கருடாழ்வார் அமர்ந்த கோலத்தில் காட்சி தரும் அபூர்வ திருத்தலம்!

கருடாழ்வார் அமர்ந்த கோலத்தில் காட்சி தரும் அபூர்வ திருத்தலம்!
Published on

பொதுவாக அனைத்து வைணவத் தலங்களிலும் பெரிய திருவடி எனும் கருடாழ்வார் பெருமாளை நோக்கி கைகூப்பி நின்றவண்ணம் காட்சி தருவார்.  ஆனால். அதிசயமாக திருவள்ளுர் மாவட்டம், ஆவடி அடுத்து அமைந்துள்ள கோவில்பதாகை என்ற ஊரில் அமைந்திருக்கும் அருள்மிகு சுந்தரராஜப்பெருமாள் திருக்கோயிலில் கருடாழ்வார் கைகளைக் கூப்பி அமர்ந்தவாறு காட்சி தருகிறார்.  வேறெங்கும் காணக்கிடைக்காத காட்சி இதுவாகும். இரண்டு மூலவர்கள், இரண்டு கருடாழ்வார்கள், இரண்டு மகரிஷிகள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் அற்புதமான க்ஷேத்ரம். சுமார் 800 ஆண்டுகளுக்கு முன் சோழர்களால் கட்டப்பட்ட பழைமையான வைணவத் தலம் இது.

ஸ்ரீமகாவிஷ்ணு, தன்னுடைய திருக்காட்சியினைக் காண விழைந்து தவமியற்றிய பிருகு மகரிஷிக்கும் மார்கண்டேய மகரிஷிக்கும் திருப்புல்லாணி, திருமழிசை முதலான தலங்களில் காட்சி கொடுத்து அருள்புரிந்தார். இந்தக் காட்சி போதாதென்று நினைத்த முனிவர்கள் தூய்மையான தலத்தில் பூரணத் திருக்காட்சி கிடைக்க வேண்டுமென்று மீண்டும் பன்னிரண்டு ஆண்டு காலம் தவமியற்றினர். அவர்களின் விருப்பப்படி தூய்மையான தலம், அதாவது சேதாரண்ய க்ஷேத்ரமாகிய கோவில்பதாகை எனும் இத்தலத்தில் அழகிய தோற்றத்தில் பூரண சேவை சாதித்து அருளினார். அவருடைய பேரழகு தரிசனத்தின் காரணமாக இத்தலத்துப் பெருமாள் சுந்தரராஜப் பெருமாள் என்றழைக்கப்படுகிறார். இத்தலத்தின் புராணப் பெயர் சேதாரண்ய க்ஷேத்ரம் ஆகும்.

கோயிலின் வெளிப்புறத்தில் ஆஞ்சனேயர் சுதைச்சிற்ப வடிவத்தில் பிரம்மாண்டமாகக் காட்சி தருகிறார். ராஜகோபுரமின்றி காட்சி தரும் இத்தலத்திற்குள் நுழைந்து பலிபீடம், கொடிமரம் இவற்றைக் கடந்தால் ஒரு சிறு சன்னிதியில் நின்ற கோலத்தில் கருடாழ்வார் காட்சி தருகிறார். எதிரே உள்ள கிழக்கு திசை நோக்கி அமைந்த கருவறையில் ஸ்ரீசுந்தரராஜப் பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி நாச்சியார்களோடு நின்ற திருக்கோலத்தில் பெயருக்கேற்ப அழகே உருவாகக் காட்சி தந்து அருள்புரிகிறார். கருவறையின் நேர் பின்புறத்தில் அமைந்துள்ள மற்றொரு கருவறையில் மேற்கு திசை நோக்கியவாறு ஸ்ரீவைகுண்டநாதப்பெருமாள் பிரயோக நிலையில் சக்கரத்தை வைத்தபடி ஸ்ரீதேவி பூதேவி ஆகியோரோடு காட்சி தருகிறார்.   அருகில் மார்கண்டேய மகரிஷி அமைந்துள்ளார். இந்த கருவறைக்கு எதிரில்தான் கருடாழ்வார் கைகூப்பிய நிலையில் அமர்ந்தவாறு காட்சி தருகிறார்.

தாயார் சுந்தரவல்லி என்ற திருநாமத்தோடு சுற்றுப்பிராகாரத்தில் ஒரு தனிச் சன்னிதியில் அருளுகிறார். சுற்றுப்பிராகாரத்தின் மற்றொரு பக்கத்தில் ஒரு சன்னிதியில் ஆண்டாள் காட்சி தருகிறார். ஆண்டாள் சன்னிதியின் இருபுறங்களிலும் ஆச்சார்யார்கள் சிலாரூபத்தில எழுந்தருளியுள்ளார்கள். ஒரு பக்க சன்னிதியில் விஷ்வக்சேனர், நம்மாழ்வார், திருமங்கையாழ்வாரும் மற்றொரு பக்கம் அமைந்துள்ள சன்னிதியில் ஸ்ரீமணவாள மாமுனிகள், ஸ்ரீராமானுஜர் மற்றும் பிள்ளைலோகாச்சாரியாரும் எழுந்தருளியுள்ளார்கள்.  இத்தலத்தில் ஒரு சன்னிதியில் ஆஞ்சனேய சுவாமி காட்சி தருகிறார். வைகானஸ ஆகமம் பின்பற்றப்படும் இத்தலத்தின் தீர்த்தம் சேதா புஷ்கரணி கோயிலுக்கு வெளியே அமைந்துள்ளது.

அமைவிடம்: ஆவடியில் இருந்து ஓசிஎப் வழியாக செல்லும் பாதையில் சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவில் இக்கோயில் அமைந்துள்ளது. மாநகரப் பேருந்து வசதி அதிகம் உண்டு.

தரிசன நேரம்: காலை 6.30 முதல் 10.30 மணி வரை. மாலை 5 முதல் இரவு 8 மணி வரை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com