அடிமைக்காவு அய்யப்பன்!

எங்கள் குல தெய்வம்!
அடிமைக்காவு அய்யப்பன்!

த்தன கோவில்கள் சென்று எத்தனை தெய்வங்களை வணங்கினாலும் 'குலதெய்வ' வழிபாடு மிகவும் முக்கியம் என்பது எல்லோரும் அறிந்தது தான்.

என் புகுந்த வீட்டினர் கேரள மாநில பாலக்காட்டைச் சேர்ந்தவர்கள்.  திருமணமாகி சில வருடங்களுக் குள்ளேயே என் மாமியாரும் மாமனாரும் சென்னைக்குக் குடி வந்து விட்டனர்.  பிறகு வருடக்கணக்கில்  ஊர் பக்கம் போக முடியாமல் போய் குல தெய்வ வழிபாடே நின்று விட்டது.

குடும்பத்தில் எல்லோருக்கும் கல்யாணமாகி பேரக் குழந்தைகளும் வந்த பிறகு தான் குல தெய்வத்தை தரிசிக்கும் கொடுப்பினையே கிடைத்தது. அதாவது தன்னுடைய நாற்பதாவது வயதில்தான் என் கணவர்,  மனைவி குழந்தைகளுடன் சேர்ந்து குலதெய்வத்தை முதன் முறையாக தரிசித்தார்.

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் கூத்தனூர் என்னும் சிறு கிராமத்தில் உள்ள 'அய்யப்பன் காவு' என்ற இடத்தில் தான் எங்கள் குலதெய்வம் அய்யப்பன் குடி கொண்டுள்ளார்.  பரம்பரை பரம்பரையாக பாலக்காடு நகரிபுர கிராமத்தைச் சேர்ந்த சில குடும்பங்களும், கூத்தனூரிலுள்ள சில குடும்பங்களும் குல தெய்வமாக வழிபடும் 'அய்யப்பன் காவு' என்கிற கோவில் இது.  கேரளாவில் பெரிய கோவில்களை 'அம்பலம்' என்றும் சிறிய கோவில்களை 'காவு' என்றும் சொல்வது மரபு.

'அய்யப்பன் காவு' என்பது தனியான ஒரு கோவில் இல்லை. பரம்பரை பரம்பரையாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தங்கள் இல்லத்திலேயே ஒரு பக்கத்தில் அய்யப்பனுக்கு சன்னிதி ஏற்படுத்தி அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரே பூசாரியாகவும் இருந்து வருகிறார்.  பசுமையான மரங்களால் சூழப்பட்ட இந்த இல்லத்திலுள்ள ஒரு மாமரம் 140 வருடம் பழைமையானது.  தங்கள் இல்லத்தின் முன் பகுதியை கோவிலுக்கு ஒதுக்கி விட்டு,  பின் பகுதியில் பூசாரி குடும்பத்தினர் வசிக்கிறார்கள்.  இப்போது நான்காவது தலைமுறையைச் சேர்ந்த 70 வயதான திரு பழனப்பன் என்பவர் அய்யப்பன் பூஜையை கவனித்துக் கொள்கிறார்.  இவரும் முழு நேர பூசாரி இல்லை.  காலையில் வழிபாடு முடித்து விவசாய வேலைக்குச் சென்று நண்பகலில் தான் திரும்புவார். பிறகு மாலை வழிபாடு நடக்கும்.  நாங்கள் சென்னையிலிருந்து செல்லும்போது முன் கூட்டியே அவருக்குக் கடிதம் எழுதி இன்ன தேதிக்கு வருகிறோம் என்று அறிவித்து விட்டு தான் கிளம்புவோம்.

சின்னஞ்சிறு விக்கிரமாக இருப்பினும் நின்ற நிலையில் கையில் கத்தியை ஏந்திக் கொண்டு வீரத்திருவுருவமாகக் காட்சியளிக்கும் அய்யப்பனின் அழகே அழகு.  பக்கத்து சன்னிதியில் கருணையே உருவாக பகவதி அம்மன்.

140 வருஷ பழமையான ஐயப்பன் கோயில் முகப்புத் தோற்றம்
140 வருஷ பழமையான ஐயப்பன் கோயில் முகப்புத் தோற்றம்

'அடிமைக் காவு அய்யப்பன்' என்று இந்த சுவாமியை அழைக்கிறார்கள்.  அதாவது இவரை குலதெய்வமாக ஏற்றுக் கொண்டு வழிபடும் குடும்பத்தினர் இவருடைய அடிமைகளாவர்.  இதைக் கேள்விப் பட்டதும் நாங்கள் மெய்சிலிர்த்துப் போனோம். ஹரிஹர சுதன் அய்யப்பன் எங்களை தன்னுடைய அடியவர்களாக தாமகவே முன் வந்து ஏற்றுக் கொள்வது எங்கள் முன் ஜென்ம நல்வினைகளால் அன்றோ என்று அகமகிழ்ந்து போனோம்.

குடும்பத்தில் ஒவ்வொரு நபரையும் கணக்கிட்டு நபர் ஒருவருக்கு அவருடைய ஜென்மம் முழுமைக்கும் 25 பைசா வீதம் கணக்கிட்டு படிப்பணம் என்று வசூலிக்கிறார்கள். குடும்பத்தில் புதியதாக ஒரு குழந்தை பிறந்தால் அதற்கும் படிப்பணம் கட்ட வேண்டும்.  அந்தப் பணத்தையும் பூசாரி கையில் கொடுக்கக் கூடாது.  அய்யப்பன் சன்னிதியின் படியில் தான் வைக்க வேண்டும். எத்தனையோ வருடங்களுக்கு முன் 25 பைசா என்று வைத்ததை மட்டும் மாற்றி நம்மால் இயன்ற ஒரு தொகையை படிப் பணமாக வைத்து விட்டு வரலாம்.

முதன் முதலில் குலதெய்வத்தை வழிபட குடும்பத்தோடு சென்றபோது, என் கணவருக்கு அவர் வேலை செய்து வந்த கம்பெனியில் நிறைய பிரச்சனைகள்.  அவர் உழைப்புக்கும் திறமைக்கும் அங்கே மதிப்பில்லை.

"அடிமைக்காவு அய்யப்பா! உந்தன் அடியவனான என்னை வேறு யாரோ ஒருவரின் கீழ் மன நிம்மதியின்றி உழைக்கும்படி வைத்து விட்டாயே? இந்த நிலைமையை மாற்றிக் கொடு ஐயனே!" என்று மனமுருகப் பிரார்த்தித்து வந்த சில மாதங்களுக்குள்ளாகவே கம்பெனி வேலையை ராஜினாமா செய்ய வைத்து சொந்தமாகத் தொழில் செய்ய வழி காண்பித்தார் 'அடிமைக்காவு அய்யப்பன்'.

ரொம்ப வருடங்களாக அறியாமையால் வழிபாடு நின்று போயிருந்த போதிலும் முதன் முறையாக அவரை தரிசித்து விட்டு வந்ததுமே எங்கள் வாழ்க்கையில் அபார மாற்றத்தை உண்டாக்கியவர் எங்கள் குல தெய்வம் 'அடிமைக்காவு அய்யப்பன்'.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com