டெல்லி பாரத் மண்டபத்தில் பிரம்மாண்ட நடராஜர் சிலை! பின்னணிகள் என்ன?
சமீபத்தில் டெல்லியில் 2023 ஜி 20 மாநாடு செப்டம்பர் 9, 10 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்றது. அமெரிக்காவின் ஜோ பைடன், இங்கிலாந்தின் ரிஷி சுனக் உட்பட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்ற மாநாடு அது. அதற்கென டெல்லியில் பிரகதி மைதானத்தில் மிகப் பிரம்மாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. அதற்காகவே பாரத் மண்டபம் (பின்னாட்களில் வேறு பயன்பாடுகளுக்கும் சேர்த்து) என்கிற பிரம்மாண்டமான மண்டபம், மற்றும் பல்வேறு வசதிகளும் உருவாக்கப்பட்டன.
நூற்றியிருபத்து மூன்று ஏக்கர் பரப்பளவில் இரண்டாயிரத்து நூற்றைம்பது கோடி ரூபாய்ச் செலவில் நிர்மாணிக்கப்பட்டது. ஒரே சமயத்தில் ஏழாயிரம் நபர்கள் அமரக் கூடிய பார்வை அரங்கம் அதன் தனிச் சிறப்பு. ஆஸ்திரேலியாவில் சிட்னி நகரின் புகழ் பெற்ற ஒபேரா அரங்கில் (Opera House) கூட ஐந்தாயிரத்து ஐநூறு நபர்கள்தான் அமர முடியும். சுமார் ஐந்தாயிரத்து எண்ணூறு கார்களை நிறுத்தி வைத்துக் கொள்ளுமளவுக்கான கார் பார்க்கிங் இட வசதியும் உள்ளே இருக்கின்றது.
பாரத் மண்டபத்தின் நுழைவாயில் முன்பாக பிரம்மாண்டமான நடராஜர் சிலை நிறுவப்பட்டுள்ளது. இந்த நடராஜர் சிலை, எவ்விதம் உருவானது? எங்கிருந்து டெல்லிக்குக் கொண்டு போகப்பட்டது? பின்னணிகள் என்ன?
இதனை உருவாக்கி தமது குழுவினருடன் டெல்லி சென்று தங்கியிருந்து, பாரத் மண்டபத்தின் முன்பாக பிரம்மாண்ட நடராஜர் சிலையினை நிர்மாணித்து விட்டு வந்திருப்பவர் சுவாமிமலை சிற்பி இராதாகிருஷ்ணன் ஸ்தபதி.
சுவாமிமலையில் பலப்பல தலைமுறையாக வாழ்ந்து வரும் சிற்பக் கலைஞர்கள் குடும்பங்களில் இவர்களது குடும்பமும் ஒன்று. அவர்களுடையதுதான் சுவாமிமலை தேவசேனாபதி சிற்பக் கலைக்கூடம்.
சிற்பி இராதாகிருஷ்ணன் ஸ்தபதிக்கு வயது அறுபத்தி நான்கு. இரண்டு சகோதரர்கள். இந்த மூவருக்கும், அவர்தம் குடும்பத்தினர் அனைவர்க்கும் தேவசேனாபதி சிற்பக் கலைக்கூடம்தான் வாழ்க்கையே.
இராதாகிருஷ்ணன் ஸ்தபதியுடன் ஓர் உரையாடல்... நமது தீபம் ஆன்மிக இதழுக்காக!
“பணி கிடைத்ததின் பின்னணி என்ன?
