ஆன்மிகக் கதை: கருடனுக்கும் பாம்பிற்கும் ஆகாது... ஏன் தெரியுமா?

Aanmeega Kathai: Garudanukkum Pampukkum Aakaathu... Ean Theriyumaa?
Aanmeega Kathai: Garudanukkum Pampukkum Aakaathu... Ean Theriyumaa?https://www.quora.com

ட்ச பிரஜாபதி, தனக்குப் பிறந்த அறுபது பெண்களில் கத்துரு மற்றும் விநதை இருவரையும், காஸ்யப மகரிஷிக்கு மணம் செய்துகொடுத்தார். விநதை அமைதியானவள். ஆனால், கத்துரு எல்லாம் எனக்கே வேண்டும் என்ற மனம் படைத்தவள். மற்றவர்கள் விநதையை மதிப்பதை அவளால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. எப்படியாவது விநதையை தனது அடிமையாக்கிக்கொள்ள வேண்டும் என்று துடித்தாள். அதற்கேற்ற சந்தர்ப்பத்தை அவள் எதிர்நோக்கிக் காத்திருந்தாள்.

கத்துருவிற்குப் பிறந்தவை பாம்புகள். விநதையின் மகன் கருடன். வானத்தில் ஏழு தலைகள் கொண்ட உச்சைச்சிரவ குதிரை பறந்துபோவதைப் பார்த்த கத்துருவிற்கு, விநதையை அடிமைப்படுத்த ஒரு உபாயம் கிடைத்தது. விநதையிடம் சொன்னாள், “நம் இருவரிடையே பந்தயம் வைத்துக்கொள்வோம். தோற்றவர், வென்றவர்க்கு அடிமையாக இருந்து சேவை செய்ய வேண்டும்.”

விநதை அதற்கு சம்மதம் தெரிவித்தாள். கத்துரு விநதையிடம் கேட்டாள், “நீ உச்சைச்சிரவ குதிரையைப் பார்த்திருக்கியா, அதனுடைய நிறம் என்ன?”

“அது வெள்ளைக் குதிரை” என்றாள் விநதை.

“இல்லை, அந்தக் குதிரை முழுவதும் வெள்ளை இல்லை. சில இடங்களில் கருப்பாக இருக்கும். அடுத்த முறை குதிரை வானத்தில் பார்க்கும்போது காண்பிக்கிறேன். அந்தக் குதிரை முழுவதும் வெள்ளையாக இருந்தால், நானும் என்னுடைய மகன்களும் உன்னுடைய அடிமையாக சேவகம் செய்வோம். ஆனால், அந்தக் குதிரை முழுவதும் வெள்ளையாக இல்லையென்றால், நீயும் உன்னுடைய மகனும் என்னுடைய அடிமையாகப் பணி புரிய வேண்டும்” என்றாள்.

கத்துரு தன்னுடைய மகன்களான பாம்புகளைக் கூப்பிட்டாள். விநதையிடம் செய்த பந்தயத்தைச் சொல்லி, நாளை உச்சைச்சிரவ குதிரையின் வாலை பாம்புகள் சுற்றிக்கொள்ள வேண்டும் என்று கட்டளை இட்டாள். “பந்தயத்தில் பொய் சொல்லி இன்னொரு தாயை ஏமாற்றுவது தவறில்லையா” என்று சில மகன்கள் கேட்க, “தாய் சொல்லைத் தட்டாமல் கேட்பதுதான் குழந்தைகள் கடமை. நான் சொல்வதைக் கேட்கவில்லை என்றால், உங்களைச் சபித்து விடுவேன்” என்றாள். வேறுவழி இல்லாததால், அம்மா சொல்படி செய்வதற்கு பாம்புகள் சம்மதித்தன.

அடுத்த நாள், அம்மா சொன்னபடியே பாம்புகள் குதிரையின் வாலைச் சுற்றிக்கொண்டன. உச்சைச்சிரவ குதிரை வானில் போகும்போது கத்துரு விநதையைக் கூப்பிட்டுக் காண்பித்தாள். “பார்த்தாயா? குதிரையின் வால் கருப்பாக இருக்கிறது. நீ பந்தயத்தில் தோற்றுவிட்டாய். இன்று முதல் நீயும் உனது மகனும் எனக்கு அடிமை” என்றாள். கத்துரு தன்னை சாமர்த்தியமாக ஏமாற்றி விட்டாள் என்று விநதைக்குப் புரிந்தது. ஆனால், எப்படி ஏமாற்றினாள் என்று புரியாததால், தோல்வியை ஒப்புக்கொண்டாள்.

