* கடலூர் மாவட்டம், திருத்தினை சிவக்கொழுந்தீஸ்வரர் கோயிலில், சிவபெருமான் ஏர் மற்றும் நீர் இறைக்கும் கலத்துடன் விவசாயி போலக் காட்சி தருகிறார். தினமும் அன்னதானம் செய்து கொண்டிருந்த விவசாய தம்பதியினரை சோதிக்க, முதியவராகச் சென்ற சிவன், உழைக்காமல் சாப்பிடுவதில்லை என்று கூறி, அவர்களின் தோட்டத்தை உழுகிறார். உணவு எடுத்து வந்த தம்பதி, விதைக்கப்பட்டு இருந்த திணை பயிர் அறுவடைக்குத் தயாராக விளைந்திருந்தது கண்டு அதிசயிக்க, சிவபெருமான் அவர்களுக்குத் தரிசனம் தந்தார். வயலில் சிவன் உழவு வேலை செய்ததால், விவசாயி என்று பெயர் பெற்றார்.
* சென்னை, மயிலாப்பூர் முண்டகக்கண்ணிஅம்மன் கோயில், வசந்த மண்டபத்தில் உத்ஸவ அம்பிகை சிம்மாசனத்தில் அமர்ந்து அருள்கிறாள். பிராகாரத்தில் சப்த கன்னியர் லிங்க வடிவில் அருள்பாலிக்க, இருபுறங்களிலும் ஜமதக்னி முனிவரும், பரசுராமரும் காட்சி தருகின்றனர்.
* புதுக்கோட்டை மாவட்டம், குறிச்சியில் நவபாஷாணத்தால் ஆன அஷ்ட தச புஜ மகாலட்சுமி துர்கை அம்மனை தரிசிக்கலாம். தீராத நோய்களைத் தீர்ப்பதில் மிகவும் வரப்ரசாதியான தேவி இவள்.
* தென்காசி அருகே, ஆதீனம் காத்த அய்யனார் கோயிலில் எமதர்மன் சிலையும் அவரது மனைவி எமி சிலையும் உள்ளன.
* திருச்சி அருகில் உள்ள திருவானைக்காவல் அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீ ஜம்புகேஸ்வரர் கோயிலில் சனீஸ்வரர் பாலசனியாக குதிரை முகத்துடன் அன்னை சாயா தேவியுடனும், மனைவி நீலா தேவியுடனும் காட்சி தருகிறார்.
* சிவகங்கை மாவட்டம், இரணியூரில் ஆட்கொண்டநாதர் கோயில் உள்ளது. திருமால் இரணியனை வதம் செய்த பாவம் தீர, சிவபெருமானை வேண்டியதால் ஈசனே இங்கு சுயம்பு லிங்கமாகத் தோன்றி அருளியதால் இவ்வூர் இரணியூர் என்று பெயர் பெற்றது. திருமாலை ஆட்கொண்டதால் சிவபெருமானும் ஆட்கொண்டநாதர் ஆனார். கோயிலின் மகா மண்டபத்தில் திருமாலின் பத்து அவதாரங்களும், நவ துர்கையின் ஒன்பது அவதாரங்களும் சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளன. இக்கோயிலில் சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகங்கள் நடத்தப்படுகின்றன. இது அஷ்ட பைரவ தலங்களில் ஒன்று. கோபம், பாவம் போக்கும் சிவன் இவர் என்று நம்பப்படுகிறது.