நரசமங்கலம் மாமண்டூர் குடைவரைகள்!

குடைவரை கோயில்...
குடைவரை கோயில்...

காஞ்சிபுரத்திற்கு அருகில் நரசமங்கலம் மாமண்டூர் பகுதியில் பல்லவ மன்னர்களின் காலத்தில் வெட்டப்பட்ட நான்கு குடைவரைகள் அமைந்துள்ளன. ஆயிரம் ஆண்டுகள் கடந்தாலும் இன்னும் அழியாமல் பல்லவ மன்னர்களின் புகழை இவை பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன.

ஒரே மலைத்தொடரில் நான்கு குடைவரைகள் அமைந்திருப்பதும் மூன்றாம் குடைவரை தமிழகத்தில் உள்ள குடைவரைகளில் மிகப் பெரிய குடைவரை என்பதும் சிறப்புகளாகும். இந்த மூன்றாம் குடைவரையானது மேலும் பல சிறப்பகளைத் தன்னகத்தே கொண்டுள்ளது. தமிழகத்தில் உள்ள குடைவரைகளில் மிக அதிகக் கருவறைகள் கொண்டதும் தமிழகக் குடைவரைகளில் இரு பக்க முகப்பு கொண்ட ஒரே குடைவரை இந்த மூன்றாம் குடைவரையாகும்.

நான்கு குடைவரைகளும் வடக்கு தெற்காக உள்ள மலைத்தொடரின் கிழக்குப் பக்கத்தில் கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ளன.

நான்கு குடைவரைகளில் மூன்றாம் மற்றும் நான்காம் குடைவரைகள் நரசமங்கலம் எல்லையிலும் முதலாம் மற்றும் இரண்டாம் குடைவரைகள் மாமண்டூர் எல்லையிலும் அமைந்துள்ளன.

முதல் குடைவரையின் முகப்பில் நான்கு தூண்களும் நான்கு தூண்களுக்கு இடையில் மூன்று திறப்புகளும் அமைந்துள்ளன. முகப்புத் தூண்களுக்கும் கருவறைக்கும் இடையில் அர்த்த மண்டபம் அமைந்துள்ளது.

ஒற்றைக் கருவறை பின் சுவற்றின் நடுவில் அமைந்துள்ளது.

கருவறையின் இருபுறமும் வாயிற்காவலர்கள் இல்லை.

கருவறையின் பின்சுவரை ஒட்டி ஒரு மேடையும் அதன் நடுவில் ஒரு குழியும் உள்ளன. மகேந்திர வர்ம பல்லவரின் கிரந்தக் கல்வெட்டு ஒன்று தென்புறச் சுவரில் உள்ளது.

இதையும் படியுங்கள்:
வாழ்க்கையில் சமரசங்கள் மிகவும் முக்கியம்!
குடைவரை கோயில்...

இரண்டாவது குடைவரையின் முகப்பில் நான்கு தூண்களுக்கு இடையில் மூன்று திறப்புகளும் அமைந்துள்ளன. இரண்டாவது வரிசையில் நடுவில் இரண்டு முழுத்தூண்களும் இரண்டு பக்கங்களிலும் சுவரை ஒட்டி இரண்டு அரைத்தூண்களும் அமைந்துள்ளன. பின் வரிசையில் அமைந்துள்ள தூண்கள் மண்டபத்தை முன்புறம் முக மண்டபம் எனவும், பின்புறம் அர்த்த மண்டபம் என மண்டபத்தை இரண்டாகப் பிரிக்கின்றன. பின்புற சுவற்றில் வடகருவறை, நடுக்கருவறை மற்றும் தென்கருவறை என மூன்று கருவறைகள் அமைந்துள்ளன. கருவறையின் இரு பக்கங்களிலும் கோட்டங்களும் வாயிற்காவலர் சிற்பங்களும் அமைந்துள்ளன. நடுக்கருவறையில் மட்டும் சிவலிங்கம் ஒன்று உள்ளது. மற்ற இரு கருவறைகளிலும் தெய்வங்கள் ஏதுமின்றி உள்ளே தரையில் குழி மட்டும் உள்ளது. முக மண்டபத்தின் வட சுவரில் முதலாம் ராஜராஜன் காலக் கல்வெட்டு ஒன்று உள்ளது.

குடைவரை கோயில்
குடைவரை கோயில்

மூன்றாவது குடைவரையானது இரு முகப்புகளைக் கொண்டுள்ளது. முதன்மை முகமானது கிழக்கு திசை நோக்கி அமைந்த முகப்பு. இதுவே குடைவரையின் உள்செல்லும் வழியாகும். இரண்டாவது முகப்பானது தெற்கு நோக்கி அமைந்துள்ளது. இதில் நான்கு தூண்கள் வெட்டப்பட்டுள்ளது. குடைவரையில் இரண்டு வரிசைத் தூண்கள் உள்ளன. முகப்பு வரிசையில் ஏழு தூண்களும் பின் வரிசையில் ஆறு தூண்களுமாக இந்தக் குடைவரையில் இரண்டு வரிசைத் தூண்கள் அமைந்துள்ளன.

பின் வரிசைத் தூண்கள் மண்டபத்தை முன்னே முக மண்டபம் பின்னே அர்த்த மண்டபம். என இரண்டாகப் பிரிக்கின்றன . மூன்றாவது குடைவரையானது முகமண்டபத்தின் பக்கங்களில் இரண்டு கருவறைகள் அர்த்தமண்டபத்தின் பக்கங்களில் இரண்டு கருவறைகள் அர்த்தமண்டபத்தின் பின்புறச் சுவற்றில் ஐந்து கருவறைகள் என மொத்தம் ஒன்பது கருவறைகளைக் கொண்டது. கருவறைகளின் உள்ளே தரையில் ஒரு குழி மட்டுமே காணப்படுகிறது.

நான்காவது குடைவரை மலையில் உச்சியில் அமைந்துள்ளது. படிக்கட்டுகள் மூலம் இந்த குடைவரையை அடையலாம். இந்த குடைவரையில் ஒரே வரிசையில் நான்கு தூண்கள் காணப்படுகின்றன. நான்கு தூண்களுக்கு இடையில் மூன்று திறப்புகள் அமைந்துள்ளன. தூண்களுக்குப் பின்னால் மண்டபத்தின் குடைவரை முடிவடையாத நிலையில் உள்ளது. இதில் கருவறைகள் எதுவும் இல்லை.

குடைவரை நடுவே கட்டுரையாசிரியர் ஆர்.வி. பதி
குடைவரை நடுவே கட்டுரையாசிரியர் ஆர்.வி. பதி

மகேந்திர பல்லவர் காலத்தில் குடைவரைகளோடு ஏரிகளும் வெட்டப்பட்டன. இந்த குடைவரையோடு கூடிய ஏரியானது சித்திரமேகத் தடாகம் என்றழைக்கப் பட்டுள்ளது. தற்போது மாமண்டூர் ஏரியாக மலையின் மறுபுறத்தில் உள்ளது.

வந்தவாசி காஞ்சிபுரம் நெடுஞ்சாலையில் வந்தவாசியில் இருந்து சுமார் முப்பது கிலோமீட்டர் தொலைவிலும் காஞ்சிபுரத்திலிருந்து சுமார் பதினைந்து கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது நரசமங்கலம் என்ற ஊர். இங்கிருநது சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளன மாமண்டூர் குடைவரைகள்.

மாமண்டூர் குடைவரைகள் இந்திய தொல்லியல் துறையினரால் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com