குரங்குகள் உரிமை கொண்டாடும் கோயில்!

குரங்குகள் உரிமை கொண்டாடும் கோயில்!
Published on

கவான் ஐயப்பனுக்கும் பந்தளம் ராஜ குடும்பத்துக்கும் உள்ள உறவு அனைவருக்கும் தெரிந்ததே. பந்தள ராஜ குடும்பத்தைச் சேர்ந்த ஓர் இளவரசர், காயங்குளம் நாட்டின் இளவரசியை மணந்துகொண்டார். திருமணத்துக்குப் பிறகு அவர் சொந்த நாட்டுக்குத் திரும்பாமல் மனைவியின் அரண்மனையிலேயே தங்கியிருந்தார். அன்றைய வழக்கப்படி, பந்தளம் அரசக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மாதம் ஒருமுறை சபரிமலை கோயிலுக்குச் சென்று பல வழிபாடுகளைச் செய்வது உண்டு. ஆனால் இளவரசரோ, விதிவசத்தால் தங்கள் குலத்தைக் காக்க வந்த சபரிமலையானை மறந்து, மண வாழ்வின் இன்பத்திலேயே மூழ்கிக் கிடந்தார்.

ஒரு நாள் இரவு, புலிக்கூட்டம் ஒன்று தன்னைத் தாக்குவது போல் கனவு கண்டார். தூக்கத்திலேயே அலறினார். அரண்மனையில் இருந்த எல்லோரும் விழித்துக்கொண்டு ஓடோடி வந்தார்கள். இளவரசர் கனவு கண்டுள்ளார் என்று அறிந்ததும் பேசாமல் திரும்பினார்கள். ஆனால், அடுத்தடுத்த நாட்களும் இந்தச் சம்பவம் தொடர்ந்தது. இளவரசருக்குப் பைத்தியம் பிடித்துவிட்டதாகக் கருதிய அவரின் மனைவிவழி உறவுகள் அவரைத் தகாத வார்த்தைகளால் திட்ட ஆரம்பித்தனர். அதேநேரம் அவரின் மனைவிக்கோ, இளவரசர் மீதான அன்பு எள்ளளவும் குறையவில்லை.

“இது நமக்குப் போதாத காலம். விரைவில் மீண்டு வருவோம்” என்று கூறி இளவரசரை ஆறுதல்படுத்தினாள். ஆனால். அவளின் குடும்பத்தில் மற்றவர்கள் அவரைத் தொடர்ந்து அவமானப்படுத்தி வந்தனர். ஒருமுறை காயங்குளம் அரசன், “நீங்கள் பந்தளத்துக்குச் சென்று உங்கள் பைத்தியத்துக்கு வைத்தியம் செய்துகொள்ளுங்கள். நாங்கள் நிம்மதியாக உறங்குவோம்” என்றார் கேலி செய்யும் தொனியில். இங்ஙனம் பலவாறான அவமதிப்புகளால் பாதிக்கப்பட்ட இளவரசர், ஒருநாள் மனவருத்தத்துடன் உறங்கச் சென்றார்.

ன்று அவரின் கனவில் தோன்றிய அந்தணர் ஒருவர், “நீ சபரிமலை கோயிலுக்குச் சென்று நீண்ட நாட்களாகிவிட்டது. ஆகவே, திங்கள் பஜனம் (மாதா மாதம் கோயிலுக்கு வருவதாக) வேண்டிக்கொண்டு சபரிமலைக்குச் சென்று வந்தால் பிரச்னை சரியாகும். பலநாட்கள் சபரிக்குச் செல்லாமல் இருந்ததற்காக, இம்முறை சபரி மலைக்குச் சென்று, பன்னிரண்டு நாட்கள் அங்கேயே தங்கியிருந்து ஐயப்பனை தரிசனம் செய்’’ என்றார் அந்த அந்தணர்.

திடுக்கிட்டு எழுந்த இளவரசர், அந்தணரின் வாக்கை சாட்சாத் ஐயனின் கட்டளையாகவே உணர்ந்தார். உடனடியாக பந்தளம் சென்றவர், அங்கிருந்து புறப்பட்டு சபரிமலைக்குச் சென்றார். இளவரசர் புறப்பட்ட சிறிது நேரத்திலெல்லாம், அவரை அவமானப்படுத்தி வந்த காயங்குளம் மன்னன் பைத்தியம் பிடித்தது போலானான். `கடுவாய் பெற்று புலியும் பெற்று’ (புலி, குட்டியைப் பெற்றெடுத்தது; கடுவாய் ஒரு குட்டியைப் பெற்றெடுத்தது) என்ற இரண்டு வார்த்தைகளைத் தவிர, வேறு எதுவும் அவனால் பேச முடியவில்லை. பயந்துபோன குடும்ப உறுப்பினர்கள் ஜோதிடரை அழைத்து தீர்வு கேட்டனர். “ஐயப்பனின் குடும்ப உறுப்பினர் பந்தள இளவரசர். அவரை அவமதித்ததால், சபரி மலை ஆண்டவன் கோபம் கொண்டு கொடுத்துள்ள தண்டனை இது’’ என்றார் ஜோதிடர். அத்துடன், ’’சபரிமலைக்கு 101 தங்கக்காசு காணிக்கையாகச் செலுத்த வேண்டும்’’ என்றும் அறிவுறுத்தினார்.

