
கோவில்கள் நிறைந்த மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. கடன் நிவர்த்தி, சொந்த வீடு கனவு, செல்வ செழிப்பு மற்றும் குபேர யோகத்தை வழங்கும் 5 சக்தி வாய்ந்த ஆலயங்கள் குறித்து இப்பதிவில் காண்போம்.
நாகப்பட்டினம் மாவட்டம், திருக்கண்ணபுரம் சவுரிராஜ பெருமாள் கோவில் மகாவிஷ்ணுவின் அபூர்வமான தலங்களில் ஒன்றாகும். பெருமாள் தனது இதயத்தில் மகாலட்சுமியை சுமந்து கொண்டிருக்கும் இத்தலத்தில் தீராத கடன் சுமைகள் நீங்கி, செல்வம் பெருக வேண்டிக்கொண்டால் நினைத்தது நிறைவேறும். இத்தலத்தில் பெருமாள் மற்ற கோவில்களை போல பக்தர்களுக்கு ஆசி வழங்கும் நிலையில் இல்லாமல் கையேந்தி தானம் பெறும் நிலையில் காட்சியளிப்பதால் வேண்டுபவர்களின் கஷ்டங்கள் மற்றும் தரித்திரங்களை பெருமான் வாங்கிக்கொண்டு செல்வத்தை தருவார் என்பது நம்பிக்கை.
ராணிப்பேட்டை மாவட்டம், திருப்பாற்கடல் என்ற கிராமத்தில் ஆதிசேஷன் மீது பள்ளிகொண்ட கோலத்தில் காட்சியளிக்கும் பிரசன்ன வெங்கடேச பெருமாளை இத்தலத்தில் தரிசிப்பது நேரடியாக வைகுண்ட பெருமாளை தரிசிப்பதற்கு சமம். இங்கு பெருமாள் சிவபெருமானின் ஆவுடையார் மீது நின்ற கோலத்தில் காட்சி தருவதால் ராஜயோகம் தரவல்லது. 'திருவோண நட்சத்திர தோஷங்களை' நீக்கி ராஜ யோகத்தை வழங்கும் இந்த தலத்தில் சைவ வைணவ ஒற்றுமை பறைசாற்றப்படுகிறது. இங்கு அத்திப்பழத்தை தானமாக வழங்கினால் தீராத நோய்கள் நீங்கி அவர்களது வீடுகளில் மகாலட்சுமி வாசம் செய்வாள்.
கும்பகோணத்திற்கு அருகில் உள்ள இந்தத் தலத்தில் உள்ள 'ரிண விமோசன லிங்கேஸ்வரர்' சன்னதியில் தொடர்ந்து 11 திங்கட்கிழமைகள் இங்குள்ள ஞான தீர்த்தத்தில் நீராடி ஈசனை வழிபட்டால் தீராத கடன் தொல்லை தீர்ந்து, செல்வம் தேடி வரும் என்பது ஐதீகம். ஆகவே இங்குள்ள சிவபெருமான் 'ரிண விமோசனேஸ்வரர்' (கடன் தீர்ப்பவர்) என்று அழைக்கப்படுகிறார். மேலும் சிவ துர்க்கை, விஷ்ணு துர்க்கை, வைஷ்ணவி துர்க்கை என்ற மூன்று துர்கைகள் இக்கோவிலில் ஒரே இடத்தில் அருள்பாலிப்பது மிகவும் விசேஷமாகும்.
ஸ்ரீ சக்கரத்தின் அம்சமாக காஞ்சிபுரத்தில் தவக்கோலத்தில் இருக்கும் காமாட்சியம்மன் திகழ்கிறாள். இங்குள்ள 'அர்த்தமேரு' சக்கரத்திற்கு பூஜை செய்வது சகல ஐஸ்வர்யங்களையும் வழங்கும். ஆதிசங்கரர் இங்கு வந்து அர்த்தமேரு என்ற ஸ்ரீ சக்கரத்தை பிரதிஷ்டை செய்ததால் சிலைக்கு பதில் இந்த சக்கரத்திற்கே முக்கிய பூஜைகள் செய்யப்படுகின்றன. வாரத்திற்கு இரண்டு எலுமிச்சை பழங்களை வைத்து தொடர்ந்து ஆறு வாரங்கள் வழிபட்டால் நினைத்த காரியம் கைகூடி செல்வம் பெருகி சொந்த வீடும் நிலமும் கிடைப்பதோடு, அம்பானி போன்ற பெரும் செல்வந்தர்கள் பூஜித்து வரும் தலமாகவும் இது இருக்கிறது.
சிறுவாபுரி முருகனை நினைத்தாலே சொந்த வீடு நிச்சயம். 'சொந்த வீடு தரும் வேலவனை' ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்கள் மற்றும் சொந்த வீடு கனவு காண்பவர்கள் 6 செவ்வாய்க்கிழமைகளில் வந்து நெய் தீபம் ஏற்றி வழிபட நினைத்ததை நினைத்தபடி அருளுவார் என்பது நம்பிக்கை. ராமரின் புதல்வர்களான லவனும் குசனும் இங்கு போர் புரிந்ததாக கூறப்படும் நிலையில் இங்கு வந்து வழிபட மனதிற்கு தெளிவும் வழிகளையும் காட்டும் சக்தி கிடைப்பதாக பக்தர்கள் கூறுகிறார்கள் .
மேற்கூறிய ஐந்து தலங்களை தரிசனம் செய்து செல்வ செழிப்போடு ராஜயோக வாழ்வு கிடைக்க பெற்று மன நிம்மதியாக வாழுங்கள்.