காசியை வழிபட்ட புண்ணியம் தரும் கடைமுடி!

காசியை வழிபட்ட புண்ணியம் தரும் கடைமுடி!

லகோர்க்கெல்லாம் சோறு படைக்கும் சோழவளநாட்டின் காவிரிக்கரைகளில் அருள் பரப்பும் பதிகள் பல உண்டு. அவற்றுள் காவிரியின் வடகரையில் அமையப்பெற்ற 63 தேவாரத் திருத்தலங்களுள் 18வது தலமாக அருள் பரப்புகின்றது திருக்கடைமுடி. நாகை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகாவில் உள்ள இத்தலம் தற்போது, ‘கீழையூர்‘ என்று அழைக்கப்படுகின்றது.

ஏழு ஊர்கள் சேர்ந்த மிகப்பெரிய ஊராதலால், ‘ஏழூர்‘ என்றும் இதை அழைப்பதுண்டு. கிளுவை மரங்கள் நிறைந்த இந்தப் பகுதி கிளுவையூர் என்றிருந்து, காலப்போக்கில் கீழையூர் ஆனது. காவிரி இங்கு மேற்கு முகமாகப் பாய்வது சிறப்பாகும். ’ஹர ஹர’ என்றாலே பாவங்கள் அனைத்தும் தொலையும். அதுவும் அந்திமக்காலத்தில் சொன்னால் வீடு பேறு உறுதியல்லவா? அப்படி அந்திமக்காலத்தில் அருள் வழங்கும் அற்புதனாக விளங்குகின்றார் இத்தலத்து இறைவன் கடைமுடிநாதர். இத்தலப் பெருமானை பிரம்மாவும், கண்வ மகரிஷியும் பூஜித்து அருள் பெற்றுள்ளனர். திருஞானசம்பந்தர் இத்தலத்துக்கு ஒரு பதிகம் அருளிச் செய்துள்ளார். அப்பர் தனது க்ஷேத்திரக்கோவையில் இத்தலம் பற்றி குறிப்பிட்டுள்ளார்.

மேற்கு நோக்கி அருள் பரப்பும் இந்தச் சிவாலயம் சிறிய அளவில் இருந்தாலும், கவின் மிகுந்து காணப்படுகிறது. மேற்கு முக வாயில் மூடப்பட்டுள்ளது. தென் முகமுள்ள சிறுவாயில் வழியே கோயிலுக்குள் செல்ல, முதலில் கிழக்கு நோக்கி தனிச் சன்னிதியில் கணபதி தரிசனம் அளிக்கின்றார். அருகே முருகப்பெருமானும் தனது தேவியர்களோடு அருள்பாலிக்கின்றார். வாயிலுக்கு நேரே நந்தி, பலிபீடம் அமைந்துள்ளது. நேராக முக மண்டபம். அங்கே முதலில் தென்முகம் பார்க்கும் அம்பாள் சன்னிதி. சன்னிதியினுள் ஸ்ரீ அபிராமி அம்பாள் அருள் மழை பொழிகின்றாள்.

அடுத்து கிழக்கே திரும்பி நடக்க, நீண்ட இடை மண்டபம். அதையொட்டி அர்த்த மண்டபம் மற்றும் கருவறை அமைந்துள்ளன. கருவறையில் ஸ்ரீ கடைமுடிநாதர் பதினாறு பட்டைகள் கொண்ட பாண லிங்கமாக பேரருள் பொழிகின்றார். 16 வகை செல்வங்களையும் அருளும் இந்தப் பெருமான். ’அந்தி சம்ரக்ஷனேஸ்வரர்’ என வடமொழியில் அழைக்கப்படுகின்றார். முதுமைக் காலத்தில் காசிக்குச் செல்ல முடியாதவர்கள் இந்த கடைமுடிநாதரை வணங்கினால் முக்தி உறுதி.

சிவனாரை வணங்கி, ஆலய வலம் வருகையில் தேவகோஷ்ட தெய்வங்களை வணங்குகின்றோம். ஆலயத்தின் வடகிழக்கு மூலையில் தல விருட்சம் கிளுவை மரம் உள்ளது. கோயில் ஒரே சுற்றினைக் கொண்டுள்ளது. அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஆலயம் இரண்டாயிரமாவது ஆண்டில் குடமுழுக்கு கண்டது. அனைத்து சிவாலய விசேஷங்களும்  அனுசரிக்கப்படும் இந்த ஆலயத்தில், தினசரி மூன்று கால பூஜைகளும், மாட்டுப்பொங்கல் அன்று சிறப்பு அபிஷேகமும், திருவீதி உலாவும் விமரிசையாக நடைபெறுகின்றது. இத்தலத்தில் மேற்கு முகமாக ஓடும் காவிரியில் நீராடி, கடைமுடிநாதரையும், அபிராமி அன்னையையும் வழிபட்டு சந்தான பிராப்தி பெறலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.

அமைவிடம்: மயிலாடுதுறை - பூம்புகார் பேருந்து சாலையில் சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.  செம்பனார்கோவிலில் இருந்து திருநின்றியூர் மற்றும் மங்கைமடம் செல்லும் மினி பேருந்து மூலம் இந்தச் சிவாலயத்தை எளிதில் அடையலாம்.

தரிசன நேரம்: காலை 8 முதல் 11 மணி வரை. மாலை 5 முதல் 8 மணி வரை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com