
ஆவணியே உன்னை அழைக்கிறோம் வா! வா!
ஐந்தாம் மாதம் ஆவணியேயுன்னை
ஆவல்கொண்டே அழைக்கிறோம் வா! வா!
ஆடிமாத அத்தனை சிறப்பையும்
எழுதினோம்!..படித்தோம்!..
இன்பம் மிகக்கொண்டே
கொண்டாடி மகிழ்ந்தோம்
குவலயம் போற்றிட!
ஆனாலும் ஆடியே…
புதுமணத் தம்பதியர்…
“போய்விடு விரைவில்”என்று
விடுகின்ற பெருமூச்சே
விரைந்து மேலெழுந்து
வெப்பமாய் மாறியதோ!
வியர்க்கவும் செய்கிறதோ?
கல்யாணம் செய்திடவே
காத்திருக்கும் இளவயதினரும்
ஆவணியை எதிர்நோக்கி
ஆவலுடன் காத்திருக்க…
ஆடிபோட்ட பிரேக்கை
ஆவணியே ரிலீசாக்கும்!
அதுமட்டும் சிறப்பல்ல…
ஆவணி ஞாயிறுகள்
அத்தனைக்கும் தனிச்சிறப்பாம்!
ஆவணியில்வரும் மூலமே
சிறப்பு மிகக் கொண்டதென்று
ஏடுகள் அத்தனையும்
எடுத்தியம்பி வருகின்றன!
மாதங்களின் அரசனென்று
மகிழ்வுடனே போற்றுகின்றன!
அன்றைய நல்தினத்தில்
ஆலகால விஷமுண்ட
சிவன்தனை வணங்கிடவே
சீராகுமாம் நம்வாழ்வு!
கதிரவன் தானும்
கனமான சிம்மராசியில்
சஞ்சரித்தே வருவதால்
சிங்கமாதம் என்ற
சிறப்புமுண்டு ஆவணிக்கு!
விநாயகரும் கிருஷ்ணரும்
அவதாரம் எடுத்த
அற்புத மாதமிதாம்!
வீடுகட்ட…குடிபுக…
மிகவுகந்த மாதமிதாம்!
தாலியைக்கட்டி பெண்ணைத்
தனதாக்கி மகிழ்ந்திருக்க
ஏற்ற மாதமிதாம்
எள்ளளவும் குறையற்றதாம்!
தாலிகட்ட… வீடுகட்ட…
தரமானவீட்டில் குடிபுகவென…
வாழ்க்கையின் அத்தனை
வளங்களுக்கும் வித்திடும்
ஆவணியே நீ வருக!
ஆனந்தத்தை அள்ளித்தருக!
அவணி(ஆவணி)என்ற சொல்லுக்கு
பூமியென்றும் நல்லதென்றும்
புகழுடைய பெண்ணென்றும்
பல்வேறு அர்த்தங்களைப்
பகிர்கின்றன பழம்நூல்கள்!
ஆவணியேநீ வந்திடுக!
அனைத்து மக்களுக்கும்
அமைதியையே தந்திடுக!