பஞ்ச பூதத்தலங்களில் ஆகாயத் தலமாகக் கூறப்படுவது தில்லையம்பதியாகிய சிதம்பரம் திருக்கோயில். நடராஜப்பெருமான் தரிசனம் அருளும் திருத்தலம் இது. இக்கோயிலின் முக்கியமான விசேஷம் ஆருத்ரா தரிசனம். மார்கழி மாத திருவாதிரை நட்சத்திரம் சிவபெருமானுக்கு மிக உகந்த நட்சதிரம் ஆகும். முதல் நாள் இரவு அனைத்து சிவாலயங்களிலும் நடராஜ பெருமானுக்கு விடிய விடிய அபிஷேகம் நடைபெறும். அடுத்த நாள் காலை ஆருத்ரா தரிசனம். இந்த ஆருத்ரா தரிசனத்தைக் காண்பது மிகவும் விசேஷம்.
மார்கழி மாதம் தட்சிணாயன புண்ய காலத்தின் கடைசி மாதமாகும். இம்மாதம் தேவர்களுக்கு அதிகாலை பொழுதென்பதால் தேவர்கள் ஒன்று கூடி சிதம்பரம் நடராஜரை தரிசனம் செய்ய வருகிறார்கள் என்பது ஐதீகம். இம்மாத திருவாதிரையன்று அனைத்து சிவாலயங்களிலும் சிவனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றாலும், சிதம்பரத்தில் நடைபெறும் அபிஷேகத்தை தரிசிப்பது மிகவும் சிறப்பு. நடராஜப் பெருமானுக்கு வருடத்தில் ஆறு முறை மட்டுமே அபிஷேகம் நடைபெறுவது வழக்கம். அவற்றுள் முதன்மையானது ஆருத்ரா அபிஷேக தரிசனம். இன்று தில்லை நடராஜப் பெருமான் தேரில் வீதி வலம் வருவது கண்கொள்ளாக் காட்சியாகும். இக்காட்சியை தரிசிக்க பிற நாடுகளிலிருந்தும் பக்தர்கள் ஆயிரக்கணக்கில் இன்று சிதம்பரம் வருவது வழக்கம்.
இதைத் தவிர, ஆருத்ரா தரிசனம் அன்று வேறு ஒரு விசேஷமும் சிதம்பரத்தில் உண்டு. சிதம்பரம் அருகேயுள்ள ஒரு ஊரில் விறகு வெட்டி பிழைப்பு நடத்தி வந்த சேந்தனார் என்பவர் வாழ்ந்து வந்தார். அவர் ஒரு சிறந்த சிவ பக்தர். அந்தக் காலத்தில் இருந்த ஏனைய சிவ பக்தர்களைப் போலவே, இவரும் தினமும் ஒரு சிவனடியாருக்கு உணவளித்த பின்னர்தான் தான் உணவு உட்கொள்ளும் நெறிமுறையை பின்பற்றி வந்தார்.
ஒரு நாள் எதிர்பாராமல் பெரிய மழை. அவர் வெட்டிப் போட்டிருந்த விறகுகள் அனைத்தும் மழையில் நனைந்து ஈரமாகிப் போயின. அதனால் அவரல் அன்று விறகு விற்கப் போக முடியவில்லை. எனவே, கையில் காசு இல்லாததால் அரிசி வாங்க முடியவில்லை. என்ன செய்வதென்று தெரியாமல் வீட்டில் இருந்த சிறிது கேழ்வரகில் களி செய்து வைத்து விட்டு ஏதாவது சிவனடியார் வருவாரா என்று எதிர்பார்த்துக் காத்திருந்தார். வெகு நேரமாகியும் யாரும் தென்படவில்லை. சேந்தனார் மிகவும் மனம் நொந்துப்போனார்.
அவரிடம் ஒரு திருவிளையாடலை நிகழ்த்தவும், சேந்தனாரின் சிவ பக்தியை உலகுக்கு உணர்த்தவும் திருவுளம் கொண்டார் தில்லையம்பதியில் கோயில் கொண்டருளும் நடராஜப் பெருமான். அதனைத் தொடர்ந்து, தானே ஒரு சிவனடியாரைப் போல உருமாறி சேந்தனாரின் இல்லத்துக்குச் சென்றார். அவரைக் கண்ட சேந்தனார் அகமகிழ்ந்து, கேழ்வரகுக் களியை அந்த சிவனடியாருக்கு அன்புடன் படைத்து உண்ணும்படி வேண்டிக் கொண்டார். அந்த சிவனடியாரும் அக்களியை மிக விருப்பத்துடன் உண்டதோடு மட்டுமல்லாமல், மீதமிருந்த களியையும் தனது அடுத்த வேளை உணவுக்காகக் கேட்டு வாங்கிச் சென்றார்.
