ஆலயங்கள் சொல்லும் அசத்தலான தகவல்கள்!

ஆலயங்கள்...
ஆலயங்கள்...

ரு கோயிலுக்குள் நுழையும் பொழுதே அங்குள்ள கோயில் அமைப்பு, சிற்பம், தலவிருட்சம் என்று ஏதாவது ஒன்றில் நம் கண்கள் பதியும். அப்பொழுது நம் மனம் முழுவதும் அதிலேயே லயித்துவிடும். பிறகு அந்த கோயிலை சுற்றி வரும் பொழுது அதைப் பார்த்துக் கொண்டே வந்தால் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு கதை இருக்கும். அதில் நம்மை கவர்ந்த கதையை நமக்கு பிடித்த மாதிரி எழுதுவதில் ஒரு தனி இன்பம் கிடைக்கும். அப்படி பல்வேறு சிவன் கோவில்களில் உள்ள அபூர்வ அமைப்புகளை இக்குறிப்பில் காண்போம். 

பாடியவர்கள் உட்பட எல்லாமே ஐந்து:

விருத்தகிரீஸ்வரர்...
விருத்தகிரீஸ்வரர்...

மிழ்நாட்டில் உள்ள மிகப் பழமையான சிவாலயங்களில் விருத்தாசலம் "விருத்தகிரீஸ்வரர்" ஆலயமும் ஒன்று. இந்த கோவிலில் ஐந்து கோபுரங்கள், ஐந்து கொடி மரங்கள் ,5 நந்திகள் ,ஐந்து காவல் தெய்வங்கள் ,ஐந்து சுற்று பிரகாரங்கள் என எல்லாமே ஐந்து எண்ணிக்கையில் அமைந்திருக்கின்றன. 

இங்குள்ள அம்மன் பெயர் 'விருத்தாம்பிகை' இக்கோவில் மதுராந்தக சோழனால் கட்டப்பட்டதாகும் .மூர்த்தி ,தலம், தீர்த்தம் மூன்றிலும் சிறந்த இக்கோவிலில் திருஞானசம்பர், திருநாவுக்கரசர், அருணகிரிநாதர், சிவப்பிரகாச சுவாமிகள், வள்ளலார் போன்ற பெரியவர்கள் வந்து பாடி இறைவனை வழிபட்டுள்ளனர். 

மேற்கில் காட்சி:

திருக்கோவில்களில் சாதாரணமாக சிவலிங்கம் கிழக்கு நோக்கி காட்சி தரும். ஆனால் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் ஆலயத்தில் சிவலிங்கம் வழக்கத்திற்கு மாறாக மேற்கு பார்த்தபடி காட்சி தருகிறது.

தந்தத்தில் உலா:

உவரி சுயம்புலிங்க சுவாமி..
உவரி சுயம்புலிங்க சுவாமி..

தூத்துக்குடி மாவட்டம் உவரி சுயம்புலிங்க சுவாமி திருக்கோயிலில் தைப்பூசத் திருநாள் அன்று நடக்கும் விசேஷ நிகழ்ச்சி இது. கோவிலில் அன்றைய தினம் காலையில் 2 அடி உயரம் உள்ள சீவேலியை வெல்வெட்டு துணியால் அலங்கரித்து தந்த பல்லக்கில் தூக்கிச் சென்று கடலில் நீராட்டுகின்றனர். பின்னர் கடற்கரையிலேயே இளநீர், பால், பஞ்சாமிர்தாபிஷேகம் நடக்கும். அதன்பின் திருக்கோவிலுக்குள் உள்ள உள் பிரகாரத்தில் வலம் வந்து தீபாராதனை நடக்கிறது. அன்றைய தினம் விரைவில் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் சுயம்புலிங்க சுவாமி வலம் வருகிறார். 

சிவலிங்கம் போல காட்சி தரும் மலை:

சில கோயில்களை பார்க்கும் போது மிகவும் வித்தியாசமான காட்சி நம் கண்களில் படும். அதை மற்றவர்களிடம் பகிர்ந்து கொண்டால் அவர்களும் வித்தியாச கோணத்தில் பார்த்து கூறுவதை காணலாம். 

