ஆன்மிகக் கதை: வறுமையைப் போக்கிய கோபுர தரிசனம்!

மன்னரும் ஏழையும்
மன்னரும் ஏழையும்
Published on

ன்னர் ஒருவர் தனது பிறந்த நாளன்று கோயிலில் அன்னதானம் செய்து கொண்டிருந்தார். அந்த அன்னதானத்தை வாங்க ஏழை ஒருவர் அங்கு வந்தார். அவரது தோற்றத்தைக் கண்ட பலரும் முகத்தைச் சுளித்து ஒதுங்கிச் சென்றனர். மனம் வருந்திய அவரோ, ‘தானமாகக் கொடுக்கப்படும் அன்னத்தைக் கூட நம்மால் வாங்க முடியவில்லையே. என்ன பாவம் செய்தேனோ’ என மனம் நொந்து அந்த வரிசையை விட்டு வெளியேறினார்.

பசியோடு இருந்த அவர், கோயில் கோபுரத்தை நோக்கி, ‘‘அப்பனே ஈஸ்வரா, என்னை ஏன் படைத்தாய்?” என அழுதபடியே குளக்கரையில் சென்று அமர்ந்தார். அன்னதானம் முடிந்து அந்தப் பக்கமாக வந்த மன்னர், அங்கு கவலையோடு அமர்ந்து இருந்த அவரை நோக்கி, ‘‘அன்னதானம் சாப்பிட்டீர்களா?” எனக் கேட்டார்.

கேள்வி கேட்டவரை நிமிர்ந்து பார்க்காமலேயே அந்த ஏழை, ”என் தலையில் இன்று நான் பட்டினி என்று எழுதி இருக்கு” என விரக்தியுடன் சொன்னார். ”பசியால் யாரும் இன்று வாடக் கூடாது என்றுதானே நான் அன்னதானம் அளித்தேன். நீங்கள் ஏன் இப்படிச் சொல்கிறீர்கள்?” என அவரது தோளில் கை வைத்து கேட்டார்.

அப்போது நீருக்குள் மன்னரின் நிழல் தெரியவே, திடுக்கிட்டு எழுந்தார் அந்த ஏழை. “மன்னா, தெரியாமல் பேசி விட்டேன். மன்னியுங்கள்” என்றார்.

“ஐயா, பயப்பட வேண்டாம். இன்று நீங்கள் என்னுடன் அரண்மனையில் விருந்துண்ணலாம். வாருங்கள்” என அவரைத் தனது தேரில் அமர வைத்து அழைத்துச் சென்றார். அரண்மனையை அடைந்ததும், “குளித்துவிட்டு வாருங்கள்” என அவருக்குப் புத்தாடை கொடுத்தார். அரண்மனை விருந்துக்குப் பிறகு அவருக்கு வேண்டிய மட்டும் பொற்காசுகளைக் கொடுத்து, “இதைக் கொண்டு ஏதாவது தொழில் செய்து பிழைத்துக்கொள்ளுங்கள்” என்றார் மன்னர்.

இதையும் படியுங்கள்:
பிரியாணி இந்தியாவுக்கு வந்த வரலாறு தெரியுமா?
மன்னரும் ஏழையும்

அந்த ஏழையோ அதைக் கேட்டு பெரிதாக அழுதார். விவரம் புரியாமல் மன்னர், “ஏன் அழுகிறீர்கள்?” எனக் கேட்க, “மன்னா, இத்தனை நாட்களாக ஏழையாக ஏன்தான் நான் பிறந்தேனோ என இறைவனை நொந்து வருந்தினேன். இன்றுதான் கோயில் கோபுரத்தை பார்த்து, அப்பனே ஈஸ்வரா என்னை ஏன் படைத்தாய் என முறையிட்டேன். அந்த கோபுர தரிசனம் எனது தலையெழுத்தையே மாற்றி விட்டது” என்றார்.

‘வேண்டும் ஒன்று நமக்குக் கிடைக்கவில்லை என்றால் அதைவிட சிறந்த ஒன்றை கடவுள் நமக்குத் தருவார்’ என நம்புங்கள். கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்று சும்மாவா சொன்னார்கள் நம் முன்னோர்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com