ஆன்மிக கதை - "மூவரில் உன் கணவன் யார்?" - அஸ்வினி குமாரர்கள் வைத்த பரீட்சை

 suganya and ashwini kumaarargal
suganya and ashwini kumaarargal
Published on

பனராஸ் நகரை சர்யாதி என்ற அரசர் ஆண்டு வந்தார். அவரின் மகள் இளவரசி சுகன்யா பார்ப்பவர்களைக் கவரும் பேரழகி. தலை நகரின் அருகாமையில் ரம்மியமான ஏரி ஒன்று இருந்தது. சுற்றிலும் மணம் பரப்பும் அழகிய பூக்களுடன் செடிகளும், மரங்களும் இருந்தன. அதன் மேல் வண்ணப் பறவைகள் அமர்ந்து கொண்டு இனிமையான ஓசை எழுப்பிக் கொண்டிருக்கும். அரசர், தன்னுடைய மனைவி, மகள் மற்றும் அவர்களின் பரிவாரங்கள் புடை சூழ அந்த ஏரிக்குச் செல்வது வழக்கம்.

அந்த ஏரிக்கு அருகாமையிலிருந்த ஒரு புனிதமான இடத்தில், ச்யாவனர் என்ற முனிவர் நெடுங்காலமாகத் தவம் செய்து வந்தார். பத்மாசனத்தில் அமர்ந்தபடி, மூச்சை உள்ளிழுத்து, உணவு, தூக்கம் என்று எதைப் பற்றியும் சிந்தனை இல்லாமல் தவமிருந்து வந்தார். நாளடைவில், அவரைச் சுற்றி செடிகள், கொடிகள் பரவத் தொடங்கின. அவர் அமர்ந்திருந்த இடத்தைச் சுற்றி, எறும்புப் புற்று பரவி, அவரை மற்றவர்கள் பார்வையிலிருந்து மறைத்தது. அந்தப் பக்கம் நடந்து வருபவர்களுக்கு, செடி கொடிகளுடன் எறும்பு புற்று மட்டுமே பார்வையில் படும்.

ஒரு முறை அரசர், அரசி, இளவரசி சுகன்யா மற்றும் பரிவாரங்களுடன் ஏரிக்கரைக்குச் சென்றார். தன்னுடைய தோழிகளுடன் மரங்கள் அடர்ந்த சோலை பகுதிக்குச் சென்ற சுகன்யா, எறும்புப் புற்றைப் பார்த்தாள். அந்தப் புற்றின் நடுவில் இரண்டு ஒளிகள் தெரிந்தன. புற்றின் நடுவில் எவ்வாறு ஒளி தெரியும் என்று வியந்த சுகன்யா, இரண்டு மரக்குச்சிகளைக் கையிலெடுத்துக் கொண்டு, ஒளி தெரிகின்ற இடத்தில் குச்சியை செலுத்த முயற்சி செய்தாள்.

சுகன்யா பார்த்தது துறவியின் இரண்டு கண்களை. சுகன்யா செய்வதைப் பார்த்த துறவி ச்யாவனர், “அழகிய பெண்ணே, இங்கிருந்து விலகிச் சென்று விடு. குச்சியை செலுத்தாதே” என்று சத்தமிட்டார். துறவி சொன்னது சுகன்யாவின் காதில் விழவில்லை. இரண்டு கைகளிலும் இருந்த மரக்குச்சியை, பலம் கொண்ட மட்டும் ஒளி வந்த திசையில் செலுத்தினாள் சுகன்யா. அந்த மரக்குச்சிகள், துறவியின் இரண்டு கண்களிலும் நுழைய, வலி பொறுக்க முடியாமல் கதறினார் துறவி.

துறவியின் கூக்குரல் கேட்டு ஓடி வந்த மன்னர், வேலையாட்களைக் கொண்டு எறும்புப் புற்றை அகற்றச் சொன்னார். அங்கே, துறவி ஒருவர், இரண்டு கண்களிலிருந்தும் இரத்தம் பீரிட அமர்ந்திருந்தார். துறவியின் காலில் விழுந்த அரசரும், அரசியும், அறியாமல் மகள் செய்த குற்றத்தை மன்னிக்க வேண்டுமென்று துறவியிடம் மன்றாடினார்கள். “ஒரு தவறும் செய்யாதிருந்தும், நான் குருடனாக்கப்பட்டேன். இனி இந்த குருட்டுக் கிழவனை யார் பார்த்துக் கொள்வார்கள்” என்று கேட்டார் துறவி.