மறுநாள் காலை வழக்கம்போல் தில்லையம்பதி திருக்கோயில் கருவறைக் கதவைத் திறந்த தில்லைவாழ் அந்தணர்கள் அதிர்ந்து போயினர். நடராஜப் பெருமானைச் சுற்றி எங்கும் களிச் சிதறல்கள். செய்வதறியாமல் திகைத்துப்போன அவர்கள், தங்களுக்குள் கூடிப்பேசி இந்த சம்பவத்தைப் பற்றி அரசருக்குத் தெரிவிக்க முடிவு செய்தனர்.
முதல் நாள் இரவே நடராஜப் பெருமான் அரசரின் கனவில் தோன்றி, தான் சேந்தனாரின் வீட்டுக்குக் களி உண்ணச் செல்வதாக தெரிவித்திருந்தார். அந்தணர்கள் வந்து தகவல் தெரிவித்ததும், அரசர் பரபரப்பாக உடனே சேந்தனாரை அழைத்து வரும்படி தனது அமைச்சருக்கு ஆணையிட்டார். அந்தச் சமயத்தில் நடராஜப் பெருமானின் தேரோட்டம் நடை பெற இருந்தது. தேரை வடம் பிடிக்கக் குழுமி இருந்த கூட்டத்தில் சேந்தனாரும் ஒருவராக நின்று கொண்டிருந்தார்.
எம்பெருமானை தேரில் அமர்த்தியபின், அரசர் உட்பட எல்லோரும் தேர் வடத்தைப் பிடித்து இழுக்க ஆரம்பித்தார்கள். ஆனால், முந்தைய நாள் பெய்த மழைதயின் காரணமாக சேற்றில் தேர் சக்கரங்கள் அழுந்தி சிறிதும் அசையாமல் நின்றது. அனைவரும் பதறிப்போனார்கள். அரசரோ மிகவும் மனம் வருந்தி இறைவனை வேண்டியபடி நின்று கொண்டிருந்தார். அப்போது வானத்தில் ஒரு அசரீரி கேட்டது, "சேந்தா! நீ பல்லாண்டு பாடு" என்று.
‘சாதாரண விறகு வெட்டியான தன்னால் எவ்வாறு இறைவனைப் போற்றிப் பாட இயலும்?' என்று சேந்தனார் திகைத்துப்போனார். உடனே நடராஜப் பெருமான் அவருக்குத் திருவருள் புரிய சேந்தனார், ‘மன்னுகதில்லை வளர்க, நம் பக்தர்கள் வஞ்சகர் போயகல’ என்று தொடங்கி, ‘பல்லாண்டு கூறுதுமே’ என்று முடித்து பதிமூன்று பாடல்கள் இறைவனை வாழ்த்திப் பாடினார். உடனே சேற்றில் புதைந்திருந்த தேர் சக்கரம் மேலெழும்ப, தேர் நகர்ந்தது. சேந்தனாரின் கால்களில் அரசரும், அந்தணர்களும், சிவனடியார்களும் வீழ்ந்து வணங்கினார்கள். அரசர் தாம் கண்ட கனவை சேந்தனாருக்குத் தெரிவித்தார். சேந்தனார், ‘தனது வீட்டுக்குக் களி உண்ண வந்தது தில்லையம்பலத்தானே’ என்றறிந்ததும் மனமுருகி எம்பெருமானை வணங்கினார்.
இந்த நிகழ்வு நடைபெற்றது மார்கழி மாதத் திருவாதிரை நாள் என்பதால், அதையொட்டி சிவ வழிபாட்டில் அனைவர் இல்லங்களிலும் திருவாதிரை அன்று களி செய்து நடராஜருக்கு நிவேதனம் செய்யும் வழக்கம் ஏற்பட்டது. 'திருவாதிரைக்கு ஒரு வாய் களி' என்னும் சொலவடையும் வந்தது. நாமும் திருவாதிரை தினத்தன்று அருகிலுள்ள சிவன் கோயிலுக்குச் சென்று, நடராஜப் பெருமானை தரிசித்து அனைத்து நலன்களையும் பெறுவோம்.