ஒன்றன்பின் ஒன்றாக கோர்த்து மாலை போல செய்து அருகில் உள்ள அம்மன் ஆலயங்களில் ஆடி வெள்ளி, ஆடிச் செவ்வாய் கிழமைகளில் சாத்துவது சிறப்பு.
துளசிச் செடியில் தேவர்கள், சூரியன், அஸ்வினி தேவர் போன்றோர் வாசம் செய்வதாக புராணம் கூறுகிறது. இத்தகைய பெருமையும், சாந்நித்தியமும் நிறைந்த துளசியை மாலையாகக் கட்டி பெருமாளுக்கு அணிவிப்பதால் அவருடைய அருள் கிடைக்கும். பெருமாளுக்கு துளசி இல்லாத எந்த பூஜையும் நிறைவடையாது என்பது ஐதீகம். பெருமாளுக்கு மிகவும் உகந்ததாகவும், புனிதமானதாகவும் கருதப்படும் துளசி மாலை அனுமனுக்கும் சாற்றி வழிபடுவது வழக்கம்.
கிராம்புகளைக் கொண்டு கோர்க்கப்படும் இந்த மாலை ஆன்மீக ரீதியாகவும், மன கஷ்டங்களை தீர்க்கவும் பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக லட்சுமி நரசிம்மர் போன்ற தெய்வங்களுக்கு கிராம்பு மற்றும் மஞ்சள் மாலைகள் கட்டி அணிவித்து வழிபடுவது ஐஸ்வர்யம் நிலைக்க உதவும் என்ற நம்பிக்கையில் செய்யப்படுகிறது. வேண்டுதல்கள் நிறைவேறவும், கஷ்டங்கள் விலகவும், நிலையான செல்வம் பெருகுவதற்கும் இந்த மாலை தெய்வங்களுக்கு அணிவிக்கப்படுகிறது.
எடுத்த காரியங்கள் நிறைவேறவும், வெற்றியடையவும், வேண்டுதல்கள் நிறைவேறவும் வெற்றிலைகளை ஒன்றன்பின் ஒன்றாகக் கட்டி மாலையாகச் செய்து அனுமனுக்கு சாற்றுவது வழக்கம். ராமாயணத்தின் படி அசோகவனத்தில் சிறை வைக்கப்பட்டிருந்த சீதையைத் தேடிச் சென்ற அனுமனுக்கு சீதை தன் கையால் வெற்றிலை மாலையை அணிவிக்க, அனுமன் மகிழ்ந்ததாகவும் அதனாலேயே இந்த வழக்கம் வந்ததாகவும் கூறப்படுகிறது.
ஏலக்காய்களை கோர்த்து செய்யப்படும் இந்த மாலை தெய்வங்களுக்கு காணிக்கையாகவும், பூஜை அறையில் நேர்மறையான அதிர்வுகளை உருவாக்கவும் பயன்படுகிறது. ஏலக்காயின் இயற்கையான நறுமணம் பூஜை அறைக்கு நல்ல அதிர்வுகளையும், நேர்மறையான சூழலையும் அளிக்கும். குறிப்பாக ஹயக்ரீவருக்கும், மகாலட்சுமிக்கும் நினைத்த காரியங்கள் நிறைவேற இந்த மாலை அணிவிக்கப்படுகிறது.