ஆன்மிகக் கதை - அவன் உகக்கும் ரஸம்!

ஸ்ரீ ரங்கநாதர்
ஸ்ரீ ரங்கநாதர்

ஸ்ரீ ரங்கநாதன் சன்னிதிக்குச் செல்லும் படியில் உட்கார்ந்தவண்ணம் வயதான அரையர் ஒருவர் திருவாய்மொழிப் பாசுரங்களை மெல்லிய குரலில் இசைத்துக்கொண்டிருந்தார். அவர் கண்களிரண்டும் பார்வை இழந்து கிடந்தன. சதா வெற்றிலை போடும் பழக்கம் அவருக்கு இருந்ததால்,  மடியில் ஒரு வெற்றிலைச் செல்லமும் கிடந்தது. அந்த வெற்றிலைப் பெட்டியில் வெற்றிலைப் பாக்குடன் ஒரு ஸாளக்ராமத்தையும் வைத்திருந்தார் அரையர்.

பாக்கைத் தேடி பெட்டியைத் தடவினார் ஒருமுறை. ஸாளக்ராமம் கிடைத்தது. அதை பாக்கென்று நினைத்து வாயில் போட்டுக் கடித்துப் பார்த்தார். ஸாளக்ராமம் என்று தெரிந்ததும் அதை வாயிலிருந்து எடுத்து, மேல் வேட்டியில் துடைத்து மீண்டும் பெட்டியில் போட்டுவிட்டார். பிறகு பாக்கொன்றை எடுத்து வாயில் போட்டு வெற்றிலையை சுண்ணம் தடவி, கிழித்து மென்று சுவைக்கலானார். இது நடப்பது முதல் தடவையல்ல. தினமும் பலமுறை நடந்த விபரீதம்தான்.

இதை ஒரு மிக வைதீக வைஷ்ணவர் நீண்ட நாட்களாகப் பார்த்துக்கொண்டிருந்தார். அரையர் ஸாளக்ராமத்துக்கு இழைக்கும் அநாசாரத்தையும் அபசாரத்தையும் அவரால் பொறுக்க முடியவில்லை. ஆகவே ஒருநாள், "ஸ்வாமி, தினமும் பெருமாளை வாயில் போட்டு எச்சில் பண்ணுகிறீரே,  இது நியாயமா?" என்று கேட்டார். "கண் தெரியவில்லை" என்றார் அரையர்." அப்படியானால் பெருமாளை என்னிடம் கொடுமே, நான் ஆசாரமாக வைத்து ஆராதனம் செய்கிறேன்" என்றார்.

''தாராளமாக எடுத்துப்போம்" என்று ஸாளக்ராமத்தை எடுத்து அந்த வைதிகரிடம் கொடுத்துவிட்டார் அரையர். அன்று அந்த வைஷ்ணவப் பிராமணர் வீட்டில் ஒரே தடபுடல். ஸாளக்ராமத்தை அவர் தனது கோவிலாழ்வாரில் எழுந்தருளப் பண்ணினார். திருமஞ்சனம் கண்டருளப் பண்ணி புளியோதரை, தயிர்சாதம் முதலிய பிரசாதங்களையெல்லாம் அமுது செய்வித்தார். சேவை, சாற்றுமுறைக்கு வேறு இரண்டு, மூன்று ஸ்வாமிகளையும் எழுந்தருளப் பண்ணி, அதையும் விமர்சையாகச் செய்து முடித்தார்.

அன்று நிம்மதியாகப் படுத்தார் அந்த வைதிகர். அவர் நல்ல துயில் கொண்டதும் பெருமாள் அவர் சொப்பனத்தில் வந்து, ''நீ எதற்காக என்னை அரையர் வெற்றிலைப் பெட்டியிலிருந்து எடுத்து வந்தாய்?" கேட்டார் கோபத்துடன்.

''ஸ்வாமி, அங்கு உமக்கு அபசாரம் நடக்கிறது. அதனால் எடுத்து வந்தேன்" என்றாரவர். ''என்ன அபசாரம்?" என்றார் பெருமாள்.

"தேவரீரை தினம் பத்து தடவையாவது எச்சில் செய்கிறார் அரையர்" என்றார் அந்த ஸ்வாமி.

இதையும் படியுங்கள்:
பயண அனுபவம் - வாருங்கள் நயாகரா செல்வோம்!
ஸ்ரீ ரங்கநாதர்

''அட பைத்தியக்காரா... அது திருவாய்மொழி சொல்லும் வாயடா. தினம் அந்த ரஸத்தை சிறிது நேரமாவது நான் அனுபவிக்கிறேன். அதிலிருந்து என்னைப் பிரித்து, இந்த மரப்பெட்டியில் ஏன் அடைத்து வைத்திருக்கிறாய்? உடனே கொண்டுபோய் அரையர் பெட்டியில் என்னைச் சேர்த்து விடு" என்றார் பெருமாள்.

சொப்பனத்திலிருந்து விழித்து எழுந்து உட்கார்ந்தார் வைதிகர். பகவான் திருவுள்ளத்தை நினைத்து உருகினார். "திருவாய்மொழி அனுசந்திக்கும் நாவே நாவு. அதில் ஊறும் நீரே அமுதம். அதுவே அவன் உகக்கும் ரஸம்" என்று சொல்லிக்கொண்டார்.

மறுநாளே, பெருமாள் பழையபடி வெற்றிலைப் பெட்டிக்குள் பாக்குடன் கலந்து கிடந்தார். அரையர் கையும் ஒருமுறை பாக்கைத் தேடி, பாக்குக்குப் பதில் ஸாளக்ராமத்தை வாயில் போட்டு, மீண்டும் எடுத்துத் துணியில் துடைத்துப் பெட்டியில் சேர்த்தது. வாய் திருவாய்மொழியை மெல்ல இசைத்தது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com