

இந்தியாவில் சிறந்து விளங்கும் ஆயிரத்தெட்டு சிவத்தலங்களில் பெருமை வாய்ந்தது திருவிருஞ்சிபுரம் மார்க்கபந்தீஸ்வரர் கோவில். இங்கு மரகதாம்பிகை சமேதராக மார்க்கபந்தீஸ்வரர் கோவிலில் எழுந்தருளியுள்ளார். அந்த ஆயிரத்தெட்டு கோவில்களில் பதினெட்டு கோவில்கள் உன்னதமானவை. அந்த பதினெட்டு திருக்கோவில்களில் ஒன்றானது திருவிரிஞ்சிபுரம் கோவிலாகும். ஒரே மகாலிங்கத்தில் ஆயிரத்தெட்டு சிவலிங்கங்கள் இந்த திருத்தலத்தில் உள்ளது.
திருவண்ணாமலையில் முடி காண இயலாத பிரம்மன், ஈசன் தலையிலிருந்து விழுந்த தாழம் பூவை எடுத்து வந்து முடி கண்டதாக பொய் கூறியதால் சாபம் பெற்றார். பின்னர் சாப விமோசனத்திற்காக ஈசனை வேண்டும் பொழுது திரு விரிஞ்சையில் வாழும் குலவந்திரி மகரிஷி, நயனா நந்தினிக்கு மகனா பிறந்து, சிவதொண்டனாக ஈசனை நோக்கி தினமும் பூஜை செய்ததால் அந்த பூஜையை ஏற்றுக் கொண்ட ஈசன், திருமுடி சாய்த்து சிவசர்மனுக்கு காட்சியளித்தார் என்கிறது தல வரலாறு.
பிரம்மன் ஈசனை நோக்கி தவம் செய்ததால் பிரம்மபுரம் எனவும் பிரம்மனின் இன்னொரு பெயரான 'விரிஞ்சன்' என்பதால் விரிப்பைபுரம் எனவும் அது மருவி 'விரிஞ்சிபுரம்' எனவும் அழைக்கப்படுகிறது.
பிரம்மா காயத்ரி தேவியுடன் ஈசனை வேண்டி செய்த யாகத்தின் பலனாக க்ஷுர நதியில் பால் பெருகிற்றாம். அதனால் பாலாறு என பெயர் வந்தது. இந்த பாலாற்றின் அருகில் இந்த திருத்தலம் அமைந்துள்ளது.
பிரம்மன் சிவபெருமானை நோக்கி தவம் செய்த இடத்தில் 'சிம்ம தீர்த்தம்' அமைந்துள்ளது. அந்த தீர்த்தத்திற்கு செல்ல சிங்கமுக வடிவம் உடைய வாயிலின் வழியாக சென்று படிக்கட்டுகளில் இறங்கி செல்ல வேண்டும்.
பிரம்மன் இந்த குளத்தில் குளித்து அங்கு ஈர உடையுடன் சிவபெருமானை நோக்கி தவம் செய்து வந்தார். அவரது கனவில் சிவபெருமான் தோன்றி வேண்டிய வரமளித்தார். கார்த்திகை மாதம் கடை ஞாயிறு தோறும் பேய், பிசாசு கொண்டவர்கள், திருமணம் ஆகாத பெண்கள், குழந்தை பேறு இல்லாத பெண்கள் ஆகியோர் சிம்ம குளத்தில் மூழ்கி கோவில் பிரகாரத்தில் படுத்து உறங்கி அவர்கள் கனவில் தோன்றும் ஈசனிடம் வேண்டிய வரம் பெற்று செல்கிறார்கள்.
இந்தக் கோவிலில் சுயம்பு மகாலிங்க மூர்த்தியின் மீது சூரியன் ஒளிக்கதிர்கள் பங்குனி மாதத்தில் விழுவதால் இந்த தலம் 'பாஸ்கர ஷேத்திரம்' எனவும் அழைக்கப்படுகிறது. ஏழு நிலைகள் கொண்ட நூற்றிபத்து அடி உயர ராஜகோபுரம் அதைச் சுற்றி மதிலழகுக்கு இலக்கணமாக விளக்கும் மதில் சுவர்கள் கொண்டதாக இந்த கோவில் அமைப்பு உள்ளது. கம்பீரமான கோபுர சுவர் வேறு எந்த கோவிலிலும் காணப்படாததாகும்.