இந்த நிலையில் சபரிமலைக்குச் சென்ற பந்தள இளவரசர், பகவானுக்கு நவரத்னக் கற்கள் பதித்த தங்கக் கிரீடத்தையும் ஒரு தங்க மாலையையும் சமர்ப்பணம் செய்தார். அங்கேயே பன்னிரண்டு நாட்கள் தங்கி தரிசனம் செய்து முடித்தார். 13ம் நாள் அவர் கிளம்ப சற்றுத் தாமதமாகிவிட்டது. அன்று திரும்பி வருவேன் என்று மனைவிக்கு உறுதியளித்திருந்தார். ஆனாலும், பொழுது இருட்டிவிட்டதால், மறுநாள் காலையில் புறப்படலாம் என்று முடிவு செய்தார். அன்று இரவு கனவில் மீண்டும் அந்த அந்தணர் தோன்றினார்.

“உன் மனைவிக்குக் கொடுத்த வாக்குறுதியை மறந்தாயோ? அவள் உன்னை எண்ணிக் காத்திருக்கிறாள். வெளியே ஒரு வெள்ளைக் குதிரை நிற்கிறது. நீ அதில் ஏறி காயம்குளம் அரண்மனைக்குச் செல்” என்றார்.

விழித்தெழுந்த இளவரசர் வெளியே வந்து பார்த்தார். அங்கே ஒரு வெள்ளைக் குதிரை நிற்பதைக் கண்டு வியந்தார். உடனடியாகப் புறப்பட்டு காயங்குளத்தை அடைந்தார். அவர் இறங்கியதும் குதிரை மறைந்துவிட்டது. இளவரசரைக் கண்டதும் அவரிடம் மன்னிப்பு கேட்டதுடன், அங்கேயே தங்கியிருக்கும்படி கேட்டுக்கொண்டார் காயங்குளம் மன்னர்.

நாட்கள் கழிந்தன. அடுத்த மாதம் பிறக்கும் தறுவாயில் திங்கள் பஜனத்துக்காக இளவரசர் மீண்டும் சபரிமலைக்குச் செல்லும் நாள் வந்தது. ஒரு வாரத்துக்கும் மேலாக கணவனைப் பிரிந்திருக்க வேண்டுமே என்று இளவரசரின் மனைவி வருந்தினாள். ஆனாலும், `பகவானுக்குக் கொடுத்த வாக்கை மீறக்கூடாது நீங்கள் அவசியம் சென்று வாருங்கள்’ என்று கணவரிடம் தெரிவித்தாள்.

அன்று இரவு கனவில் மீண்டும் தோன்றிய அந்தணர், ``மகனே! நீயும் உன் மனைவியும் கொண்டுள்ள உண்மையான அன்பு தெய்விகமானது. அதை நான் அறிவேன். அவளைப் பிரிந்து நீ சபரிமலைக்கு வர வேண்டியதில்லை. உனக்காக உன் அருகிலேயே நான் வருவேன்” என்று உறுதியளித்தார். கனவில் வந்து அருள்புரிந்தது ஐயப்பனே என்று உணர்ந்த இளவரசர், சபரிமலைக்குச் செல்லும் திட்டத்தைக் கைவிட்டார். இந்த நிலையில், வழக்கமாக அங்கு நடக்கும் போர் வீரர்களுக்கான போட்டிக்கு அரண்மனை ஆயத்தமானது.

மறுநாள் போட்டித் தொடங்கியதும் வசீகரமான இளைஞன் ஒருவன் வந்தான். அனைத்து வகையான ஆயுதப் பிரயோகத்திலும் தனக்குள்ள நிபுணத்துவத்தை வெளிப்படுத்தி அனைவரது கவனத்தையும் ஈர்த்தான். பந்தளம் இளவரசருக்கு, அவன் முகத்தை வேறு எங்கோ பார்த்தது போல் தோன்றியது. அவனுடைய வீர விளையாட்டில் மகிழ்ந்த காயங்குளம் மன்னர், ``நீ யார் உனக்கு என்ன வேண்டும் கேள்...” என்றார்.

