திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவிலில் நடந்த அதிசயம்: தானாக தரையில் நின்ற ரிஷப தண்டம்!

Marundeeswarar temple miracle
Marundeeswarar temple
Published on
deepam strip
deepam strip

சென்னை திருவான்மியூரில் வங்காள விரிகுடா கடற்கரையையொட்டி அமைந்துள்ள கோவில் மருந்தீஸ்வரர் கோவில். இங்கேயுள்ள சிவன் சுயம்புவாக உருவானவர். இந்த சுயம்பு லிங்கம் பிரதிஷ்டை செய்யப்படுவதற்கு முன்பு காமதேனு என்னும் தேவலோகத்து பசு தினமும் பால் சொரிந்து வழிபட்டதால், இவருக்கு 'பால் வண்ணநாதர்' என்னும் திருநாமமும் உண்டு. வால்மீகி முனிவர் தவமிருந்த இடமாததால், இந்த இடம் அவர் பெயராலேயே திருவான்மியூர் என்று அழைக்கப்படுகிறது.

275 பாடல் பெற்ற சிவஸ்தலங்களில் ஒன்றான இந்த மருந்தீஸ்வரர் கோவிலில் 7 ஆம் நூற்றாண்டில் அப்பர் பெருமானும், திருஞானம்னசம்பந்தப்பெருமானும் வந்து சிவனை போற்றி பாடியுள்ளனர். அருணகிரிநாதரும் 'குசமாகி' என்று தொடங்கும் திருப்புகழை பாடி இங்கேயுள்ள சுப்ரமண்யரை வழிபட்டார்.

இந்த கோவிலில் விநாயகர், முருகனுக்கு சிறிய சன்னதிகள் உள்ளன. இங்கேயுள்ள அம்பாள் திருபுரசுந்தரி என்னும் திருநாமத்தால் வழங்கப்படுகிறார். மூன்று காலகட்டங்களையும் கட்டுப்படுத்தும் 3 விநாயகர்களுக்கும் ஒரு சன்னதி உள்ளது.

இந்தக் கோவிலின் முக்கியமானதொரு சிறப்பு அம்சமாக மூலவரின் பிரகாரத்தில் 108 சிவலிங்கங்கள் காட்சி தருகின்றன. இங்கே தல விருட்சம் வன்னி மரம். இந்த வன்னிமரத்தருகே தான் ஸ்ரீ அகத்தியர் பெருமானுக்கு, சிவனும் பார்வதியும் திருமண கோலத்தில் காட்சியளித்ததாக கூறப்படுகிறது.

இங்கே சுவாமி அபிஷேகத்திற்கு தூய பசும்பால் மட்டுமே உபயோகப்படுத்தப்படுகிறது. இதற்காக இங்கேயே ஒரு கோசாலை அமைக்கப்பட்டுள்ளது. இங்கே 11 ஆண்டுகளுக்கு முன் திருமறைகளைப் பாடும் திருமுறை மண்டபம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. உலகத்திலேயே இந்த மாதிரி திருமுறை மண்டபம் திருவாரூர் அருள்மிகு தியகராஜசுவாமி ஆலயத்தில் தான் உள்ளது.

இது கோவிலில் ஆயிரங்கால் மண்டபம் அருகில் அமைக்கப்படுள்ளது. அதன் பிறகு 2001 இல் மருந்தீஸ்வரர் கோவிலில் திருமுறை மண்டபம் அமைக்கப்பட்டது. தேவாசிரியன் மண்டபம் என்று அழைக்கப்படும் இந்த மண்டபத்தில் வருடம் 375 நாட்களும் சைவ சித்தாந்த சொற்பொழிவுகள் ஆற்றப்படுகின்றன.

இந்த ஆலயத்தில் திருமறைகள் பாடி ரிஷப தண்டம் ஏந்தி ஆலயத்தை வலம் வருவது தினசரி நடைபெறுகிறது. 2001 லிருந்து 2009 வரை ஏழு முறை ரிஷப தண்டம் அடியாரின் கையிலிருந்து நழுவி, தானே கீழே ஊன்றி நின்று கொள்ளும் அற்புத நிகழ்வு நடைபெற்றிருக்கிறது.

இப்போது 16 வருடங்கள் கழித்து 06.08.25 பிரதோஷம் அன்று ஆலயத்தை ரிஷப தண்டத்துடன் பிரதோஷ வேளையில் வலம் வரும்போது, தேவாசிரியன் மண்டபம் எதிரே, ரிஷப தண்டம் அதை சுமந்து வந்த அடியாரின் கையிலிருந்து நழுவி பூமியில் தானாக நின்றது. கோவில் நடை சாத்தும் வரையில், கிட்டத்தட்ட மூன்றரை மணி நேரங்கள் வரை, அப்படியே நின்றது. இது இறைவன் நிறைவேற்றிய மிகவும் அதிசயமான அற்புதமான நிகழ்வாகக் கருதப்படுகிறது. பக்தகோடிகள் தொடர்ந்து தேவாரம், திருவாசகப் பாடல்களை பாடியவாறே ரிஷப தண்டத்தை தரிசித்தனர்.

முடிவில் தீபாராதனை காண்பித்து பூமியிலிருந்து ரிஷப தண்டத்தை எடுத்தார்கள். இது இறைவன் நிகழ்த்திய மிக அற்புதமான நிகழ்வாக பக்தர்களால் கருதப்படுகிறது. இதைப் பற்றி கேள்விப்பட்டு ஏராளமான பக்தகோடிகள் பிரதோஷத்தன்று மருந்தீஸ்வரர் கோவிலுக்கு வந்து தானாக பூமியில் ஊன்றி நின்ற ரிஷப தண்டத்தை தரிசித்தார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com