அம்மனுக்கு உகந்த ஆடிமாதம்!

ஆன்மிகம்
அம்மனுக்கு உகந்த ஆடிமாதம்!

அருள்மிகு எல்லை அம்மன் (திருவல்லிக்கேணி)

ரண்டாம் நூற்றாண்டிலே புத்தர் காலத்திலிருந்தே இருக்கும் மிகத் தொன்மையான கோயில் இதுவென்று தொல்பொருள் ஆராய்ச்சியினர் கருத்து கூறுகின்றனர். ஏறத்தாழ ஐநூறு வருடங்களுக்கு முன்பிருந்தே இந்த எல்லையம்மனை பிரதிஷ்டை செய்து வணங்கி வருகின்றனர்.

இந்தக் கோயிலில் நாற்பத்தி எட்டு நாட்கள் நூற்றி எட்டு தடவை சுற்றி வந்தால் திருமணமாகாத பெண்களுக்கு மண வாழ்க்கை அமையும் என்பதே கண்கூட. ஒருநாள் கூட தவறாமல் அம்மனுக்குப் புதுப்புடைவைதான் என்பதும் விசேஷம். இது பிரார்த்தனை ஸ்தலமாகும்.

ஆடி மாதம் வெள்ளிக்கிழமைகளில் பொங்கல் வைப்பது இங்கு விசேஷம். அம்மனுக்குக் காப்பு கட்டி, குங்குமம், மஞ்சள், சந்தனம் சாத்தி அலங்காரம் செய்வது சிறப்பு. சர்க்கரை அபிஷேகம் இந்த அம்மனுக்கு மட்டுமே நடக்கும் சிறப்பு வழிபாடு. சர்க்கரையுடன் நெய் சேர்த்து அம்மனுக்கு அபிஷேகம் செய்து முந்திரி, பழங்களால் அலங்காரம் செய்வது வழக்கம். ஆடிப்பூரத்தன்று அம்மனுக்கு வளையல் அடுக்கி சுஹாசினி பூஜைகளும் நடப்பதுண்டு. கூழ் வார்ப்பதும் வழக்கம்.

அருள்மிகு முத்தியாலம்மன் திரெளபதியம்மன் (முத்தியால்பேட்டை)

முத்தியாலம்மன் எழுந்தருளியுள்ள இந்தப் பகுதிக்கே முத்தியால்பேட்டை என்றுதான் பெயர். எல்லை காக்கும் இந்த தேவியின் கோயிலுக்குப் பிறகு எல்லை முடிவுதான். சுமார் நானூறு வருஷங்களாக இங்கு நடக்கும் தீமிதிதான் விசேஷம். தமிழகத்தின் மூலை முடுக்கிலிருந்தெல்லாம் வந்துகுவிந்து விடுகின்றனர். ஆடிப்பூரமும், ஆடியில் தீமிதியும் கோலாகலமாய் நடக்கும். இருபது பேரில் ஆரம்பித்து முந்நூறு பேர் வரை தீமிதிக்கின்றனர். இன்று ஆண், பெண், குழந்தைகள், வயோதிகர்களும் ஜாதி, மத பேதமின்றி கலந்துகொள்கின்றனர்.

ஆடி அமாவாசை அடுத்த முதல் வெள்ளிக்கிழமை அம்மனுக்கு, குருக்களுக்கு, பரிவாரங்களுக்குக் காப்பு கட்டுவார்கள். சமயம், பூசாலி, களாச்சாரம் எனும் மூன்று பூசாரிகள் தலைமையில் தீமிதி நடக்கும். ஐந்தாம்நாள் திரெளபதி அர்ஜுனன் கல்யாணம், வில் வளைத்தலும் உண்டு. ஆறாம்நாள் பாசு பதாஸ்த்திரம் பெறுதல் (சிவனிடம் கிருஷ்ணனை சாட்சி வைத்து அர்ஜுனன் அஸ்திரம் பெறுதல்) ஏழாம் நாள் சுபத்ரா கல்யாணம், எட்டாம் நாள் தீமிதிக்கும் பிரார்த்தனை செய்பவர்கள் காப்புக் கட்டிக்கொண்டு கோயிலில் தங்குவர்.