டெல்லியில் ஒரு குழுவைச் சேர்ந்தவர்கள், சுவாமிமலையில் இயங்கிக்கொண்டிருக்கும் சிற்பக் கலைக்கூடங்களின் ஸ்தபதிகள் குறித்து நிறைய தகவல்களை சேகரித்துள்ளனர். அதன் அடிப்படையில் என்னை வந்து அணுகினார்கள். நான் எனது தம்பிகள் ஸ்ரீகண்ட ஸ்தபதி, சுவாமிநாத ஸ்தபதி இருவரிடமும் கலந்து பேசிவிட்டு முடிவு சொல்கிறேன் என்றேன். அவர்களிடம் கலந்து பேசினேன். அதன் பின்னரே அந்தக் குழுவினரிடம் நடராஜர் சிலை செய்து தருகின்ற திருப்பணிக்கு ஒப்புதல் தந்தேன்.
பிறகு?
டெல்லி பாரத் மண்டபத்தின் முகப்பில் நாற்பதடி உயரத்தில் மிகப் பிரம்மாண்டமான நடராஜர் சிலை, நிறுவப்பட வேண்டும் என்றார்கள். முதலில் நாங்கள் அந்த இடத்தை நேரில் வந்து பார்க்க வேண்டும் என்றேன். அதன் பின்னரே உயரத்தை முடிவு செய்யணும் என்று கூறினேன். உடனே எங்களை டெல்லிக்கு அழைத்துச் சென்று காண்பித்தார்கள். பீடங்கள் சேர்த்து இருபத்தியேழு அடி உயரம்தான் மிகச் சிறப்பாக இருக்கும் என்றேன். அவர்களும் சரி என்று ஒத்துக்கொண்ட பின்னரே சுவாமிமலை வந்து அதன் பணிகளைத் தொடங்கினோம்
பணிகள் நடந்தது எப்படி?
பணிகளை 2023 ஜனவரி மாதம் தைப் பொங்கலுக்கு மறு நாளில் எங்களின் தேவசேனாபதி சிற்பக் கலைக்கூடத்தில் தொடங்கி விட்டோம். மொத்தம் முப்பத்தியிரண்டு சிற்பக் கலைஞர்கள் இணைந்து செயல்படத் தொடங்கினோம். அனைவரும் இரவு பகலாகப் பணியாற்றினோம். ஆறு மாதங்களில் நிறைவு செய்தோம். டெல்லியில் இருந்து அந்தக் குழுவினர் அவ்வப்போது வந்து பார்த்துச் சென்றார்கள். சதுர பீடம் ஆறு அடி உயரம், பத்ம பீடம் மூன்று அடி உயரம், நடராஜர் பதினெட்டு அடி உயரம். மொத்தம் இருபத்தியேழு அடி உயரத்தில் ஆனந்தத் தாண்டவ ரூபமாக நடராஜர் வெகு அற்புதமாக உருவாகி விட்டார்.
ஐம்பொன் சிலையா?
இல்லை. இந்த ஆனந்தத் தாண்டவ நடராஜர் அஷ்ட தாது வடிவில் ஆனவர். அஷ்ட தாது என்றால் எட்டு வகை உலோகங்களால் உருக்கி உருக்கி இணைந்து வார்த்து வடிவமைக்கப்பட்டவர். தங்கம், வெள்ளி, செம்பு, துத்தநாகம், பித்தளை, ஈயம், இரும்பு, பாதரசம் என எட்டு வகையான உலோகங்களால் உருவாக்கப்பட்டவர்தான், டெல்லி பாரத் மண்டபத்தின் முன்பாக அமைந்திருக்கும் அற்புத நடராஜர். ஐம்பொன் சிலைகளைக் காட்டிலும் அதன் உருவாக்கத்திலும் அதன் மெருகிலும் அதன் நீடித்த தன்மைகளிலும் சிறப்புகள் பல வாய்ந்தது இந்த அஷ்ட தாது நடராஜர் சிலை.
கண் திறந்தது எப்போது?
கண் திறப்பது மிக முக்கியமான நிகழ்வாகும். நுணுக்கமானதாகும். அழகியல் சார்ந்ததாகும். வார்ப்படங்கள், இணைப்புகள் என எல்லாப் பணிகளும் நிறைவு பெற்று இறுதியாகத்தான் கண்கள் திறந்தோம்.
