ஆதிசங்கரர், அத்வைத வேதாந்தத்தை நிலைநாட்ட வாதம் செய்தார்.

ஆதிசங்கரர், அத்வைத வேதாந்தத்தை நிலைநாட்ட வாதம் செய்தார்.
kalki
kalki

ண்டனரின் இருப்பிடம் தேடி வந்த சங்கரர்,அவர் வீடு எங்குள்ளது என வழியில் சில பெண்மணிகளிடம் கேட்டார். அந்த பெண்மணிகள் மண்டனரின் வீட்டில் வேலை செய்யும் பணிப்பெண்கள். அவர்கள் சொன்ன அடையாளம் மீமாசா சாத்திரங்களில் மண்டனர் எத்தனை பற்றினை உடையவர் என்பதையும், பல சீடர்களுக்கு அவர் போதித்து வருவதையும் குறிப்பிடுபவையாக உள்ளது.

"ஐயா... எந்த வீட்டு வாசலில் கட்டியிருக்கும் கூண்டுகளில் வளர்க்கப்பட்டுள்ள பெண் கிளிகள்... வேதம் ஆதாரச் சான்றாக விளங்குவது தனக்குத் தானாகவா... அல்லது பிறவற்றின் சார்பாகவா... என்று திரும்பத் திரும்ப கூறிக் கொண்டிருக்கின்றனவோ அதுதான் மண்டனரின் வீடு" என்று கூறினர்.

"யாக யக்ஞங்கள் போன்ற செயல்களுக்குப் பயனை அந்தக் கர்மங்களே கொடுக்குமா அல்லது கடவுள் கொடுப்பானா" என்றும்...

"இந்த உலகம் சாசுவதமாக இருப்பதா அல்லது தோன்றி மறையும் தன்மையாக நிலையற்றதா?" என்றும் அந்தக் கிளிகள் பேசிக் கொண்டிருக்கும்" என்றும் சொன்னார்கள்.

சங்கரர், மண்டனரின் வீட்டிற்கு வந்த போது... வீட்டுக் கதவுகள் மூடப்பட்டிருந்தன. அன்று மண்டனர் சிரார்த்தம் செய்யும் தினம். வீட்டிற்குள் சிரார்த்தம் நடந்து கொண்டிருந்தது. அதைக் கண்ட சங்கரர் தன் யோக சக்தியால் வீட்டிற்குள் புகுந்து நடுக்கூடத்தில் வந்து நின்றார்.

‘விசுவரூபர்’... என்ற மறுபெயர் கொண்ட மண்டனர், சிரத்தையுடன் செய்து கொண்டிருந்த பித்ரு காரியத்தினிடையில் வந்து நின்ற சந்நியாசியை பார்த்து மிகவும் கோபம் கொண்டார். சங்கரரைக் கடுமையான வார்த்தைகளால் கடிந்தார்.

கர்மங்களை விட்டொழித்து, குடுமியும்... பூணூலும் பாரமென்று அகற்றிவிட்ட சந்நியாசி, இல்லறத்தான் ஒருவர் இறந்து போன, தன் பித்ருக்களுக்கு செய்யும் சிரார்த்த கர்மத்தில் இடையே, அழைக்காமல் நுழைந்து வந்து நிற்பது தகாத செயலாகும். ஆனால்... சிரார்த்த காலத்தில் திதி கொடுப்பவனோ... போஜனம் செய்பவர்களோ கோபிக்கக் கூடாது என்பது அறநூல் விதி. இதை அறிந்தும் மண்டனர் மிகவும் கோபத்துக்கு ஆளாகி விட்டார்.

சந்நியாசமும், கர்மங்களை விட்டொழிக்கும் வேதாந்தமும் அவருக்குப் பிடிக்காதது. தவிர்த்து அந்த சிரார்தத்திலே வியாசரும், ஜைமினியும் அமர்ந்திருந்தனர்.

அவர்கள், மண்டனருக்கு கோபப்படாமல் இருக்குமாறு அறிவுரை கூறினர். சங்கரரையும் உணவு அருந்துமாறு வேண்டினர். மண்டனரும், தன் பிழையை உணர்ந்து சங்கரர், பிக்ஷையிய ஏற்று அருளுமாறு வேண்டிக் கொண்டார்.

ஆனால், சங்கரரோ தான் பிக்ஷைக்கு வரவில்லை என்றும் வாதபிக்ஷைக்கு வந்துள்ளதாகவும் கூறினார்.

மண்டனரும் அதை ஏற்றுக் கொண்டு, நாளை மறுநாள் முதல் வாதத்திற்குத் தயார் என்றார்.

வாதப்போரில், மண்டனர் தோற்றால், அவர் மீமாம்சைக் கருத்தை விட்டு (கர்மங்கள் வேத தர்மங்கள் என்பது), துறவிகளுக்கான வேதாந்தத்தை ஏற்று தூறவி ஆக வேண்டும் என்றும், சங்கரர் தோற்றால்,அவர் துறவை கோலத்தை விட்டு... செய்ய வேண்டிய பிராயச்சித்தத்தை செய்து கொண்டு... வெள்ளை உடுத்தி கர்ம மார்க்கத்தை கடைபிடிக்க வேண்டும் என்றும் ஒப்பந்தம் செய்து கொண்டனர்.