அந்த இளைஞன், “என் பெயர் ஐயப்பன். நான் மலைப்புறத்தில் வசிக்கிறேன். இங்கு போட்டி நடக்கும் விவரம் அறிந்து வந்தேன். நீங்கள் கேட்டுக்கொண்டதால் என் விருப்பத்தைச் சொல்கிறேன். இங்கிருந்து நான் தொடுக்கும் அம்பு எங்கு சென்று விழுகிறதோ, அந்த எல்லை வரையிலான நிலப்பரப்பை எனக்கு வழங்க வேண்டும்” என்று கேட்டான். மன்னரும் ஒப்புக்கொண்டார்.

இளைஞன் புன்னகையோடு அம்பு தொடுத்தான். கண்காணாத தொலைவுக்குச் சென்று மறைந்தது அம்பு. அது விழுந்த இடத்தைக் கண்டறிய வீரர்களை அனுப்பினார் மன்னர். இளைஞனும் பந்தள இளவரசனும் அவர்களைப் பின்தொடர்ந்தனர். சூரியன் அஸ்தமிக்கும் பொழுதில் ஏரிக்கரையை அடைந்த வீரர்கள், ஏரியில் நடுவில் உள்ள தீவுப் பகுதியில் அம்பு இருப்பதைக் கண்டனர். விடிந்ததும் அந்த இடத்துக்குச் செல்லலாம் என்று கருதி, கரையில் ஓய்வெடுத்தனர்.

விடிந்ததும் அந்த இளைஞன் பந்தள இளவரசரை எழுப்பி, ``என்னுடன் வா!” என்று அழைத்தான். ஏரியில் படகு ஒன்று தயாராக இருந்தது. இருவரும் ஏரி தீவின் கரையை அடைந்ததும் தீவில் ஓரிடத்தைச் சுட்டிக்காட்டிய இளைஞன், ``அங்கே செல்... எல்லாம் உனக்குப் புரியும்’’ என்றார்.

இளவரசர் படகை விட்டு இறங்கியதும் அந்தப் படகு முதலையாக மாறியது. இளைஞனும் மறைந்துபோனான். இளவரசர் பெரும் வியப்புடன் இளைஞன் கூறிய இடத்தை அடைந்தார். அங்கே, சாஸ்தாவின் விக்ரஹம் ஒன்று இருந்தது. அந்த விக்ரஹத்தில், சபரி இறைவனுக்குத் தான் சமர்ப்பித்த தங்கக் கிரீடமும் கழுத்தணியும் இருப்பதைக் கண்டார். அது மட்டுமன்றி, ஒருவர் அந்த சாஸ்தாவை பூஜித்துக் கொண்டிருக்க, குரங்குக் கூட்டம் ஒன்று சங்கு நாதம் எழுப்பியும் பூக்கள் தூவியும் சாஸ்தாவை வழிபடுவதைக் கண்டார்.

அப்போது, இளவரசர் கனவில் கண்ட அந்தணர் நேரில் வந்தார். ``உனக்கு மகிழ்ச்சியா? இனி சபரிக்குச் செல்ல தேவையில்லை. இங்கே வந்து வழிபடலாம். இந்தக் குரங்குகள் என் பரிவாரங்கள். அவற்றைத் தொந்தரவு செய்யக்கூடாது. அவர்களுக்குச் சரியாக உணவளித்துப் பார்த்துக்கொள்ள வேண்டும்’’ என்று கூறி மறைந்தார்.

இளவரசர் சிலிர்த்துப்போனார். அவர் மெய்மறந்து நின்றிருக்க காயங்குளம் மன்னரும் வந்து சேர்ந்தார். நடந்தவற்றை அறிந்து மகிழ்ந்தார். விரைவில் பெரிய ஆலயம் எழுப்ப ஏற்பாடுகள் செய்தார். தீவினைச் சுற்றி கோட்டையும் நடுவே அரண்மனையும் அமைத்து, தன் மகளையும் பந்தள இளவரசரையும் அங்கேயே தங்கும்படிச் செய்தார். ஏரியில் பாலமும் அமைக்கப்பட்டது.

இந்த இடமே சாஸ்தாங்கோட்டை என்று அழைக்கப்படுகிறது. முன்னதாக - ராமாயணக் காலத்தில் சீதா தேவியை தேடி அலைந்த ராமபிரான் இங்கு வந்து சாஸ்தாவை வழிபட்டாராம். பின்னர் ராவணனை வென்று சீதையுடன் அவர் திரும்பும் வழியிலும் இங்கு வந்து சாஸ்தாவை வழிபட்டு மகிழ்ந்தாராம். அத்துடன், வானரர்களில் ஒருவனான நீலனை அங்கேயே தங்கியிருந்து சாஸ்தா வழிபாடுகளைச் செய்து வரப் பணித்தாராம். அவன் வம்சத்தில் வந்த வானரங்களே சாஸ்தாவை வழிபட்டு வந்தனர். அந்த இடத்தையே பந்தள இளவரசருக்கும் காட்டியருளினார் பகவான்.

