சகலமும் அருளும் ஸ்ரீ அன்னம்மா தேவி!

Sri Annamma Devi
Sri Annamma Devichinnuadhithya.wordpress.com

ர்நாடக மாநிலம், பெங்களூரு காந்தி நகர் சுபேதார் சத்திரம் சாலையில் அமைந்துள்ளது ஸ்ரீ அன்னம்மாதேவி ஆலயம். ‘பெங்களூரு சிட்டி மெஜஸ்டிக்’ என்று அழைக்கப்படும் மத்தியப் பேருந்து நிலையம், இரயில் நிலையம் ஆகியவற்றை அடக்கிய சுறுசுறுப்பான பகுதியில் இந்த ஆலயம் அமைந்திருக்கிறது.

விஜய நகர மன்னர்களின் கீழ் சிற்றரசராக விளங்கிய கெம்பே கௌடா 1537-ஆம் ஆண்டு தன் அரசாட்சியின் தலைநகராக பெங்களூருவை ஸ்தாபித்த காலத்திலேயே இந்த ஸ்ரீ அன்னம்மா தேவி ஆலயம் இருந்த தாகக் கூறப்படுகிறது. அக்காலத்தில், ‘பெண்டகளூரு’ என்று அழைக்கப்பட்ட பெயரே மருவி பெங்களூரு ஆகிவிட்டது என்கிறார்கள்.

ஒருகாலத்தில் பெங்களூரு நகரில் 1,500க்கும் மேற்பட்ட குளங்களும், ஏரிகளும் இருந்தன என்றும், தற்போது அவற்றில் ஒருசிலவே உள்ளன என்றும் கூறப்படுகிறது. அக்காலத்தில் பரந்து விரிந்து, எப்போதும் தண்ணீர் நிறைந்திருந்த ‘தர்மம்புத்தி’ என்ற ஏரி இருந்த இடத்தில்தான் தற்போதுள்ள மத்தியப் பேருந்து நிலையம் அமைந்துள்ளது. அந்த ஏரி வெட்டப்படும்போதுதான் ஸ்ரீ அன்னம்மா தேவியின் விக்கிரகம் கண்டெடுக்கப்பட்டக் கூறப்படுகிறது.

சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பாக ‘பரிகேபிட்டன ஹள்ளி’ என்று அழைக்கப்பட்ட மாரமுள்ள கிராமத்தில் ஸ்ரீ அன்னம்மாதேவி கோயில் கொண்டிருந்தாள். அக்காலத்தில், தினசரி பூஜைகள் மற்றும் பராமரிப்பின்றி ஆலயம் இருந்தது. தேவி ஒரு பக்தரின் கனவில் தோன்றி, தன்னை மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் பிரதிஷ்டை செய்தால் தான் பக்தர்களை அனுக்கிரகிப்பேன் என்று ஆணையிட, தேவியை தற்போதுள்ள இடத்தில் பிரதிஷ்டை செய்ததாக இன்னொரு செவிவழிச் செய்தி கூறப்படுகிறது.

அக்காலத்தில் ‘அம்புஜாட்சி’ என்று அழைக்கப்பட்ட தேவி, பின்னர் ‘ஹன்னம்மா’ என அழைக்கப்பட்டு, அப்பெயரே அன்னம்மா தேவியாக மருவியதாக தெரிவிக்கின்றனர். ஆலயம் சிறிதாக இருப்பினும், இப்பகுதியில் ஸ்ரீஅன்னம்மா தேவி மிகப்பிரபலமாகப் பேசப்படுகிறாள். முகப்பை சிறிய கோபுரம் அலங்கரிக்க, மகாமண்டபத்தில் அம்பிகையின் உருவங்கள் அமைந்துள்ளன.

ஆலய வளாகத்தில் தொட்டி போன்ற அமைப்பில் ஆறு சுயம்பு திருமேனிகள் காணப்படுகின்றன. அவை ஸ்ரீ அன்னம்மா தேவியின் சகோதரிகள் தொட்டம்மா தேவி, சாமுண்டேஸ்வரிதேவி, சிக்கம்மா தேவி, ஜஜ்ஜேரம்மா தேவி, ஆத்தலாத்தம்மா தேவி, மாரியம்மா தேவி எனக் கூறப்படுகிறது. இவர்களை சப்த மாதர்கள் என்றும், இந்த ஆலயதத்தை ‘சப்த மாத்ருகா க்ஷேத்திரம்’ என்றும் கூறுகின்றனர். பக்தர்கள் இந்த தேவியர்க்கு தயிர் மற்றும் பால் அபிஷேகம் செய்து வழிபடுகின்றனர்.

Sri Annamma Devi
Sri Annamma Devihttps://chinnuadhithya.wordpress.com/

கருவறை முன்பு துவாரபாலகிகள் உள்ளனர். மூலஸ்தானத்தில் ஸ்ரீ அன்னம்மா தேவி அபய வரத ஹஸ்த முத்திரைகளோடு அருள்பாலிக்கிறாள். ஏராள மான ஆபரணங்கள் மற்றும் மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டுள்ள ஸ்ரீ அன்னம்மா தேவியின் தரிசனம், காண்போருக்கு பரவசத்தை ஏற்படுத்துகிறது.

பக்தி சிரத்தையோடு ஸ்ரீ அன்னம்மா தேவியை தரிசிக்க, மரண பயம் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. மேலும், இத்தேவியை தரிசிக்க மனோதைரியம் கிட்டும் என்பதும் ஐதீகம். இதனால் தூக்கத் தில் பயந்து அழும் குழந்தைகளை இக்கோயிலுக்குக் கூட்டி வருகின்றனர். தினமும் ஏராளமான தாய்மார்கள் தங்கள் குழந்தைகளை இந்த ஆலயத்துக்குக் கூட்டி வருவதைக் காணலாம் என்றும் கூறுகிறார்கள்.

இதையும் படியுங்கள்:
பொழுதுபோக்கு மூலமாக மன அழுத்ததை குறைக்க எளிய வழிகள்!
Sri Annamma Devi

தங்கள் வீட்டில் நடைபெறும் சுபகாரியங்களின் போதும், விசேஷ நாட்களிலும் ஸ்ரீ அன்னம்மா தேவியின் உற்சவ மூர்த்தியை ஊர்வலமாக தங்கள் பகுதிக்கு எடுத்து வந்து, சிறப்பு வழிபாடு செய்வது இப்பகுதி மக்களிடையே ஒரு வழக்கமாக உள்ளது. வழிபாடுகள் முடிந்த பின்னர் மீண்டும் ஊர்வலமாக ஆலயத்துக்கு எடுத்துச் செல்கின்றனர். இதுபோன்று தேவியை, பக்தர்கள் தாங்களே எடுத்துச் சென்று     உற்சவம் நடத்தும் வழக்கம் இங்கு காணப்படும் சிறப்பாக உள்ளது.

செல்லும் வழி: ‘கெம்பே கவுடா சர்க்கிள்’ என்று அழைக்கப் படும் மெஜஸ்டிக் பகுதியில், சுபேதார் சத்திரம் சாலையில் அமைந்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com