ஆன்மிகக் கதை - அரிகண்டமா? எமகண்டமா?

ஓவியம்; வேதா
ஓவியம்; வேதா

-பொன்னம்மாள்

ஸ்ரீரங்கம் பெரிய கோயில் பரிசாரகர் வரதன். இவர், திருவானைக்காவில் வாழ்ந்த மோகனாங்கி என்ற ஆடலழகியுடன் தொடர்பு கொண்டிருந்தார். ஒரு நாள் அவள், ''வரதன் வந்தால் உள்ளே விட வேண்டாம். அவன் சைவத்துக்கு மாறினாலே உறவு" என்று பணிப் பெண்களிடம் சொல்லிவிட்டாள். வரதன் மோகனாவின் பிரிவைத் தாங்க இயலாது, சிவதீட்சை பெற்று சைவத்துக்கு மாறினான். ஜம்புகேஸ்வரர் கோயிலில் வேலையும் கிடைத்தது.

ஒரு துறவி அம்பிகை அருள் வேண்டி இக்கோயிலில் தவமிருந்தார். அகிலாண்டேஸ்வரி அவருக்கு அருள்செய்ய வாய் நிறைய தாம்பூலத்தோடு பிரசன்னமானபோது, வந்திருப்பது அம்பிகை என்பதை அறியாத அத்துறவி, அம்பிகையின் தாம்பூல எச்சிலை ஏற்க மறுக்க, அம்பாள் கோயில் பிராகாரத்தில் வாய் திறந்து உறங்கிக் கொண்டிருந்த வரதன் வாயில் உமிழ்ந்துவிட்டு மறைந்தாள். பரிசாரகர் வரதன் கவி காளமேகமானான்.

நாகப்பட்டினத்தை அடுத்த திருமலைராயன் பட்டினத்தைத் தலைநகராகக்கொண்டு திருமலைராயன் ஆண்டு வந்தான். அவனது சபையிலே 64 புலவர்கள், 'தண்டிகைப் புலவர்கள்' என்ற சிறப்புடன் இருந்தனர். தலைமைப் புலவர் அதிமதுரக்கவிராயர். திருமலைராயனிடம் புலமையைக் காட்டிப் பரிசு பெற வருபவர்களை வஞ்சமாக, வாதில் தோற்கடித்து வந்தார்.

ஒரு நாள் திருமலைராயன் பட்டினத்தை அடைந்தார் காளமேகம். 63 பல்லக்குகள் சூழ, ஆடம்பரமான தண்டிகையில் சென்றுகொண்டிருந்தார் அதிமதுரக் கவி. 'அதிமதுரக்கவிச்சிங்கம் வாழ்க' என்ற கோஷம் எங்கும் எதிரொலித்தது. காளமேகத்தை ஒரு காவலன், "ஏன் சும்மா நிற்கிறாய்? நீயும் முழங்கு" என அதட்டினான். கவிகாளமேகம், "அவரை ஏன் போற்றி முழங்க வேண்டும்?" எனக் கேட்டு மறுத்தார். செய்தி அறிந்த கவிராயர் அரசனிடம் கூறி, காளமேகத்தை அரசவைக்கு இழுத்து வரச் செய்தார். அவரிடம், "எம் போல் நீர் விரைவாகக் கவி பாடவல்லவரோ? அரிகண்டம் பாடுவீரோ?" என்று கேட்டார் அதிமதுரக் கவிராயர்.

"அரிகண்டமென்றால் என்ன?" என்று ஏதுமறியாதவர்போல் கேட்டார் காளமேகம். "கழுத்திலே கத்தியைக் கட்டிக்கொண்டு கேட்கும் குறிப்புப்படி உடனுக்குடன் பாடவேண்டும். சொற்பிழை, பொருட் பிழை, இலக்கணப் பிழை வந்தால் கழுத்து துண்டிக்கப்படும். வென்றால் பாராட்டும், பரிசும் உண்டு" என விளக்கினார் அதிமதுரம்.

''யாம் அரிகண்டத்தில் வென்றால் நீர் யமகண்டம் பாட வேண்டும்" என்றார் காளமேகம். "யமகண்டமா? அது எப்படி?" என்று கேட்டார் அதிமதுரக்கவி.

இதையும் படியுங்கள்:
லடாக்கில் உள்ள காந்தமலையைப் பற்றி தெரியுமா?
ஓவியம்; வேதா

"பதினாறடி நீளம், பதினாறடி அகலம், பதினாறடி ஆழமுள்ள ஒரு குழியின் நான்கு முனைகளிலும் பதினாறடி உயரமுள்ள இரும்புக் கம்பங்கள் நாட்டப்பட வேண்டும். அவற்றின் மேல் நான்கு புறமும் சட்டமிட்டு, அதன் நடுவே இரண்டு குறுக்குச் சட்டங்களை இடவேண்டும். குழிக்கு மேலே இரும்புச் சங்கிலிகளிலான உறியொன்று தொங்கும். குழிநிறை விறகினைப் போட்டு எண்ணெய் கொப்பரையை வைத்து விறகுக்குத் தீயிடுவர். உறியில் போட்டியாளர் அமர வேண்டும். கீழே எண்ணெய் கொதிக்கும். பள பளப்பாகத் தீட்டிய எட்டு கத்திகளைச் சங்கிலியில் கோர்த்து உறியில் இருப்பவர் திசைக்கொன்றாக இடுப்பில் நான்கும், கழுத்தில் நான்குமாய் கட்டிக் கொள்வார். குழியின் நான்கு முனைகளிலும் நாட்டியுள்ள கம்பங்களின் அருகே நான்கு யானைகளை நிறுத்தி கத்திகள் கோர்த்த சங்கிலிகளை அவை பற்றி இறுக்கும்படி செய்வர்.

இந்நிலையில் குறிப்புகளின்படி உறியிலிருப்பவர் அரை நொடிக்குள் பொருத்தமான பாடல்களைப் பாட வேண்டும். பிழைபட்டால் கவியின் சமிக்ஞைப்படி அரசர் உத்தரவிடுவார். இடுப்பும், கழுத்தும் துண்டிக்கப்பட்டு அவர் சரீரம் கொதிக்கும் எண்ணெய் கொப்பரைக்குள் விழும். இதுவே எமகண்டம் பாடுவது. சம்மதமா?" என்றார் காளமேகம்.

"நீர் பாடுவதில் வல்லவரோ?" என்று அதிமதுரம் கேட்க, சவாலை ஏற்றார் காளமேகம். 64 புலவர்களும் குறிப்புகள் கொடுக்க, ஏற்ற பாடல்களைப் பாடி, 'இனி கவிஞர்களை அவமதிப்பதில்லை' என்ற வாக்கையே அதிமதுரக் கவிராயரிடமிருந்து பரிசாகப் பெற்றார் கவி காளமேகம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com