சுக்ர பகவான் தாயாரை வழிபடும் அபூர்வ திருத்தலம்!

சுக்ர பகவான் தாயாரை வழிபடும் அபூர்வ திருத்தலம்!

செங்கற்பட்டு நகருக்கு அருகில் பாலாற்றங்கரையில் சுந்தர மகாலட்சுமித் தாயார் ஸமேத கமல வரதராஜப் பெருமாள் திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் எழுந்தருளியுள்ள தாயார் சுந்தர மகாலட்சுமி வலது காலில் ஆறு விரல்களோடு காட்சி தருவது அதிசயம். ஐஸ்வர்யங்களை அள்ளிக் கொடுக்கும் சுக்ர பகவான் பாலாற்றங்கரையில் அமைந்துள்ள இத்தலத்துக்கு ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் வந்து சுந்தர மகாலட்சுமி தாயாரை வணங்கிச் செல்வதாகக் கூறப்படுகிறது. சுக்ரனுக்குரிய எண் ஆறு. தாயாரிடம் சுக்ரன் இத்தலத்தில் ஐக்கியமானதாக ஐதீகம்.

ஒரு சமயம் சாபத்துக்கு ஆளான பிரம்மா சாப விமோசனத்துக்கு வழி தேடிக் கொண்டிருந்தபோது, ‘மண்ணாளும் அரசரும் விண்ணாளும் பெருமாளும் சேர்ந்து எத்தலத்தில் காட்சி தருகிறார்களோ அந்தத் திருத்தலத்தில்தான் சாப விமோசனம்’ என்று முனிவர்கள் மூலம் அறிகிறார். பூலோகத்துக்கு விஜயம் செய்த மகாவிஷ்ணு பாலாற்றங்கரையில் வாசம் செய்தபோது அங்கே ஜனக மகாராஜா வர, இருவரும் அங்கு சந்திக்கிறார்கள். இதை அறிந்த பிரம்மா, அங்கு விரைந்து வந்து இருவரையும் தரிசிக்கிறார். மகாவிஷ்ணு பிரம்மனுக்கு சாப விமோசனம் அளித்து பாலாற்றிலிருந்து மண்ணை எடுத்து யாக குண்டம் அமைத்து வேள்வி செய்யுமாறு உத்தரவிடுகிறார். பிரம்மாவும் அங்கிருந்து மண்ணை எடுத்துச் சென்று காஞ்சியில் வேள்வியைத் தொடங்கினார். ஜனக மகாராஜா மகாவிஷ்ணுவுக்கு தினசரி பூஜை செய்வது வழக்கம்.

ஒரு நாள் வெளியே சென்ற ஜனக மகாராஜா பூஜை நேரம் முடிந்த பின்னரே திரும்பும்படி ஆயிற்று. ஆனால், அன்று பூஜைகள் நடைபெற்றதற்கான தடயங்கள் தெரிந்தன. பின்னர் பெருமாளே அங்கு வந்து தனக்குத் தானே பூஜை செய்துகொண்டு போனதை அறிந்து மனம் கலங்குகிறார். மகாவிஷ்ணு தனக்குத்தானே பூஜை செய்ததை அறிந்த மகாலட்சுமி கோபப்பட, அவரை சமாதானப்படுத்தும் விதமாக, ‘இத்தலத்துக்கு வந்து என்னை தரிசிப்பவர்களை விட உன்னை தரிசிப்பவர்களுக்கே ஐஸ்வர்யங்கள் பெருகும்’ என்று அருளுகிறார். தனது தவறுக்குப் பரிகாரமாக ஜனக மகாராஜா இத்தலத்தில் கோயில் எழுப்ப, அது ‘அரசர்கோயில்’ என அழைக்கப்பட்டது.

ஆலயத்துக்குள் நுழைந்தால் முதலில் பலிபீடம், தொடர்ந்து கருடாழ்வார் சன்னிதி. அதையடுத்து இருபத்திநான்கு தூண்கள் கொண்ட கலைநயமிக்க ஒரு மண்டபம் காணப்படுகிறது. தொடர்ந்து அர்த்தமண்டபம் கருவறை அமைந்துள்ளது. வலதுபுறத்தில் தாயாருக்குச் தனி சன்னிதியும், இடதுபுறத்தில் ஆண்டாளுக்கு தனி சன்னிதியும் அமைந்துள்ளன.

கருவறையில் பெருமாள் கமல வரதராஜப் பெருமாளாள ஸ்ரீதேவி பூதேவி சமேதராக நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார். வலது கரத்தில் தாமரைமொட்டு.   தாமரை மொட்டினை தாயார் கொடுத்ததால் இவருக்கு கமல வரதராஜப் பெருமாள் என்ற திருநாமம்.

கிழக்கு நோக்கி அமைந்த ஒரு தனி சன்னிதியில் தாயார் சுந்தரமகாலட்சுமி என்ற திருநாமம் தாங்கி மேலிரு கரங்களில் தாமரை மலர்களை ஏந்தி, கீழிரு கரங்களை அபய வரத ஹஸ்த நிலையில் வைத்து பத்மாசனத்தில் தாமரைப்பீடத்தில் அமர்ந்து காட்சி தருகிறாள். தாயாரின் வலது பாதத்தில் சுண்டு விரலை அடுத்து ஆறாவது விரல் அமைந்துள்ளது. எனவே, இந்தத் தாயாரை தரிசிப்போருக்கு வாழ்வில் ஐஸ்வர்யங்களை அள்ளித் தருவாள் என்பது ஐதீகம். இத்தலத்தில் தாயாரை முதலில் வணங்கிய பின்னரே பெருமாளை வணங்க வேண்டும் என்பது மரபு. இத்தலத்தில் தாயார் சன்னிதியில் அமைந்துள்ள கோமுகம் குபேர கோமுகம் என்று அழைக்கப்படுகிறது. வித்தியாசமாக இந்தக் கோமுகத்துக்கு மஞ்சள் பூசி குங்குமம் இட்டு வழிபடுகிறார்கள். தல விருட்சம் அரசமரம்.

தரிசன நேரம்: காலை 7.30 முதல் நண்பகல் 12 மணி வரை. மாலை 4 முதல் இரவு 7.30 மணி வரை.

அமைவிடம்: செங்கற்பட்டு - மதுராந்தகம் சாலையில் படாளம் கூட்ரோட்டிலிருந்து இடது பக்கம் திரும்பி பயணித்தால் ஆறு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள அரசர்கோயிலை அடையலாம்.  படாளம் கூட்ரோட்டிலிருந்து ஷேர் ஆட்டோ வசதி உள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com