அம்பிகையின் மாலை!

அம்பிகையின் மாலை!

ஷ்வாகு வம்சத்தில் பிறந்தவன் சர்யாதி. அவனது அருமை மகள் சகன்யை. ஒருமுறை காட்டுக்கு வேட்டையாடப் புறப்பட்ட சர்யாதியுடன் சென்றாள் சுகன்யா. தோழிகளோடு கண்கட்டு விளையாட்டு நடைபெற்றது. சுகன்யா ஒரு புற்றடியில் ஒளிந்து கொண்டாள்.

புற்றில் இரு துவாரங்கள். அதில் பளிங்குபோல் ஏதோ மினுமினுத்தது. ‘அது என்னவாயிருக்கும்?’ என்ற ஆர்வத்தில் முள்ளுடனான ஒரு குச்சியை எடுத்துக் குத்தினாள். குச்சியை எடுத்தவுடன் முனையில் ரத்தம். அதோடு விட்டிருக்கலாம். மற்றொரு துவாரத்திலும் குச்சியைச் செலுத்தினாள். மண்புற்று சரிந்தது. தவம் புரிந்துகொண்டிருந்த சியவனர் சினத்தோடு எழுந்தார். அவருடைய இரு விழிகளிலிருந்தும் உதிரம் வழிந்தது. ஓடி வந்த மன்னனிடம், “இந்தத் தீவினைக்குக் காரணமான உன் புதல்வியை, எனக்கு மணம் செய்து கொடு” என்றார் சியவனர் சினத்துடன்.

மன்னர் தயங்கினார். “அப்பா! கரையான்கள் கூடு கட்டுவதையும் பொருட்படுத்தாது தவமியற்ற எத்தனை திடம் வேண்டும். அப்படிப்பட்ட அவரை மணப்பது என் பாக்கியமப்பா” என்று தீர்மானமாகச் சொன்னாள் சுகன்யா. அரசன் வேறு வழியின்றி, அவர்கள் திருமணத்தை நடத்திப் பர்ணசாலையில் விட்டுச் சென்றார். சுகன்யை கணவருக்கு பிரியமுடன் பணிவிடை செய்து வந்தாள்.

ஒருநாள் சுகன்யா ஆற்றில் நீராடி நீர் முகந்து செல்கையில் அஸ்வினி தேவர்கள், அவள் அழகைக் கண்டு மயங்கினர். அவளிடம், “உன் கணவரை அழகும் , இளமையும் பார்வையும் கொண்டவராக நாங்கள் மாற்றி விடுகிறோம். மூவருளும் ஒரே மாதிரி முக, உடலமைப்புடன் நிற்கிறோம். மூவரில் ஒருவருக்கு நீ மாலையிட வேண்டும். அவர் யாராயிருந்தாலும் மறுக்காமல் நீ வாழ வேண்டும். சம்மதா?” என்று கேட்டனர்.

இதற்குள் ஆசிரமம் வந்துவிட்டது. சியவனரிடம் நடந்ததைக் கூறினாள். பொறுமையுடன் பணிவிடை செய்த மனைவியை சந்தோஷப்படுத்த, அஸ்வினி தேவர்கள் கூறியபடி அவர்களுடன் தடாகத்தில் மூழ்கி எழுந்தார் சியவனர். மூவரும் அழகிலும், வயதிலும், உருவிலும் ஒரே மாதிரி இருந்தனர். தேவியை தியானித்து, அம்பிகைக்குச் சாத்திய மாலையை எடுத்து மூவரையும் ஊடுருவி நோக்கினாள். கணவரை அறிந்து, அவருக்கு மாலையிட்டு மகிழ்ச்சியுடன் இல்லறத்தை நடத்தினாள்.

தற்கால மங்கையரும் சுகன்யைக்குச் சளைத்தவர்களல்ல; தம்பதிகள், பிரச்னைகளைப் பகிர்ந்துகொண்டு மற்றவர் நன்மையை மனத்தில் கொண்டு முடிவெடுத்தால் வாழ்க்கை சொர்க்கமாகும் என்கிறது ஆன்மிகம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com