ஆடலரசனின் குஞ்சிதபாதத்தை மணிமுடியாக சூட்டிக்கொண்ட கூற்றுவ நாயனார்!

குஞ்சிதபாதத்தை சூட்டிக்கொண்ட கூற்றுவ நாயனார்
குஞ்சிதபாதத்தை சூட்டிக்கொண்ட கூற்றுவ நாயனார்
Published on

திருக்களந்தை என்னும் திருத்தலத்தை குறுநில மன்னர்கள் பலர் ஆட்சி செய்தனர். அதில் களப்பாளர் மரபில் தோன்றிய கூற்றுவ நாயனாரும் ஒருவர். இவர் பகைவர்களுடன் போர் புரிகையில் கூற்றுவனைப் போல் (எமனை போல்) தோன்றி மிடுக்குடன் போர் புரிந்து வென்றமையால் இவர் கூற்றுவர் என்று அழைக்கப்பட்டார். சிவபெருமான் மீது ஆழ்ந்த அன்பும் பெரும் பக்தியும் கொண்டமையால் கூற்றுவ நாயனார் என்று ஆனார்.

களந்தை என்னும் ஊரில் இருந்த அம்மன்னர் பல மன்னர்களுடன் போர் செய்து வெற்றி பெற்றார். அந்த வெற்றிகளால் செருக்குறாமல் இறைவனை நினைத்த வண்ணம் இருந்தார். எல்லாம் அவனின் திருவருள் என்ற எண்ணத்தினை கொண்டவராக இருந்ததால் சிவபெருமான் திருநாமத்தை மறவாமல் ஓதியபடி இருந்தார். சிவனடியார்களைக் கண்டால் அவர்களுக்கு வேண்டியதை செய்து கொடுப்பார். மேலும், பல வகையான சிவத் தொண்டுகளிலும் ஈடுபட்டு பேரின்பம் கண்டார்.

இறைவனின் அருள் வலிமையை பெற்றிருந்ததால் அவருக்கு எல்லா வலிமைகளும் தானாகவே கிடைத்தன. தேர்ப்படை, காலால்படை, குதிரைப்படை மற்றும் யானை படை என நால்வகையான படைகளும் நிரம்பி இருந்தன. ஆதலால் அவர் சேர, சோழ, பாண்டியர் என மூவேந்தர்களையும் மேலும் பல மன்னர்களையும் போரில் வென்று வெற்றி முகத்துடன் விளங்கினார். அவருடைய அரசும் விரிந்து பரந்து விளங்கியது. தமிழ்நாட்டின் மூவேந்தர்களாகிய சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் மட்டுமே மணிமுடி அணியும் வழக்கத்தினை கொண்டிருந்தனர். அதனால் அவர்களை, ‘முடியுடை மன்னர்கள்’ என்று வழங்குவர். குறுநில மன்னரான கூற்றுவ நாயனார் தம்முடைய வலிமையால் மூவேந்தர்களையும் வென்று வெற்றி வீரராக விளங்கிய போதும், அவர் முடியுடை மன்னராக முடியவில்லை. மூவேந்தர்களின் வழியில் பிறக்கவில்லை என்ற குறையைத் தவிர, முடி சூடிக்கொள்ள எல்லா தகுதியும் அவரிடம் நிறைந்து விளங்கியது.

கூற்றுவ நாயனார் திருக்கோயிலில் சிறந்த தலமான தில்லையில் முடி சூடிக்கொள்ள ஆர்வம் கொண்டார். அதேசமயத்தில் சோழர்களின் மணிமுடியை தில்லைவாழ் அந்தணர்கள் பாதுகாத்து வந்தனர். ‘சோழ பரம்பரையில் வரும் மன்னர்களைத் தவிர மற்ற மன்னர்களுக்கு திருமுடி அணிவிக்க மாட்டோம்’ என்று மறுத்துவிட்டனர். இதனால் அரசனுடைய கோபத்திற்கு ஆளாக நேரிடும் என்றும் தில்லைவாழ் அந்தணர்கள் அஞ்சினர். அந்தணர்கள் தம்மில் ஒரு குடும்பத்தார் மட்டும் தில்லை ஆடலரசனுக்கு வழிபாட்டினை நடத்தவும், சோழ அரசரின் மணிமுடியை பாதுகாக்கவும் சோழ நாட்டில் விட்டு விட்டு மற்றோர் சேர நாட்டுக்கு புலம் பெயர்ந்தனர்.

இதையும் படியுங்கள்:
பியர்ஸ் பழத்திலிருக்கும் ஆரோக்கிய நன்மைகள்!
குஞ்சிதபாதத்தை சூட்டிக்கொண்ட கூற்றுவ நாயனார்

‘தில்லைவாழ் அந்தணர்கள் எனக்கு திருமுடியை சூடாவிட்டாலும் அவர்களுள் முதல்வராகிய ஆடலரசரின் திருவடியை நன்முடியாக நான் சூடிக்கொள்வேன்’ என்று எண்ணி அம்பலத்தரசனை, ‘நீயே உன் திருவடியை எனக்கு மணிமுடியாக சூட்டி அருள வேண்டும்’ என்று மனம் உருகி வேண்டிக் கொண்டார்.

அன்றிரவு கூற்றுவ நாயனார் கனவில் தோன்றிய ஆடலரசன் குஞ்சிதபாதத்தை தம்முடைய அடியாரின் விருப்பப்படியே மணிமுடியாக சூட்டினார். உடனே விழித்தெழுந்த நாயனார் இறைவனின் திருவருளை எண்ணி உருகினார். தில்லைவாழ் அந்தணர்கள் சேர நாடு சென்றதற்கான காரணத்தை அறிந்து, ‘எதற்கும் அஞ்ச வேண்டாம்’ என்று ஓலை அனுப்பி அவர்களை சோழ நாட்டிற்கு மீண்டும் வரவழைத்தார் கூற்றுவ நாயனார். தில்லைவாழ் அந்தணர்களும் இறைவன் திருவருள் புரிந்ததை அறிந்து அவரிடம் பேரன்பு கொண்டு தில்லை திரும்பினர். கூற்றுவ நாயனார் பல திருத்தலங்களுக்குச் சென்று திருத்தொண்டுகள் பல செய்து வழிபட்டு பேரின்பம் கண்டார். இறுதியில் நிலைத்த இன்பமான வீடு பேற்றினை இறையருளால் பெற்றார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com