இவர்கள் வாதப் போரில், மண்டனரின் மனைவியும், மிகுந்த புலமை உள்ளவருமான ஸரஸவாணியே நடுவராக இருப்பார் என்பதையும் ஒப்புக் கொண்டனர்.

மண்டனரின் மனைவி கலைமகள் அவதாரம். அவருக்கு சாரதா பாரதி, உபய பாரதி, த்வய பாரதி என்ற பெயர்களும் உண்டு.

வாதப்போர் தொடங்கி... பல நாட்கள் நடந்தது. இவர்கள் இருவருக்கும் உரிய வகையில் உணவு வகைகளையும், வேறு வீட்டு வேலைகளையும் செய்ய வேண்டியிருந்ததால்... இரண்டு பூமாலைகளை கொணர்ந்து, இருவரையும் அணியச் செய்து, யாருடைய மாலை முதலில் வாடுகிறதோ, அவரே வாதத்தில் தோற்றவர் ஆவார்...என அறிவித்து தன் காரியங்களில் ஈடுபடலானார் அவர்.

வேத தர்மத்தின் நோக்கம், பயன் ஆகியவற்றைப் பற்றி விவாதம் தொடங்கியது. மண்டனர் கர்மங்களை வற்புறுத்தி, வேதத்தை விளக்கும் பூர்வ மீமாசையை ஸ்தாபிக்க வாதாடினார்.

சங்கரர், அத்வைத வேதாந்தத்தை நிலைநாட்ட வாதம் செய்தார்.

“அந்த நாட்களில் உணவு நேரம் வரும் போது ஸரஸவாணி தன் கணவரிடம், சாப்பிட வருமாறும், சங்கரரிடம் "பிக்ஷை ஏற்று அருளுமாறும்” அழைப்பார்.”

ஒவ்வொரு நாளும் வாதம் முடியும் போதும் மண்டனரின் வாதம் மெல்ல மெல்ல வலுவிழந்தது. கண்களுக்குத் தெரிந்தது. தன் கணவர் தோற்று விடுவார் என்பதை ஸரஸவாணி உணர்ந்தார். கடைசியில் அவர் அணிந்திருந்த மாலை வாடியும், வதங்கியும் தெரிந்தது. ஆகவே, தன் கணவர் தோற்றுவிடுவார் என்றும்.., ஒப்பந்தபடி அவர் இல்லறத்தைத் துறந்து துறவியாகும் நேரம் வந்துவிட்டது என்றும் ஸரஸவாணி உணர்ந்தார்.

அடுத்து அவர், அவர்களை உணவுக்கு அழைக்கையில்..இருவருக்கும் சேர்த்து ஒன்றாக "இருவரும் வந்து பிக்ஷையை ஏற்று அருள்வீராக" என அழைத்தாள்.

தன் தோல்வியை ஒப்புக் கொண்ட மண்டனர், “அத்வைத தத்துவத்தை ஒருவராலும், ஒரு போதும் மறுக்க முடியாது” என்ற உண்மை நிலையை புரிந்து கொண்டு, “தனக்குச் சந்நியாச ஆசிரமத்தைத் தந்து தன்னை சீடராக ஆக்கிக் கொள்ளுமாறு” வேண்டினார். சங்கரரும் அப்படியே அவருக்கு சந்நியாசம் தந்து, 'சுரேசுவர்' என்ற ஆசிரமப் பெயரை அளித்தார்.

சங்கரரின் விரிவுரைகளுக்கு “வார்த்திகம்” என்று செய்யுள்களால் ஆன பேருரைகள் எழுதியதால் சுரேசுவரர் “வார்த்திககாரர்” என்ற பெரும் புகழையும் பெற்றார்.

அவர் எழுதிய வார்த்திகங்களில் மிகவும் பெருமையும், அருமையும் உடையவை ‘பிருஹதாரண்யகம்’ என்ற அளவாலும், பொருளாலும் மிகப் பெரிய உபனிஷத்துகளின் சங்கர பாஷ்யத்துக்குரிய வார்த்திகமும், தைத்தரிய உபநிஷத பாஷ்யத்தின் வார்த்திகமும் ஆகும்.

(மண்டனர் தோற்பதை அறிந்த ஸரஸவாணி, சங்கரரை காமசூத்திரம் பற்றிக் கேள்வி கேட்டார்...

என்றும்,பிரம்மச்சாரியாக இருந்து, மிகவும் இளம் பருவத்திலேயே துறவியாகிவிட்ட சங்கரர், ஸரஸவாணி கேட்ட கேள்விக்கு விடையளித்து அவரையும் வென்றாலின்றி மண்டனரை வென்றதாகாது என்பதால் காமசூத்திரத்தை அனுபவித்துக் கற்பதற்காக, ‘அமருகன்’ என்ற ஒரு அரசனின் இறந்த உடலில் தனது யோக சக்தியால் கூடுவிட்டு கூடு பாயும் செயலைச் செய்து,அவருக்கு விடையளித்து வென்றதாக இல்லாத இரு கதையை இடைச்செருகலாகச் சிலர் சேர்த்து கூறியுள்ளனர்)

தன் கணவரைப் பின்பற்றி ஸரஸவாணியும்,சங்கரருக்கு பணிபுரியும் பரிவாரத்தில் ஒருத்தி ஆனார்.

(தொடரும்)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com