பல வருடங்களுக்கு முன் திரெளபதி அம்மனுக்கு தீமிதி ஆரம்பிக்கு முன் அம்பாளுக்கு மஞ்சளில் நனைத்த புடைவையைக் கட்டி கை நிறைய நெருப்பெடுத்து அவள் மடியில் கட்டுவார்களாம். புடைவை பொசுங்கினால் சகுனம் சரியில்லையென்று தீமிதிக்க மாட்டார்கள். பொசுங்காவிடில் தீ மிதிப்பார்களாம். அதிலும் வன்னிய குலத்தினருக்குத் தீயைக் கையில் ஏந்தும் திறமை உண்டாம்.

அருள்மிகு கோலவிழி அம்மன் (மயிலாப்பூர்)

யிலையின் எல்லை தெய்வமாகக் காவல் தெய்வமாகக் காட்சியளிப்பவள் கோலவிழி அம்மன். இந்த அம்மனை வழிப்படும் குழந்தைகளுக்குப் பாலாரிஷ்டதோஷம் நீங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மணமாகாத பெண்களுக்கு மணமாகும். தம்பதிகள் கருத்து வேற்றுமைகள் நீங்கி வாழ்வர் என்பதும் இவள் மகிமை. ஆடிப்பூர விழாவும், ஆயிரத்தி எட்டு பால் குடம் எடுப்பதும், (இப்போது மூவாயிரத்தைத் தாண்டிவிட்டதாம்) இங்கு விசேஷ பிரார்த்தனைகள்.

கோலவிழியம்மன் வடக்கு நோக்கி, மயான திக்கு நோக்கி எழுந்தருளியிருக்கிறாள். வடக்குக் குபேரனின் திக்கு, ஆகையால் செல்வத்தை அள்ளித் தருபவளாக இருக்கிறாள். ஒரு கையில் மனித உருவத்தை பிடித்திருப்பது போன்ற தோற்றம் உள்ளது. மனிதனிடம் உள்ள காம, குரோத, லோப, மோக, மத, மாச்சார்யம் எனும் ஆறு தீய குணங்களைப் போக்கவே தலைகீழாகப் பிடித்தாள். தலைகீழாக இருக்கும்போது உடலிலிருந்து அசுத்தங்கள் வெளிவந்துவிடும் இல்லையா?

ஆடிப்பூரத்திலே சிம்ஹவாஹனத்தில் உலா வருகிறாள். மிருகங்களின் ராஜாவான சிம்மத்தின் மீதமர்ந்து வருபவளை தரிசித்தால் பார் புகழும் ராஜா, ராணிகளைப் போல் வாழலாம் என்பதை விளக்கவே இந்த வாகனம்!

ஆடியில் பொங்கல் வைப்பது இங்கு விசேஷம். எலுமிச்சம்பழ விளக்கு ஏற்றுதலும் இங்கு சிறப்பானது. அம்பாளுக்கு ப்ரீதியானது எலுமிச்சம்பழம். வடதேசத்தில் துர் தேவதைகளுக்கு படைப்பார்கள். மாலை போடுவார்கள். கள்ளுக்குச் சமமான எலுமிச்சை சாற்றைப் (உப்பிட்டால் நுரைத்துப் பொங்குமே) படைப்பது இங்கு வழக்கம்.  ராகு தோஷம் நீங்க எலுமிச்சம் பழம் சாறை நீக்கிய பின் உள்ள கிண்ணங்களில் நெய் விட்டு தீபம் ஏற்றினால் நல்லது. உக்கிரமும் அடங்கும். மஞ்சள் சுடிதாசு கொடுத்தவர்களுக்குக்கூட இந்த மஞ்சள் நிற எலுமிச்சை மாலையை அம்மனுக்கு அணிவிக்க இழந்த பொருளை மீண்டும் அளிக்கிறாள் இந்த அம்மா!

அருள்மிகு கோலமணி அம்மன் (ஐஸ்ஹவுஸ்)

1900 ஆண்டில் சுயம்புவாக வந்த இந்த அம்பாளை இப்பகுதியைச் சேர்ந்த ஐயங்கார் பெண்மணிகள் வழிப்பட்டு, ஆடி மாதம் புற்றுக்கு பால் ஊற்றுவார்கள். இந்த அம்மா கிழக்கே பார்த்து கடல் நோக்கி எல்லை அம்மனாக அமர்ந்துள்ளாள்.