இதையும் படியுங்கள்:
மருதாணி வைத்துக்கொள்வதன் ஆன்மிக, ஆரோக்கிய நன்மைகள் தெரியுமா?
 suganya and ashwini kumaarargal

“என்னிடம் நிறைய வேலையாட்கள் இருக்கிறார்கள். அவர்கள், உங்களுடன் தங்கி, உங்களைப் பார்த்துக் கொள்வார்கள்" என்றார் அரசர். “பணத்திற்காக வேலை செய்யும் அவர்கள், என்னை சரியாகப் பார்த்துக் கொள்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கில்லை. உன்னுடைய மகளை எனக்கு மணம் செய்து கொடு. கணவரைப் பார்த்துக் கொள்வது கடமை என்ற உணர்வுடன் அவள் என்னைப் பார்த்துக் கொள்ளட்டும்,” என்றார் துறவி.

அரசன், அரசி இருவருக்குமே சுகன்யா செல்லப் பெண். அதிரூப சௌந்தரியான சுகன்யாவை, வயதான குருட்டுத் துறவிக்கு எப்படி மணம் செய்து கொடுக்க முடியும். அரண்மனையில் செல்வச் செழிப்பில் வளர்ந்த சுகன்யா, எப்படிக் காட்டில், குடிசையில் வாழ முடியும் என்று யோசித்தார்கள். அரசி துறவியைக் கேட்டுக் கொண்டாள், “சுகன்யா, இளம் பெண். மிருதுவானவள். அவளால், உங்களுக்கு எப்படி பணிவிடை செய்ய முடியும். உங்களைக் கண்ணும் கருத்துமாகப் பார்த்துக் கொள்ள, நான் ஒரு பெண்ணைத் தேர்ந்தெடுத்து உங்களுக்கு மணம் முடிக்கிறேன்.”

“இல்லை. நான் வேறு பெண்ணை மணம் செய்து கொள்ள விரும்பவில்லை. சுகன்யா செய்த தவறுக்கு, அவள்தான் என்னுடைய மனைவியாக இருந்து என் தேவைகளைப் பார்த்துக் கொள்ள வேண்டும். இதற்கு, நீங்கள் இணங்காவிட்டால், உங்கள் குடும்பத்தையும், சந்ததியையும் சபித்து விடுவேன்” என்றார். இதைக் கேள்வியுற்ற சுகன்யா, “நான் செய்த தவறுக்கு, மற்றவர்கள் துன்பப்பட விடமாட்டேன். நான் துறவியை மணந்து கொண்டு, அவருக்குப் பணிவிடை செய்ய முழு மனதுடன் சம்மதிக்கிறேன்,” என்றாள்.

சுகன்யா, துறவி ச்யாவனர் திருமணம் நடந்தேறியது. காட்டில் வசிக்கும் மற்றவர்களைப் போல எளிய உடையணிந்து, நல்ல மனைவியாக கணவனைப் பார்த்துக் கொண்டாள் சுகன்யா.

ஒரு நாள் சூரிய தேவனின் புதல்வர்கள், அசுவினி குமாரர்கள், ஏரி அதனைச் சுற்றியுள்ள இயற்கையின் அழகில் கவரப்பட்டு, எரிக்கு வந்தார்கள். அப்போது, சுகன்யா ஏரியில் குளித்து விட்டு, குடத்தில் தண்ணீருடன் ஆசிரமத்திற்குத் திரும்பிக் கொண்டிருந்தாள். தேவலோகப் பெண்களை விடவும், பூமியில் அழகான பெண்ணா என்று வியந்த அசுவினி குமாரர்கள், அவளிடம் பேச ஆசைப்பட்டனர். அவர்களின் கேள்விகளுக்கு, “என் பெயர் சுகன்யா. இந்த நாட்டு அரசர் சர்யாதியின் மகள். துறவி ச்யாவனரின் மனைவி. அவர் கண்பார்வை அற்றவர், வயதானவர். அவரைக் கண்ணும் கருத்துமாகப் பார்த்துக் கொள்வது என்னுடைய கடமை. நீங்கள் யார்? எங்கிருந்து வருகிறீர்கள். இந்த வனப் பகுதிக்கு வருகின்ற அதிதிகளை உபசரிக்க வேண்டியது எங்களுடைய கடமை,” என்று பதிலளித்தாள் சுகன்யா.

