ஆச்சார்யாள் அருளுரை!

ஆச்சார்யாள் அருளுரை!

மீபமாக ஊடகங்களில் காட்டப்படும் விபத்துகள் மனதைக் கலங்க வைத்து வேதனைத் தருகின்றன. அதைக் காட்டிலும், அந்த நிகழ்வை சற்றும் இரக்கமின்றி வேடிக்கை பார்ப்பதுடன் ரத்தம் சொட்டுவதையும் கத்தியால் வெட்டுவதையும் விலங்குகளால் கடிபடுவதையும் சக உயிரின் வேதனையை அலைபேசியில் படம் பிடித்து அதனை பொதுவெளியில் பகிர்வதும் மிக அதிக வேதனையைத் தருகிறது. கருணை எனும் பண்பு மனிதரிடையே குறைந்து வருகிறதா எனும் கேள்வி அதிகமாகிறது.

    தயை அல்லது கருணையைப் பற்றி ஆன்மீகப் பெரியவர்கள் பல நல்ல தகவல்கள் கூறி சொல்லி வழிகாட்டியாக இருந்தனர் அன்று. இன்றோ அந்த இடத்தையும் பிடித்துக்கொண்டது இணையதளம் எனும் உலகம். நாமும் இதன் மூலமாகவே படித்துத் தெளிய, இதோ கருணை பற்றி ஆச்சார்யாளின் அருளுரை...

  “மனிதனுடைய வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டிய குணங்களில் ஒன்று தயை அதாவது கருணை. ஒவ்வொரு மனிதனுக்கும் வாழ்க்கையின் இன்பமும்  துன்பமும் வந்துகொண்டு இருக்கும். துன்பத்தில் இருப்பவனுக்கு உதவி செய்ய வேண்டியது மிகவும் தேவை. அந்த உதவி செய்ய வேண்டும் என்று எண்ணம் உள்ளத்தில் தோன்றும் தயை மிகவும் அவசியம். பகவானைக் கருணைக்கடல் என்று சொல்வது உண்டு. ஏனென்றால் அவருடைய தயைக்கு எல்லையே இல்லை. அந்த தயை  காரணமாகத்தான் பகவான் எத்தனையோ அவதாரங்கள் எடுத்து உலகத்தைக் காப்பாற்றுகிறார்.

      இந்த தயையினால் பிறருக்கு உதவி செய்கின்ற சமயத்தில் பிறரிமிருந்து வேறு உதவியை எதிர்பார்க்கக்கூடாது. அப்பொழுதுதான் அவனை உத்தமமான மனிதர் என்று கூற முடியும். அவன்தான் சத்புருஷன். சிஷ்யனுக்கு குரு உபதேசம் செய்தது தயையால்தான்.

     பகவத்பாதாள் குருவை “ஸமாஸாத்ய தயா ஸிந்தும் குரும் ப்ரம்ஹவிதுத்தமம்” என்று சொன்னார். எல்லோரும் இந்த தயை என்ற குணத்தை பழகிக்கொள்ள வேண்டும். பிறருக்கு சிறிய உதவி செய்தாலும் அதற்கும் பலன் உண்டு. பிறரைப் பற்றி நல்ல வார்த்தை சொன்னால் அதுவும் ஒரு உபகாரம் ஆகும்.

     சிறு வயதிலிருந்து இந்த நல்ல குணத்தை குழந்தைகளின் மனதில் உண்டாக்க வேண்டும். பள்ளி பருவத்திலேயே, கூட இருக்கும் குழந்தைகளுக்கு தன்னால் ஆன உதவிகளை செய்ய குழந்தைகள் கற்றுக்கொள்ள வேண்டும். இரண்டு பேர் சண்டை போட்டுக் கொண்டிருந்தால்  அவர்கள் இருவரையும் சமாதானம் செய்ய முயற்சி செய்வது மிகவும் அவசியம். தயை இருப்பவனுக்குத்தான் அது முடியும்.

     ஒரு பெரிய வேலையில் தன் இருப்பவன் தன்னிடம் உதவி கேட்டு யாராவது வந்தால் அவனுக்கு நியாயமான முறையில் உதவி செய்ய வேண்டும். இப்படி மனித வாழ்க்கையில் உதவி செய்ய எத்தனையோ வாய்ப்புகள் கிடைத்துக்கொண்டிருக்கும். அச்சமயத்தில் உதவி செய்யாமல் இருந்தால் கிடைத்த நல்ல வாய்ப்பை அவன்  தவறவிட்ட மாதிரி ஆகும். அது விவேகமாகாது ஆகையால் எல்லோரும் தனக்கு முடிந்த அளவில் அவர்களுக்கு உதவி செய்து பகவானின் அருளுக்கு பாத்திரமாகட்டும்.”

    ஆச்சரியாள் கூறியதைப்போல ஒவ்வொருவருக்கும் உதவி செய்ய பல வாய்ப்புகள் உள்ளன. அதை விடுத்து கருணையின்றி இருப்பதால் நமது நிம்மதிதான் பறிபோகும் என்பதை உணர்வோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com