ஆடிமாத விசேஷம் இங்கு புற்றுக்கு பால் ஊற்றுவது, அலங்காரம் அபிஷேகம் இவற்றுடன் ‘கங்கை திரட்டுதல்’, கல்யாணமாகாத கன்னிப்பெண்கள் வீட்டிலே இறந்திருந்தால் அவர்களை நினைத்து கரும்புப் பந்தல் போட்டு படையல் செய்து பூஜை செய்து உடுக்கை பம்பையுடன் பூசாரியை வரவழைத்து சந்தோஷம் என்று அவர் வாயால் சொன்னபின் பூஜை முடிப்பது வழக்கம்.

மற்றொரு விசேஷம் ‘குடக்கல்யாணம்’ திருமணம் ஆகாத வாலிபனைப் பெண் போல சிங்காரித்துப் பட்டுப் புடைவை, நகைகள் பூ அலங்காரம் செய்து கரகம் எடுத்துக்கொண்டு ஏழு எல்லை அம்மன்களை தரிசித்து வரச் செய்தால் மணமாகும் என்பது ஐதீகம் ஆடியில் நூற்றி எட்டு பால்குடங்கள் எடுப்பதும் இங்கு விசேஷம்.

சமயபுரம் (திருச்சி அருகில்)

ஸ்ரீரங்கத்திலிருந்து ஒருவருக்கு காவிரியிலிருந்து கிடைத்த விக்கிரகத்தை உக்கிரமாக இருப்பதால் வீட்டுக்கு ஆகாது என்று நினைத்துத் தூக்கி எறிந்துவிட்டார். விஜயநகர மன்னர் ஹோய்சால தேசத்து அரசர் காவிரி வழியாகச் சென்றபோது அதைக் கண்டார். வைஷ்ணவர் கையில் கிடைத்ததால் நான் வைஷ்ணவி, மகமாயியான எனக்குக் கோயில் கட்டு என்று அம்மன் கனவில் சொல்ல கோயில் கட்டினார். அவள்தான் சமயபுரத்துத்  தாய்.

இங்கு விசேஷப் பிரார்த்தனை கரும்பத் தூளி எடுத்தல், மணமான தம்பதியர் நீண்டநாட்கள் குழந்தை இல்லாதவர்கள் கரும்புத் தூளி எடுப்பதாக நேர்ந்துகொண்டால் கர்ப்பமாவார்கள். சீமந்தம் ஆனதும் ஆனதும் புடைவை, வேஷ்டியை ஜாக்கிரதையாக வைத்துக்கொண்டு, குழந்தை பிறந்த ஆறாம் மாதம் புதுத்துணியை மஞ்சளில் நனைத்துக் குழந்தைக்குப் போட்டு, கரும்பால் செய்த தூளியில் படுக்க வைத்து அப்பா முன் செல்ல அம்மா தொடர நடந்து மூன்று முறை பிரதட்சணம் வந்து பிரார்த்தனை செலுத்த வேண்டும். துணியைப் பூசாரி எடுத்துக் கொள்வார். கரும்பை விநியோகம் செய்வர்.

துள்ளுமாவு செய்து அள்ளித் தருவார்கள். குழந்தையும் துள்ளித் துள்ளி விளையாடத்தான் இந்தக் காணிக்கை. “சமிந்தால் சமயபுரம்; சாதித்தால் கண்ணபுரம்” என்பது வழக்கு. எட்டுக் கையுடன் துர்க்கை காட்சியளிப்பாள். கண் தரும் நாயகி என்பதால் கண்ணபுரம்.

ஆடிப்புரத்தன்று பூச்சொரிதல் பிரமாதமாக நடக்கும். அன்று கடையில் பூவே கிடைக்காது. அத்தனை பூவும் அம்மனுக்குத்தான். இங்கிருந்து வந்த பழக்கம்தான் பிற்பாடு எல்லா கோயில்களிலும் புஷ்பாஞ்சலி என்று கொண்டாடப்படுகிறது. குதிரை மேல் புறப்பாடும் இங்கு விசேஷம்.

வயிற்று வலி, தலைவலி போன்ற தீராத நோய் தீர்ப்பாள். அதனால் நெற்றி, தலை, வயிறு மேல் வாழை இலையில் மாவிளக்குப் போடுவர் இவள் சன்னிதியில்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com