

கதை 1: யார் கடவுள்?
ஊருக்கு நடுவே பிள்ளையார் சிலை ஒன்று இருந்தது. அவ்வழியே போன அனைவரும் அவரை கும்பிட்டபடி சென்றனர்.
அதைப் பார்த்துக் கொண்டிருந்த நாத்திகன் ஒருவன், "கல்லைப் போய் வணங்குகிறீர்களே... என்னையும், பிள்ளையாரையும் ஆற்றில் தூக்கிப் போடுங்கள்.. யார் கரையேறி வருகிறோமோ அவரையே தெய்வமாக வணங்குங்கள்..." என்றான் ஆணவத்துடன்.
கூட்டத்தினர் திகைத்து நின்றனர். அப்போது அந்த பக்கமாக வந்த துறவி ஒருவர், "ஐயா..! நீர் கூறியபடி செய்யும் முன், வேறொரு காரியம் செய்வோம். உம்மைத் தூக்கி கணபதியின் மீது வீசுவோம். பிறகு எங்கள் கணபதியை தூக்கி உங்கள் மீது வீசுவோம். யார் பிழைத்திருக்கிறாரோ அவரைக் கொண்டு பின்னர் முடிவு செய்வோம்.." என்றார்.
நாத்திகன் மெல்ல அங்கிருந்து நழுவிச் சென்றான்.
கதை 2: தவளையின் தாவல்!
இரண்டு தவளைகள் பால் நிரம்பிய பாத்திரத்தில் தவறி விழுந்து விட்டன. பாத்திரத்தை விட்டு வெளியே வருவதற்கு அவற்றிற்கு வழி தெரியவில்லை.
முதல் தவளை, "என் ஆயுள் முடிந்தது.. நான் சாகப் போகிறேன்.." என்று புலம்பியது. அதன் கால்கள் ஆற்றல் இழந்தன. அது பாலில் மூழ்கி இறந்தது.
இரண்டாவது தவளையோ, "இதிலிருந்து எப்படியாவது தப்புவேன்.. கடைசி மூச்சு வரை முயன்று பார்ப்பேன்.." என்று நினைத்துக் கொண்டே சோர்வே இல்லாமல், கால்களால் உதைத்துக் கொண்டே இருந்தது.
இதனால் பால் நன்றாக கடையப்பட்டு, இறுதியில் வெண்ணெய் திரண்டு மேலே வந்தது. மிதந்த வெண்ணையின் மீது அமர்ந்த தவளை, ஒரே தாவலில் பாத்திரத்தில் இருந்து குதித்து தப்பியது.
முயற்சி பலன் தரும் என்பது இக்கதை மூலம் உறுதி ஆனது.