அபூர்வக்கோல முருகத் திருத்தலங்கள்!

அபூர்வக்கோல முருகத் திருத்தலங்கள்!

குமரக் கடவுள் ஒரு கையில் வில்லுடனும் மறு கையில் வேலுடனும் காட்சி தரும் திருத்தலம் திருவிடைக்கழி. மயிலாடுதுறை – தரங்கம்பாடி வழித் தடத்தில் அமைந்துள்ளது.

முருகப் பெருமான் கையில் மாம்பழத்தோடு காட்சி தரும் திருத்தலம் திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர் ஆலயம்.

ஸ்ரீ முருகப்பெருமான் இரண்டு முகங்கள், எட்டு கரங்களுடன் சென்னிமலையில் காட்சி தருகிறார். இந்தக் கோயிலுக்கு மேல் காகங்கள் பறப்பதில்லை.

முருகன் தலைக்கு மேல் ஐந்து தலை நாகம் குடைபிடிக்க, நஞ்சன்கூடு நஞ்சுண்டேஸ்வரர் ஆலயத்தில் அருள்பாலிக்கிறார். இந்தக் கோயில் கர்நாடக மாநிலத்தில் அமைந்துள்ளது.

கும்பகோணத்தில் அமைந்துள்ள, ‘வியாழ சோமேஸ்வரர்’ ஆலயத்தில் ஸ்ரீ முருகப் பெருமான் காலில் பாதரட்சை அணிந்தபடி காட்சி தருகிறார்.

திருவையாறு ஐயாரப்பன் சன்னிதி பிராகாரத்தில் கையில் வில், அம்போடு முருகப்பெருமான் தனுசு சுப்ரமண்யராக அருள்பாலிக்கிறார்.

திருப்போரூர் முருகன் கோயில்
திருப்போரூர் முருகன் கோயில்

திருப்போரூரில் முத்துக்குமார சுவாமியாய் காட்சி தரும் முருகப் பெருமான், இடது காலை தரையில் ஊன்றி, வலது காலை மயில் மீது வைத்து, இடது கையில் வில்லும், வலது கையில் அம்பும் ஏந்தியபடி போருக்குப் புறப்படும் கோலத்தில் காட்சி தருகிறார்.

நாமக்கல் மாவட்டம், பேளுக்குறிச்சி என்னுமிடத்தில் முருகன் வேடன் வடிவில் காட்சி தருவது விசேஷம். இந்த வேடர் வடிவ முருகன் சிலையில் வியர்வை துளிர்ப்பது வியப்பான ஒன்று.

மகாபலிபுரம் அருகே வளவன்தாங்கல் திருத்தலத்தில் முருகப்பெருமான் தண்டாயுதபாணியாய் காட்சி தருகிறார். அவர் கண்களிலிருந்து நீர் வருவது வியப்பு.

மயிலாடுதுறை – திருவாரூர் சாலையில் உள்ள நெய்குப்பை என்ற ஊரில் அம்மன் கையில் கைக்குழந்தையாக அமர்ந்தபடி காட்சி தருகிறார் பாலமுருகன்.

திருநனிப்பள்ளி, திருக்குறுங்குடி ஆகிய தலங்களில் முருகப்பெருமான் மூன்று கண்களுடனும் எட்டு கரங்களுடனும் காட்சி தந்து அருள்புரிகிறார்.

புதுக்கோட்டைக்கு அருகில் உள்ளது ஒற்றைக்கண்ணனூர் திருத்தலம். இங்குள்ள பழைமை வாய்ந்த கோயிலில் முருகப்பெருமான் ஒரு கரத்தில் ஜப மாலையுடனும் மறு கரத்தில் ‘சின்’ முத்திரையுடனும் காட்சி தருவது விசேஷம்.

காட்டி சுப்ரமணியா
காட்டி சுப்ரமணியா

முருகப்பெருமான் பாம்பு வடிவில் காட்சி தரும் திருக்கோயில், ‘காட்டி சுப்ரமணியா’ எனும் குக்கே சுப்ரமண்யா திருத்தலமாகும். இது கர்நாடக மாநிலத்தில் அமைந்துள்ளது. இப்பகுதியில் பாம்புகள் யாரையும் தீண்டுவதில்லை. அதுபோல், பாம்பைக் காணும் யாரும் அதைத் துன்புறுத்துவதுமில்லை.

கனககிரி எனும் திருத்தலத்தில் அமைந்துள்ள முருகன் கோயிலில் கந்தபெருமான் தமது திருக்கரத்தில் கிளியை ஏந்தியபடி காட்சி தருகிறார்.

செம்பனார்கோவில் திருத்தலத்தில் முருகப்பெருமான் ஜடாமகுடம் தாங்கி, இரண்டு கைகளிலும் அக்கமாலை கொண்டு தவக்கோலத்தில் காட்சி தருவது சிறப்பு.

தனது மாமன் திருமாலைப் போல் முருகப்பெருமானும் தம் திருக்கரங்களில் சங்கு, சக்கரம் ஏந்தி காட்சி தரும் ஆலயம் கும்பகோணம் அருகில் அழகாபுத்தூர் என்ற இடத்தில் அமைந்துள்ளது.

பூம்புகார் அருகே, மேலையூரில் திருச்சாய்க்காடு (இலுப்பை வனம்) சாயாவனேஸ்வர்ர் ஆலயத்தில் முருகப்பெருமான் வில், அம்பு ஏந்திய கோலத்தில் பஞ்சலோக சிலை வடிவில் அருள்பாலிக்கிறார்.

ஜோலார்பேட்டை, ஏலகிரி மலையில் ஜலகாம்பாறை எனுமிடத்தில் உள்ள முருகன் கோயிலில் விக்ரஹம் ஏதும் இல்லை. ஏழு அடி உயர வேல் மட்டும்தான் காட்சி தருகிறது. வேல் வடிவில் வேலவனை தரிசிக்கும் வித்தியாசமான ஆலயமிது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com