எளிய பரிகாரத்தில் நிறைந்த பலன்!

எளிய பரிகாரத்தில் நிறைந்த பலன்!

பொதுவாக, உப்பை முதற்பொருளாக வைத்துச் செய்யப்படும் எந்தப் பரிகாரமும் நிச்சயமாகத் தோற்காது. காரணம், உப்பு என்பது மகாலட்சுமியின் அம்சமாகப் பார்க்கப்படுகிறது. பணக் கஷ்டம், கடன் சுமை, காரியத் தடை, வேலை இன்மை போன்ற பிரச்னைகளில் ஏதாவது ஒன்று நிச்சயம் அனைவரின் வீட்டிலும் இருக்கும். அவர்கள் கீழ்க்காணும் இந்த எளிய பரிகாரத்தை செய்து பாருங்கள், கண்டிப்பாக உங்களுக்கு கைமேல் பலன் கிடைக்கும்.

இந்தப் பரிகாரத்துக்குத் தேவை சிவப்பு நிற சதுர வடிவ துணி ஒன்றும் கல்லுப்பும்தான். உங்கள் வீட்டில் செப்பு நாணயம் இருந்தால் அதை நீங்கள் இந்தப் பரிகாரத்துக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம். பூஜை அறையில் விளக்கேற்றி வைத்துவிட்டு சிவப்பு நிற சதுரத் துணியை ஒரு தாம்பூல தட்டில் வைத்து, அதன் மேல் கல் உப்பு மூன்று முறை உங்கள் கையால் அள்ளி அந்த துணியில் வைக்க வேண்டும். உப்பை வைக்கும்போது உங்களது கோரிக்கை குலதெய்வத்திடம் மனதார வைக்க வேண்டும். கை நிறைய உப்பை அள்ள வேண்டும் என்கிற அவசியம் இல்லை. ஒரு ஸ்பூன் உப்பை எடுத்து உங்கள் உள்ளங்கைகளில் வைத்து வேண்டிக்கொண்டு அந்தத் துணியில் வைத்தால்கூட போதும். குலதெய்வத்திடம் உங்களது வேண்டுதலை வைக்கும்போது மனதில் ஒரு துளி சஞ்சலம் கூட இருக்கக் கூடாது. மனது உங்களது வேண்டுதலை மட்டுமே நினைத்திருக்க வேண்டும்.

அந்த உப்பிடப்பட்ட சிவப்புத் துணியை அப்படியே முடிந்து உங்கள் வீட்டு வாசல் நிலைப்படியில் கட்டித் தொங்கவிட்டு விடுங்கள். அதற்கு தினமும் ஊதுபத்தி காண்பித்து வழிபட வேண்டும். கூடிய விரைவில் உங்கள் வேண்டுதல் நிச்சயம் நிறைவேறும். காசு பணம், கடன் பிரச்னைக்காக மட்டும் இந்தப் பரிகாரம் கிடையாது. பிரிந்த உறவுகள் ஒன்று சேரவும்கூட இந்தப் பரிகாரத்தை செய்து பார்க்கலாம்.

வாசல் நிலைப்படியில் கட்டியிருக்கும் இந்த உப்பு முடிச்சை மாதத்துக்கு ஒரு முறை அவிழ்த்து, உப்பை மட்டும் தண்ணீரில் கொட்டி கரைத்துவிட வேண்டும். ஒரு மாதத்துக்குள் உங்கள் வேண்டுதல் நிறைவேறிவிட்டால் மீண்டும் இந்த பரிகாரத்தை நீங்கள் செய்ய வேண்டாம். நிறைவேறவில்லை எனில், மீண்டும் முதலில் செய்தது போலவே உப்பை சிவப்பு நிறத் துணியில் வைத்து வேண்டிக்கொண்டு நிலைவாசலில் கட்டித் தொங்கவிட்டு ஊதுபத்தி காண்பித்து வழிபட்டு வாருங்கள். நியாயமான உங்கள் கோரிக்கை நிச்சயம் நிறைவேறும்.

இந்தப் பரிகாரத்தை வெள்ளிக்கிழமைகளில் செய்வது சிறப்பு. அதிலும் வெள்ளிக்கிழமை காலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள் இந்தப் பரிகாரத்தை செய்வதால் இரட்டிப்புப் பலன் கிடைக்கும். இந்த நேரத்தில் செய்ய முடியாத சூழ்நிலை இருந்தால் வெள்ளிக்கிழமை எப்போதும் நீங்கள் பூஜை செய்யும் நேரத்தில் கூட இந்தப் பரிகாரத்தைச் செய்து பலன் பெறலாம். இந்த சிறிய உப்புப் பரிகாரம் நிச்சயமாக உங்களுக்கு பெரிய அளவில் நன்மைகளைப் பெற்றுத் தரக்கூடியதாக அமையும். நம்பிக்கை உள்ளவர்கள் இந்தப் பரிகாரத்தை செய்து பலன் பெறலாமே!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com