பங்குனி மாதம் பௌர்ணமியன்று, உத்திர நட்சத்திரமும் சேர்ந்து வந்தால் அந்த நாளை பங்குனி உத்திரம் என்று கொண்டாடி வருகிறோம். அத்திருநாளில், முக்கண்ணனும் பார்வதி தேவியும் ஐக்கிய ஸ்வரூபமாக திருவிளக்கு தீப ஒளியில் எழுந்தருள்வதாக ஐதீகம்.
சூரிய பகவானை உத்திர நட்சத்திரத்தின் நாயகன் என்று கூறுவர். உத்திர நட்சத்திரம் பூரண சந்திரனுடனும் பொருந்தும் நாள் பங்குனி உத்திரம். இந்த நட்சத்திரத்திரம், சூரியன் சந்திரன் இருவரோடும் தொடர்பு பெற்றிருப்பதால் இந்த திருநாளுக்கு அதிக சிறப்பு உண்டு.
பல தெய்வத் திருமணங்கள் இந்தப் புனிதமான பங்குனி உத்திரத் திருநாளில்தான் நிகழ்ந்தன. ஸ்ரீராமன்-சீதா தேவி, லக்ஷ்மணன்-ஊர்மிளா, பரதன்-மாண்டவி, சத்ருக்னன்-சுருதகீர்த்தி ஆகியோரின் திருமணங்கள் பங்குனி உத்திரத் திருநாளில் தான் மிதிலை நகரில் நடைபெற்றது. ஆண்டாள்-ரங்கநாதர், தேவேந்திரன்-இந்திராணி, பிரம்மா-சரஸ்வதி திருமணங்கள் நிகழ்ந்ததும் இந்த நாளில்தான். ஸ்ரீ பரமேஸ்வரன் ஆனவர், ஸ்ரீ மீனாட்சி தேவியை மணந்து கொண்டு, மதுரையில் மீனாட்சி சுந்தரேஸ்வரராக தரிசனம் கொடுத்ததும் இதே நாளில்தான். ஸ்ரீ சந்திர பகவான், ரோகிணி உட்பட இருபத்து ஏழு நட்சத்திரங்களையும் மணம் முடித்ததும் இதே நாளில்தான்.
முருகக் கடவுளுக்கான திருநாட்களில், பங்குனி உத்திரம் மிகவும் குறிப்பிடத்தக்கது. தேவேந்திரனின் மகளான தெய்வானையை, முருகப்பெருமான் மணமுடித்தது ஒரு பங்குனி உத்திரத்தில்தான். அதுமட்டுமல்ல, பங்குனி உத்திரத்தன்றுதான் வள்ளியும் அவதரித்த நாள் என்று சொல்லப்படுகிறது. இவ்வளவு விசேஷமான பங்குனி உத்திரத்தில் இன்னும் என்னென்ன விசேஷங்கள் இருக்கிறது பார்ப்போம்.
தர்ம சாஸ்தாவான ஸ்ரீ ஐயப்பன் பங்குனி உத்திரத் திருநாளில்தான் அவதாரம் செய்தார். ஸ்ரீ அர்ஜுனன் பங்குனி உத்திரத்தில் பிறந்ததால், 'பல்குநன் 'என்று பெயர் பெற்றான்.
முருகப்பெருமான் தனது தந்தை சிவபெருமானுக்கு பிரணவப் பொருளை உபதேசித்த நாளும் பங்குனி உத்திரம்தான். ஸ்ரீ பரமேஸ்வரன் ஆனவர், சுந்தரமூர்த்தி நாயனாருக்கு மணக்கோலத்தில் காட்சி கொடுத்த நாளும் இந்த நன்னாள்தான்.
சிவபெருமானின் தவத்தைக் கலைத்த மன்மதனை, எரித்து சாம்பலாக்கினார் ஈசன். அதனால் வருந்திய ரதிதேவி, மன்மதனை உயிர்ப்பித்து தருமாறு ஈசனிடம் வேண்டி நின்றாள். மனம் இரங்கிய ஈசன், ரதியின் கண்களுக்கு மட்டும் தெரியும்படி மன்மதனை உயிர்ப்பித்துக் கொடுத்தார். இந்த நிகழ்வும், ஒரு பங்குனி உத்திரத்தன்றுதான் நடந்தது.
பங்குனி உத்திர நாளை, 'கல்யாண விரத நாள்' என்றும் கூறுவார்கள். ஏனென்றால், பல தெய்வத் திருமணங்கள் அன்றைய தினத்தில் நடந்ததால், விரதம் இருந்து அன்றைய நாளில் நீர் மோர் அளித்தல், தண்ணீர் பந்தல் அமைத்துக் கொடுத்தல் போன்றவை செய்தால், பாவம் நீங்குவதுடன், நல்ல திருமண வாழ்க்கையும் கைகூடும் என்பதோடு, பிரிந்திருக்கும் தம்பதிகளும் ஒன்றுசேருவார்கள் என்று கூறப்படுகிறது.
பங்குனி உத்திர தினத்தன்று வீட்டை சுத்தமாகத் துடைத்து செம்மண் கோலம் இட்டு, பூஜை முடிந்த பின் சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்து, அந்த நைவேத்தியத்தையே விரதம் இருப்பவர்கள், ஆகாரமாக உண்பது நல்லது என்று கருதப்படுகிறது. கந்த சஷ்டி கவசம், கந்தபுராணம் போன்ற முருகன் சம்பந்தப்பட்ட ஸ்லோகங்கள், பாட்டுக்கள் போன்றவற்றைக் கூறி வருவது நலத்தைக் கொடுக்கும்.
நல்லன எல்லாம் அருளும் பங்குனி உத்திரத் திருநாளில், முறைப்படி விரதம் இருந்து வேண்டியதையெல்லாம் பெற்று, எல்லோரும் நலமுடன் வாழ முருகப் பெருமான் அருள் புரியட்டும்.