“உன்னைப் போன்ற அழகான பெண்ணை, வயதான குருட்டுத் துறவிக்கு மணம் செய்து கொடுக்க, உன்னுடைய தந்தைக்கு எப்படி மனம் வந்தது? உன்னுடைய இளமையை, ஒரு வயதானவனை மணம் புரிந்து கழிப்பதா? நாங்கள் இருவரும் கடவுள். எங்களுக்கு இறப்பு என்பதில்லை. சீக்கிரம் இறக்கப் போகும் உன்னுடைய குருட்டுக் கணவனைப் பிரிந்து, நீ ஏன் எங்களில் ஒருவனை உன்னுடைய வாழ்க்கைத் துணைவியாக தேர்ந்தெடுக்கக் கூடாது?” என்று கேட்டனர்.

இதையும் படியுங்கள்:
ஆன்மிக திருத்தலங்கள் அதிசயத் தகவல்கள்!
 suganya and ashwini kumaarargal

இதனைக் கேட்டவுடன் சுகன்யா கடும் கோபம் கொண்டாள். “எவ்வாறு உங்களால் இப்படி பேச முடிகிறது? ஒரு அழகிய வாலிபனைப் பார்த்தவுடன், கட்டிய கணவனை விடுத்து உங்கள் பின்னால் ஓடி வருவேன் என்றா நினைத்தீர்கள். நான், கோபத்தில் உங்களுக்கு சாபமிடுவதற்குள் இங்கிருந்து சென்று விடுங்கள்” என்று சீறினாள்.

“நீ தவறாக நினைக்காதே. உன்னுடைய குணத்தைப் புரிந்து கொள்வதற்கே நாங்கள் அவ்வாறு சொன்னோம். நீ கற்புக்கரசி என்பது எங்களுக்குப் புரிகிறது. உன்னைப் போன்ற பெண்களுக்கு உதவுவது எங்கள் கடமை. நாங்கள் தேவர்களின் மருத்துவர்கள். உன் கணவனின் பார்வையை நேராக்குவதுடன், அவருடைய முதுமையை நீக்கி, அவரை இளைஞராக எங்களால் மாற்ற முடியும். அதன் பின்னர், மூவரில் ஒருவரை, நீ வாழ்க்கைத் துணையாகத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். இதற்கு சம்மதித்தால், நாங்கள் உதவி செய்கிறோம்,” என்றனர்.

சுகன்யா மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தாள். கணவர் இளைஞராக மாறினாலும், தன்னால் அவரை அடையாளம் கண்டு கொள்ள முடியும் என்ற நம்பிக்கையுடன், சம்மதம் தெரிவித்தாள். கணவரிடம் நடந்ததைக் கூறி, அவரது சம்மதம் பெற்று ஏரிக்கரைக்கு கூட்டி வந்தாள். ச்யாவனரை, ஏரியில் குதிக்கச் சொன்ன அசுவினி குமாரர்கள், “ஏரியில் மூழ்கி எழுந்து வரும் போது, இளைஞராக, நல்ல கண் பார்வையுடன் வருவீர்கள்” என்று சொன்னார்கள்.

ச்யாவனர், ஏரியில் குதித்தவுடன், அவரைத் தொடர்ந்து, அசுவினி குமாரர்களும் ஏரியில் குதித்தார்கள். என்ன ஆச்சரியம்! மூவரும், ஏரியிலிருந்து எழுந்து வரும் போது, ஒரே அங்க அடையாளங்களுடன் ஒன்று போலக் காட்சி அளித்தார்கள். மூவரும் ஒருமித்த குரலில், “அழகிய பெண்ணே, எங்களில் ஒருவரை உன் கணவராகத் தேர்ந்தேடு,” என்றார்கள்.

“நான் பதிவிரதை. என்னுடைய கணவரை உண்மையாக நேசிக்கிறேன். ஆகவே, பார்வதி தேவி எனக்கு நல்வழி காட்டுவாள்” என்று மனதில் கடவுளை வணங்கிய சுகன்யா, அந்த மூவரைப் பார்த்து, “வானத்தில் இருக்கும் நட்சத்திரங்கள் எத்தனை” என்று கேள்வி கேட்டாள். “நூறு கோடியே எண்ணூற்றி இருபத்தைந்து நட்சத்திரங்கள்” என்று இருவர், ஒரே சமயத்தில் பதிலளித்தனர். இதற்கு பதிலளிக்க முடியாத மூன்றாவது நபர்தான் தன்னுடைய கணவர் என்பதை உணர்ந்து கொண்ட சுகன்யா, அவரை தழுவிக் கொண்டாள்.

தம்பதியரை மனதார வாழ்த்தி விட்டு, வானிலுள்ள தங்கள் இருப்பிடத்திற்குச் சென்றனர் அசுவினி குமாரர்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com