ஆன்மிகக் கதை: அம்பிகை அன்னம் பாலிக்கும் காசி க்ஷேத்திரத்தில் பசியோடு அலைந்த வியாசர்!

காசி அன்னபூரணி
காசி அன்னபூரணிhttps://banaras-tour.com
Published on

காசி க்ஷேத்திரத்தில் ஸ்ரீ விஸ்வநாதரும் அன்னபூரணி அம்பிகையும் கோயில் கொண்டு  அருள்பாலிப்பதால் அந்த நகரம் வற்றாத செல்வச் செழிப்புடன் இன்றும் விளங்குகிறது. அக்காலம் முதல் இக்காலம் வரை அந்நகர மக்கள் மன மகிழ்ச்சியோடு தங்கள் ஊருக்கு வருபவர்களுக்கும் வயிறார உணவு படைத்து அனுப்புகிறார்கள். இதனால்தான் காசியின் புகழ் உலகெங்கம் பரவி நிற்கிறது.

ஒரு சமயம், வேதங்களை முறைப்படுத்தியவரும், மகாபாரதக் காவியம் எழுதியவருமான வியாச பகவானுக்கு காசியின் புகழ் பற்றி தெரிய வந்தது. ‘அத்தலத்தில் பசியால் வருந்துபவர்களே கிடையாது, செல்வச் செழிப்பு மிகுந்த மக்கள் எப்போதும் தான தர்மங்களை செய்தபடியே இருப்பார்கள்’ என்று மக்கள் புகழ்ந்து பேசியதைக் கேட்ட வியாசர், ‘இது எப்படி சாத்தியம்? காசிக்கு இத்தனை மகத்துவம் உண்டா?’ என்றெல்லாம் யோசித்து, இதை நேரிலேயே சென்று பார்க்க வேண்டும் என்று விரும்பினார். சீடர்களிடம் இதுபற்றிக் கேட்க அவர்களும், ‘அங்கு சென்றால் வயிறார உணவு உண்டு களிக்கலாம்’ என்ற எண்ணத்துடன் உடனே புறப்படலாம் என்றனர்.

அதன்படி வியாசரும் சீடர்களும் காசி க்ஷேத்திரத்தை வந்து அடைந்தனர். முதல் நாள் அனைவரும் வெவ்வேறு பகுதிகளுக்குச் சென்று பிச்சை கேட்டு திரும்பி வந்தபோது  வியாசர் உட்பட எவருக்கும் உணவு கிடைக்கவில்லை. வியாசர் அவர்களை சமாதானப்படுத்தினார். "ஒருவேளை, இன்றைய தினம் உணவளிக்க ஏற்றதில்லையோ என்னமோ. நாளை பார்க்கலாம்" என்று கூறி, அடுத்த நாள் மீண்டும் யாசகம் கேட்க அனைவரும் பிரிந்து சென்றனர். அன்றைய நாளும் அவர்களுக்கு ஒரு வாய் கவளம் கூட கிடைக்கவில்லை. காரணம் என்னவென்று அறிய முடியாமல் தவித்தனர் வியாசரும் சீடர்களும்.

இப்படியே ஏழு நாட்கள் சென்றன. அனைவரும் பசியால் சத்திரத்தில் முடங்கிக் கிடந்தனர். எட்டாம் நாள் வியாசர் மட்டும் ஒரு வீட்டின் முன்பு சென்று  பிட்சை கேட்டார். ஆனால், அந்த வீட்டில் இருந்தவர்கள் வெளியில் கூட வராமல், அவரை அலட்சியப்படுத்தி வீட்டை சடாரென சாத்தினர். இதைக் கண்டதும் ஏழு நாட்களாக பொறுமையுடன் இருந்த வியாசருக்கு கோபம் வந்தது. உடனே, ‘காசியில் வாழும் அனைவருக்கும் சாபம் கொடுக்க வேண்டும்’ என்ற எண்ணத்துடன் அவர் தனது வலது கையை உயர்த்தினார்.

அந்த நேரம் எதிரில் இருந்த ஒரு பெரிய மாளிகையின் கதவு திறந்தது. ஒரு அழகிய பெண்மணி, ‘நிறுத்துங்கள்’ என்றபடி வெளியே வந்தாள். ‘உங்களுக்கு என்ன வேண்டும்?’ என்றாள் அந்தப் பெண்.

இதையும் படியுங்கள்:
உலகிலேயே ஜப்பானிய பாஸ்போர்ட் மதிப்பு மிக்கதாகக் கருதப்படுவதன் காரணம் தெரியுமா?
காசி அன்னபூரணி

‘நானும் எனது சீடர்களும் எட்டு நாட்களாக உணவு இல்லாமல் இந்த நகரில் மயங்கி கிடக்கிறோம்’ என்று வியாசர் கூற, ‘உங்களுக்கு உணவளிக்கும் பாக்கியத்தை எனக்குத் தாருங்கள்’ என்று கூறிய அந்தப் பெண்மணி, வியாசரையும் அவரது சீடர்களையும் அழைத்து தனது மாளிகைக்குள் அமர வைத்தாள். வேறு வழியின்றி, ‘உணவு கிடைத்தால் வயிறார சாப்பிடலாம்’ என்று இலையின் முன் அமர, இலையில் தண்ணீர் தெளித்து உப்பு வைக்கப்பட்டது. பின் அந்தப் பெண்மணி கூறினார், ‘சாப்பிடுங்கள்’ என்று. இலையில் எந்த பட்சணங்களும் இல்லாமல் எப்படி சாப்பிடுவது? மகா பசியுடன் இருந்த வியாசர் மிகுந்த சினத்துடன் ஏதோ சொல்ல வந்தவர், எதிரே இருந்து வந்த பட்சணத்தின் மணம் மூக்கில் நுழைய, பார்த்தால் வாழை இலையில் பட்சணங்கள் பரிமாறப்பட்டிருந்தன.

ஆச்சரியத்துடன் வியாசரும் அவரது சீடர்களும் அவற்றை எடுத்துப் பசியாறினர். அப்போது அங்குக் காட்சி தந்த விசுவநாதரும், அன்னபூரணியும் வியாசரிடம் ‘உங்கள் அனைவரின் பசி வேதனைக்குக் காரணம் என்னவென்று தெரிந்து கொண்டீர்களா? நீங்கள் ஒருவர் கூட இந்த காசி தலத்துக்கு பக்தி நோக்குடன் வரவில்லை. இந்தத் தலத்தின் மகத்துவத்தை சோதித்துப் பார்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் மட்டுமே இங்கு வந்தீர்கள். உங்கள் சீடர்கள் புற உணர்வான பசியினால் கவரப்பட்டு அறுசுவை உணவுகளை உண்டு களிக்க வேண்டும் என்ற பேராசையினால் மட்டுமே இங்கே வந்தார்கள். இத்தகைய எண்ணங்களோடு காசி யாத்திரை மேற்கொள்வது சரியல்ல. பக்தியோடு வந்திருந்தால் உங்கள் அனைவருக்கும் ஆன்மிகமயமான வேறுவித அனுபவங்கள் ஏற்பட்டிருக்கும்’ என்று சொல்லி மறைந்தார்கள்.

வியாசர் தமது தவறை உணர்ந்தார். அவரும் அவரது சீடர்களும் காசி’ஸ்ரீ விஸ்வநாதரையும், அன்னபூர்ணி அம்பிகையையும் பக்தியோடு வணங்கி வழிபட்டுப் புறப்பட்டனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com