டெல்லிக்குச் சென்றது எவ்வாறு?
டெல்லிக்குக் கொண்டு சென்று அங்கும் நடராஜர் சிலைக்கு மேலும் சில வேலைகள் இருந்ததால், நீளமான கண்டெய்னர் லாரியில் படுக்கை வசமாக வைத்து நடராஜர் சிலையினைக் கொண்டு சென்றோம். சுவாமிமலையில் இருந்து டெல்லிக்குப் போய்ச் சேர்வதற்கு ஆறு நாட்கள் ஆகின. எங்கள் குழுவினர் முப்பத்தியிரண்டு பேரும் டெல்லிக்குக் கிளம்பிச் சென்றோம். பத்து நாட்கள் தங்கியிருந்து அங்கு நடராஜர் சிலைக்கு மேலும் நகாசு வேலைகள் செய்து, அதன் பின்னரே டெல்லி பாரத் மண்டபத்தின் முன்பாக ஆனந்தத் தாண்டவ அற்புத நடராஜர் சிலையினை நிர்மாணித்தோம்.
பிரபலங்கள் பாராட்டுகள்?
நமது பிரதமர் ஆலோசனையின் பேரில் டெல்லியில் இருக்கும் இந்திரா காந்தி தேசிய கலைகள் மையம் தான் எங்களுக்கு இந்தப் பணியினை வழங்கியிருந்தது. கடந்த வாரம் என்னை டெல்லிக்கு அழைத்திருந்தார்கள். டாக்டர் அம்பேத்கர் சர்வதேச அரங்கில், இந்திரா காந்தி தேசிய கலைகள் மையத்தினர் என்னைப் பாராட்டி கௌரவித்தனர். அந்த மையத்தின் செயலாளர் சச்சிதானந்த ஜோஷி நினைவுப் பரிசு வழங்கினார்.
அந்த நிகழ்ச்சிக்கு சர்தார் வல்லபாய் படேல் சிலை செய்து தந்திருந்த சிற்பி ராம் சுடர் அங்கு வந்திருந்தார். “ஆன்மீக ரீதியாகவும் கலை ரீதியாகவும் மிகவும் அற்புதமான சிலை” என்று பாராட்டி எங்களை வாழ்த்தினார். மத்திய பண்பாட்டுத் துறை செயலாளர் கோவிந்த் மோகன், “மரபு மீறாமல் அதே நேரத்தில் பிரம்மாண்ட நடராஜர் சிலை, பாரத் மண்டபத்தில் அமைந்திருப்பது மிக அற்புதம்” எனக் குறிப்பிட்டார்.
டாக்டர் பத்மா சுப்பிரமணியம், ’’சோழர் காலத்துக் கலை மரபினைப் பின்பற்றி அமைந்துள்ளது நடராஜர் சிலை. இதில் அண்டத்தின் அரூபம், ரூபம் இரண்டும் கலந்துள்ளது. அசித், சித் (ஜடப் பொருளும் சக்தியும்) இரண்டும் கலந்த கலை வடிவம் இது. பிரபஞ்ச தத்துவ யந்திரம் இந்த நடராஜர். இதனை நமது சுவாமிமலை சிற்பி இராதாகிருஷ்ணன் நேர்த்தியாக உருவாக்கியுள்ளார்.” என்று நிகழ்ச்சியில் வாழ்த்துரைத்தார்.
எனது மனதுக்கும் எனது ஆத்மாவுக்கும் என்னுடன் இணைந்து பணியாற்றிய எங்கள் குழுவினர்க்கும் இதை விட வேறென்ன வேண்டும்? என்று கூறி, நமது நேர்காணலை மன நிறைவோடு நிறைவு செய்தார் சுவாமிமலை சிற்பி இராதாகிருஷ்ணன் ஸ்தபதி.