அப்படி ஒரு கோவில் இது. முருகனின் அறுபடை வீடுகளில் மலையை குடைந்து கட்டப்பட்ட ஆலயம் திருப்பரங் குன்றம் முருகன் ஆலயம் மட்டும் தான். திருப்பரங்குன்றம் மலையை வட திசையில் இருந்து, தெற்கே பார்க்கும் பொழுது கைலாய மலை போல காட்சி தரும். தெற்கிலிருந்து வடக்கு நோக்கி பார்க்கும் போது பெரிய யானை படுத்திருப்பது போன்றும், மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி பார்க்கும் போது சிவலிங்கம் போலும் காட்சி தரும்

முருகப்பெருமான் சன்னதியில் வலப்புறம் பெருமாள் சன்னதி உள்ளது .அதன் எதிரே சத்யகிரீஸ்வரர் என்னும் சிவசன்னதி உள்ளது .இப்படி விஷ்ணுவும், சிவனும் எதிர் எதிர் சன்னதியில் இருப்பது இங்கு மட்டும் தான் .முருகனின் அருகிலேயே கற்பக விநாயகர் மேல் கைகள் இரண்டிலும் கரும்பினை வில் போல் ஏந்தி காட்சி தருகிறார் .இதுபோன்ற சிறப்பினால் இந்தக் காட்சி மனதில் பதிந்து விட்டது. . 

ஒன்றில் ஆயிரம் லிங்கங்கள்:

உத்தரகோசமங்கை
உத்தரகோசமங்கை

ராமநாத புரத்திலிருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது உத்தரகோசமங்கை. இங்குள்ள மங்களநாதர் சுவாமி கோவிலில் நடராஜருக்கு தனி சன்னதி இருக்கிறது. இங்கு வேறு எங்கும் காண முடியாத ஐந்தே முக்கால் அடி உயர மரகத நடராஜர் சிலை உள்ளது. இந்த கோயிலில் தினமும் மதியம் 12 மணிக்கு மேல் சிறப்பு வழிபாடு நடைபெறும். நடராஜர் கோவில் இருக்கும் இடத்திற்கு முன்பாக 3000 ஆண்டுகளுக்கு முன்பிருந்த இலந்தை மரம் ஒன்றும் உள்ளது. இது இக்கோவிலின் தல விருட்சம், .இலந்தை மரம் அருகில் ஒரு லிங்கம் உள்ளது. இதில் ஒரு வரிசைக்கு 50 லிங்கம் என்ற கணக்கில் 20 வரிசையில் ஆயிரம் லிங்கங்கள் கொண்ட அமைப்பு உள்ளது. இந்த அமைப்பு இங்குள்ள சிறப்பு. 

வாழ்வில் ஓரி கட்டிய கோவில்:

சேலத்தில் இருந்து 27 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது ராசிபுரம் கைலாசநாதர் கோவில். கடையேழு வள்ளல்களில் ஒருவரான வாழ்வில் ஓரி கட்டிய கோவில் என்ற வரலாறு இதற்கு உண்டு. இக்கோவிலில் வல்வில் ஓரிக்கு சிலையும் உள்ளது. 

கோயிலின் சிறப்பு என்னவென்றால் சிவனுக்கு ஐந்து முகங்கள் உள்ளன. ஒவ்வொரு முகத்திற்கும் ஒரு சக்தி உண்டு.

வடகிழக்கு நோக்கி உள்ளது ஈசானிய முகம். இது கல்வி ஞானத்தைத் தரவல்லது. தெற்கு நோக்கியது அகோரமுகம். இது பாவங்களைப் போக்கக்கூடியது. வடக்குப் பார்த்தது வாமதேவர் முகம். வேண்டியவர் களுக்கு வேண்டும் வரம் தரும் வல்லமை உடையது. மற்றொன்று சத்யோ ஜாத முகம். தமிழ்நாட்டிலேயே மிகப்பெரிய ஆறுமுகனின் ஒரே கல் சிலை இங்கு காணப்படுகிறது. பஞ்சலிங்க மூர்த்திகளுக்கு தனித்தனி சன்னதிகள் உள்ளது இங்கு மட்டும்தான்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com