திருவாரூர் தேர் அழகு, திருவிரிஞ்சை மதிலழகு - கோவிலின் மதில்கள் அவ்வளவு அழகானவை கீழ் கோபுர வாசல், மேல் கோபுரவாசல், திருமஞ்சனம் வாசல் என்று முறையே கிழக்கு மேற்கு வடக்கு பக்கங்களில் வாயில்கள் இருப்பினும் தென்புறம் மட்டும் வாயில் இல்லாமல் மதில் மேல் கோபுரம் மட்டும் உள்ளது. இந்த தலத்து வடக்கு பக்கம் கோபுரவாயில் எப்பொழுதும் திறந்தே இருக்கும். இதன் வழியாக நாள்தோறும் இரவில் தேவர்கள் பூஜை செய்வதால், அது தேவர்கள் வழி என்று ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த கோவிலின் ஸ்தல விருட்சம் பனை மரம் ஆகும். இங்குள்ள பனைமரம் ஒரு ஆண்டில் வெண்மையான காய்களையும், மறு ஆண்டில் கடுமையான காய்களையும் காய்ப்பது தனி சிறப்பாகும். கோவிலின் வெளிப்பிரகாரத்தில் வசந்த நீராட்ட கட்டம் என்னும் காலம் காட்டும் கல்லுள்ளது.
இந்தக் கல்லின் நடுவில் ஒரு குச்சியை வைத்தால், அதில் குறிக்கப்பட்டிருக்கும் ஒன்று முதல் பன்னிரண்டு வரையிலான எண்களில் நேரத்தினை காட்ட அப்போதைய குச்சியின் நிழல் படுகிறது. இது துல்லியமானதாக உள்ளது பல நூற்றாண்டுகளுக்கு முன்பே கடிகாரம் கண்டுபிடிக்கும் வாய்ப்பு இல்லாத காலத்திலேயே இந்த காலம் காட்டும் கல் அமைக்கப்பட்டுள்ளது.
இந்தக் கோவிலின் அழகே இதன் மண்டபங்கள் தான். அப்படி ஒரு செதுக்கல் காண்போரை எளிதில் மயங்க செய்யும் அழகு சிற்பக்கலை யாழி தன் தலையில் தாங்கும் தூண்கள், குதிரை வீரனை உக்கிரகத்தோடு தாக்கும் சிங்கம், மதம்கொண்ட யானை உடன் மல்லுக்கட்டும் பாகன் இப்படி பல விதமான சிற்பங்கள் உள்ளன மண்டபகத்துக்குள் மண்டபம் இந்த கோவிலின் இன்னும் ஒரு அதிசயம் ஆகும்.
கருவறையில் இயற்கையாக எழுந்த ருத்ராட்ச பந்தல் வேறு இருக்கிறது. இந்தக் கோவிலில் கார்த்திகை மாதம் சிம்மகுள திறப்பு மற்றும் கடை ஞாயிறு விழா மிகவும் சிறப்பாக நடைபெறுகிறது. ஏராளமான மக்கள் கடை ஞாயிறு விழாவில் வந்து கலந்துகொண்டு அவர்களின் வேண்டுதல்கள் நிறைவேற்ற இறைவனை வேண்டி வணங்குகிறார்கள். அவர்கள் கேட்ட வரம் கேட்டபடியே இந்த தல மகாலிங்க சுவாமியும் உடனே அருள் புரிகிறார்.
இந்தக் கோவில் வேலூர் மாவட்டத்தில் வேலூரில் இருந்து பதிமூன்று கிலோ மீட்டர் தொலைவில் பெங்களூரு சாலையில் சற்று உட்புறமாக உள்ளது.