இன்றைக்கும் சாஸ்தாங்கோட்டையில் குரங்குகள் உண்டு. அவை ஆலயத்தின் எல்லையைவிட்டு வெளியேறுவது இல்லை. வெளிக் குரங்குகள் உள்ளே வருவதும் இல்லை. எல்லையைத் தாண்டிச் சென்ற குரங்குகளைத் தங்கள் கூட்டத்தில் மீண்டும் சேர்த்துக் கொள்வதும் இல்லை. பகவானுக்கு நைவேத்தியம் செய்த பிறகு, இந்தக் குரங்குகளுக்கும் தனியாக உணவாக வழங்கப்படுகிறது!

ங்கிலேயர் காலத்தில் திருவிதாங்கூர் திவானாக பல ஆண்டுகள் பணியாற்றிய கர்னல் மன்றோ, திருவிதாங்கூர் அரசின் கீழுள்ள அனைத்துக் கோயில்களிலும் பல சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தாராம். அதையொட்டி, சாஸ்தாங்கோட்டை குரங்குகளுக்கு உணவு அளிப்பதை நிறுத்துமாறு உத்தரவிட்டார்.

உணவு கொடுப்பதை நிறுத்தியதும் குரங்குகள் கலாட்டா செய்யத் தொடங்கின. மடைப்பள்ளியில் நுழைந்து உணவுகளை எடுத்துச் சாப்பிட ஆரம்பித்தன. பிரச்னையின் தீவிரம் மன்றோவின் கவனத்துக்குச் சென்றது. அவர் நேரிலேயே வந்து ஆய்வு செய்வதாகக் கூறினார். அதன்படி நேரில் வந்தவர், வளாகத்தில் ஓர் நாற்காலியில் அமர்ந்தார். உடனடியாக அனைத்துக் குரங்குகளும் அவரைச் சந்திக்க வந்தன. அவை ஓர் ஒழுங்குடன் வரிசையில் நின்றன. அது அவருக்கு வியப்பைத் தந்தது. பக்தர்கள் அந்த வானரங்களுக்குப் பெயர் சூட்டி அழைப்பது வழக்கம். அவ்வகையில் சுக்ரீவன் எனப் பெயர் பெற்றிருந்த குரங்கு முன்னே வந்து நின்றிருந்தது. கர்னல் மன்றோ சுக்ரீவனிடம், ``நீ புத்திசாலி என்று கேள்விப்பட்டிருக்கிறேன். உங்களைப் பற்றி புகார் வந்துள்ளது. என்ன காரணம்...’’ எனக் கேட்டார்.

சுக்ரீவனும் அதனது சகாக்களும் சைகை மூலம் தாங்கள் பட்டினிப் போடப் படுவதைப் பற்றி விளக்கின. உடனே கர்னல், ``உங்களுக்குத் தனியே உணவு வழங்கியே ஆகவேண்டும் என்பதற்கு உரிமை ஆதாரம் என்ன இருக்கிறது?’’ என்று கேட்டாராம்.

உடனே சுக்ரீவன் அருகிலிருந்த மரத்தின் மீது ஏறி, மன்னன் கொடுத்த செப்புப் பட்டயத்தைக் கவ்வி எடுத்து வந்து கர்னலிடம் கொடுத்தது. கர்னல் வியந்தார். அதை மீண்டும் திருப்பிக் கொடுத்தவர், குரங்குகளுக்கு முறைப்படி உணவு வழங்க உத்தரவிட்டாராம்!

இப்போதும் பக்தர்கள் சாஸ்தாவை மகிழ்விக்க, குரங்குகளுக்கு உணவு வழங்குகிறார்கள். சாஸ்தாங்கோட்டையில் ’வானர ஸத்யை’ எனும் குரங்குகளுக்கான விருந்து வைபவம் மிகவும் பிரபலமானது. அதையொட்டி இலைகளில் உணவுப் பண்டங்களும் விதவிதமான பழங்களும் பரிமாறப்பட்டிருக்க, குரங்குகள் தங்கள் தலைவரின் ஆணைக்காகக் காத்திருந்து, ஒழுங்கு முறையுடன் உணவருந்தும் கண்கொள்ளாக் காட்சியைக் காணலாம்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com