தாயைப் பார்க்க வந்த கருடன், அவளின் சோகத்திற்கு என்ன காரணம் என்று கேட்டான். நடந்தவற்றைக் கூறிய விந்தை, கத்துரு ஏமாற்றி அடிமைப்படுத்திய விதத்தைக் கூறினாள். கத்துருவின் அடிமையிலிருந்து விலகுவதற்கு என்ன செய்ய வேண்டும் என்று கேட்டான் கருடன். “கத்துரு தனக்கும் தன்னுடைய குழந்தைகளுக்கும் பாற்கடலிலிருந்து கிடைத்த அமிர்தம் வேண்டும் என்று ஆசைப்படுகிறாள். அதைக் கொண்டு வந்து கொடுத்தால், நம் இருவரையும் அடிமைத்தளையிலிருந்து விடுவிப்பாள்” என்றாள்.

அமிர்தம் கொண்டு வரத் தீர்மானித்து, கருடன் தேவலோகம் விரைந்தான். பலவானான கருடனை, தேவர்களால் எதிர்கொள்ள முடியவில்லை. அமிர்தக் கலசத்துடன் தாயை அடிமைத் தளையிலிருந்து விடுவிக்கும் ஆசையில் பூமி நோக்கி விரைந்த கருடனை, இந்திரன் வழி மறித்தான். “தேவர்களுக்குச் சொந்தமான அமிர்தத்தை நீ எடுத்துச் செல்வது தவறு. உன்னுடைய தேவைக்கு வேண்டியதை எடுத்துக்கொள். அமிர்தக் கலசத்தை கொடுத்து விடு” என்று அறிவுரை கூறினான் இந்திரன். இந்திரனிடம் நடந்தவற்றை விவரித்தான் கருடன். “அமிர்தத்தை சாப்பிட்டால் கத்துரு மற்றும் அவளுடைய மகன்களின் அட்டகாசம் அதிகமாகும். ஆகவே, நான் சொன்னபடி செய். அமிர்தம் கொடுக்காமல் அவர்களை ஏமாற்றி விடலாம். உனக்கு நான் வரம் தருகிறேன். இன்று முதல் பாம்புகள் உன்னுடைய உணவாகும்” என்றான் இந்திரன்.

தன்னுடைய தாயின் இருப்பிடத்தை அடைந்த கருடன், கத்துரு அவளுடைய மகன்கள் முன்னால் அமிர்தக் கலசத்தை வைத்தான். “நீங்கள் சொன்னபடி அமிர்தம் கொண்டு வந்து விட்டேன். ஆகவே, எங்களை அடிமைத் தளையிலிருந்து நீக்க வேண்டும்” என்றான். அதற்கு கத்துரு ஒப்புக்கொள்ள அடிமைத் தளை நீங்கியது. “அமிர்தம் பருகுவதற்கு முன்னால், நீங்கள் எல்லோரும் ஆற்றில் குளித்து விட்டு வர வேண்டும்” என்றான் கருடன். அதற்கு சம்மதம் தெரிவித்த கத்துருவும், அவளுடைய மகன்களும் ஆற்றிற்குச் சென்றவுடன், மறைந்திருந்த இந்திரன் அமிர்தக் கலசத்தை எடுத்துக்கொண்டு மறைந்து விட்டான்.

இதையும் படியுங்கள்:
முளைகட்டிய பயறுகளில் இருக்கு அம்புட்டு சத்து!
Aanmeega Kathai: Garudanukkum Pampukkum Aakaathu... Ean Theriyumaa?

குளித்துவிட்டு வந்தவர்கள், அமிர்தத்தை காணாமல் திகைத்தார்கள். கருடனைக் கேட்டார்கள். “நீங்கள் சொல்லியபடி, நான் அமிர்தம் கொண்டு வந்தேன். அதை பாதுகாத்துக் கொள்ள உங்களுக்குத் திறமையில்லை. இதில் என்னுடைய தவறு எதுவுமில்லை” என்றான் கருடன். கருடன் ஏதோ சூழ்ச்சி செய்து தங்களை ஏமாற்றி விட்டான் என்று உணர்ந்த பாம்புகள், ஆக்ரோஷத்துடன் கருடன் மீது பாய்ந்தார்கள். இந்திரனிடம், வரம் வாங்கியிருந்த கருடன், பாம்புகளிடம் சண்டையிட்டு அவற்றை உணவாக்கிக் கொண்டான்.

கத்துரு செய்த சூழ்ச்சிதான் கருடன், பாம்புகள் இடையே தீராத பகையை உருவாக்கியது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com