அச்சுதன் ஆராதிக்கும் ஆறு பேர்!

அச்சுதன் ஆராதிக்கும் ஆறு பேர்!
Published on

ருக்மணி தேவியின் மனதை வருடிக்கொண்டிருந்த சந்தேகத்தை எப்படியும் அன்று பகவானிடம் கேட்டு விடுவது என்று முடிவு செய்திருந்தாள். அது என்ன சந்தேகமாக இருக்கும் என்று எண்ணத் தோன்றுகிறதல்லவா? என்றைக்கும் போல் அன்றும் பகவான் இரு கைகளையும் கூப்பிக்கொண்டு யாரையோ வணங்கிக் கொண்டிருந்தார். ருக்மணி தேவி மெதுவாக பதியின் பக்கம் சென்றாள். அவர் வேண்டுதல் முடியும் வரை பொறுமையாகக் காத்திருந்து விட்டு மெதுவாக பகவானிடம் கேட்டாள்.

"அன்பரே, தினமும் நான் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறேன். உலக மக்கள் அனைவரும் உங்களை ஆராதிக்கும்பொழுது, நீங்கள் யாரை தினமும் இருகரம் கூப்பி வணங்கிக் கொண்டிருக்கிறீர்கள் என்று எனக்குப் புரியவில்லை. அந்த ரகசியத்தை நான் அறிந்து கொள்ளலாமா?" என்றாள்.

மகாவிஷ்ணு மந்தகாசமாக சிரித்துக்கொண்டார். "ருக்மணி நீ அறியக் கூடாத ரகசியம் என்று எனக்குள் எதுவுமே கிடையாது. கூறுகிறேன்… கேட்டுக்கொள். நான் தினமும் ஆறு பேர்களை மனதார ஆராதிக்கிறேன். அவர்கள்: 1. நித்ய அன்ன தாதா,
2. தருணாக்னிஹோத்ரி, 3. வேதாந்த வித், 4. சந்திர சகஸ்ர தர்சீ, 5. மாஸோபாவாசீச, 6. பதிவ்ரதா” என்றார்.

அந்த ஆறு பேர்களை ருக்மணி தேவியும் வணங்கிக் கொண்டாள். இந்த ஆறு பேர்கள் யார்? ஏன் இவர்களை பகவான் தினமும் வணங்க வேண்டும்? என்பது குறித்துக் காண்போம்.

நித்ய அன்ன தாதா (தினமும் அன்னதானம் செய்பவர்கள்): முற்காலத்தில் தனக்கு வரும் வருமானத்தில் ஆறில் ஒரு பகுதியை அரசருக்கு, அதாவது அரசாங்கத்துக்கு கொடுத்துவிட்டு மீதி ஐந்து பகுதியை, இறந்து தென்திசையில் வாழும் முன்னோர்கள், நம் வீட்டுக்கு வரும் விருந்தாளிகள், வீட்டில் வளர்க்கப்படும் பசு, பட்சி போன்ற பிராணிகள் மட்டுமல்லாமல், எறும்பு போன்ற ஜீவராசிகள், சுற்றத்தார் மற்றும் தன் குடும்பம் ஆகிய ஐந்து யக்ஞங்களைச் சரிவர செய்து, நல்ல முறையில் பராமரிப்பவர்கள்.

தருணாக்னிஹோத்ரி: அந்தக் காலத்தில் ஏழு வயதிலேயே பூணல் போட்டு விடுவார்கள். அப்படிப் பூணல் போட்ட குழந்தைகள், தினமும் சமிதா தானம் என்று கூறப்படும் சமித்துடன் நெய்யைச் சேர்த்து, மந்திரம் கூறியபடி அக்னியில் ஆகுதி கொடுப்பார்கள். குரு குல வாசம் முடிந்தவுடன் இளம் வயதிலேயே பிரம்மசாரிக்கு திருமணம் செய்து வைத்து விடுவார்கள். திருமணம் ஆனபின் அவன் ஔபாசனம் என்னும் அக்னி காரியத்தை சரிவரச் செய்ய வேண்டும். அப்படி செய்பவர்களே இவர்கள்.

வேதாந்த வித்: வேதங்கள் ரிக், யஜூர், சாமம், அதர்வணம் என நான்கு வகைப்படும். இந்த நான்கு வேதங்களையும் நன்கு கற்றுத் தெளிந்தவர்கள், வேதத்தின் அந்தம் அதாவது முடிவு என்று கூறப்படும் உபநிஷத்துக்கள் ஆகியவற்றைக் கற்றவர்கள் வேதாந்திகள் எனப்படுவார்கள். அத்தகைய வேதாந்திகள்.

சந்திர சகஸ்ர தர்சீ: சிவபெருமானின் சிரசில் இருப்பது மூன்றாம் பிறை சந்திரன். பொதுவாக, அமாவாசைக்கு பிறகு வரும் மூன்றாம் நாளில் இப்பிறை சந்திரன் வானில் தோன்றும். அப்படிப்பட்ட பிறை சந்திரனை ஆயிரம் முறை தரிசனம் செய்தவர்கள் ஆயிரம் பிறை கண்ட அபூர்வ மனிதர்கள். மூன்றாம் பிறை சந்திரனை ஆயிரம் முறைகள் காண வேண்டும் என்றால் 81 ஆண்டுகள் ஆகும். அத்தனை பிறைகளைக் கண்டவர்கள் அத்தனை முறைகள் சிவபெருமானை ஆராதித்து இருப்பார்கள். அப்படி 81 ஆண்டுகளைக் கழித்தவர்கள், சதாபிஷேகம் செய்து கொள்வார்கள். அப்படிப்பட்ட பூரண ஜீவன்கள்.

மாஸோபாவாசீச: ஒரு மாதத்தில் இரண்டு ஏகாதசிகள் வருவதுண்டு. அதைத் தவிர, சங்கடஹர சதுர்த்தி, கந்தர் சஷ்டி விரதம், சிவராத்திரி போன்ற முக்கியமான நாட்களில் உபவாசம், அதாவது உண்ணாமல் நோன்பு இருந்து விரதத்தை முடிப்பவர்கள்.

பதிவ்ரதா: ஆறாவதாக, பதிவ்ரதா விரதத்தை அனுசரிக்கும் மாந்தர்களை பகவான் மிகவும் போற்றுகிறார். த்ரிகரண சுத்தியுடன், அதாவது மனம், வாக்கு, காயம் போன்ற மூன்றிலும் சுத்தமாக இருந்து, கணவனே கண்கண்ட தெய்வம் என்று நடந்து கொண்டு, மனதால் கூட பிற ஆண்களை நினைக்காமல் வாழும் பத்தினி பெண்கள் ஆகிய இந்த ஆறு பேர்களும் என் போற்றுதலுக்கு உரியவர்கள். இவர்களை நான் தினமும் ஆராதனை செய்கிறேன்" என்று ருக்மணி தேவியிடம் மகாவிஷ்ணு கூறியதாகப் பொருள்.

ஜகத்தைக் காக்கும் பரம்பொருளே, இந்த ஆறு பேர்களை தினமும் வணங்கும் பொழுது மானிடர்களாகிய நாம் இந்த ஆறு பேர்களை எங்குக் கண்டாலும் வணங்க வேண்டும் என்பது புரிகிறதல்லவா? பகவானுக்குப் பிடித்ததை நாம் செய்தால் நம்மையும் பகவானுக்குப் பிடிக்கும் என்பதில் ஐயமில்லை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com