ஆண்டாள், தன் தூய்மையான அன்பால் அந்த அரங்கனையே ஆண்டாள்!

Andal, with her pure love ruled  the god!
Andal, with her pure love ruled the god!Image Credits: Maalaimalar
Published on

‘மானிடர்களுக்கு வாழ்க்கைப்பட்டு வாழமாட்டேன். அந்த மாதவனுக்கே வாழ்க்கைப்படுவேன்’ என்ற துணிவு இருந்ததால்தான் பகவானையே ஆண்டாள், அற்புதமான தமிழை ஆண்டாள், தன்னுடைய பக்தர்களுக்கு அருள் புரிந்து அவர்களையும் ஆண்டாள். இன்று அத்தகைய சிறப்புமிக்க ஆண்டாளின் சிறப்பைப் பற்றி தெரிந்துக் கொள்வோம்.

பெரியாழ்வார் துளசி செடிக்கு பக்கத்தில் கிடைத்த குழந்தைக்கு ‘கோதை’ என்று பெயர் வைத்து வளர்த்து வந்தார். அவர் மனைவியும் கோதை மீது அதீத அன்பு வைத்திருந்தார். கோதையும் அன்பும், பொறுமையும் உள்ள பெண்ணாக வளர்ந்து வந்தார். எப்படி நதி கடலை நோக்கி செல்கிறதோ? அதைப்போலவே இயல்பாகவே கோதையின் மனம் கண்ணனை நோக்கி ஈர்க்கப்பட்டது. மலர்களை பார்த்தால் மாயோனின் கண்களும், கருமேகத்தை பார்த்தால் கிருஷ்ணனின் மேனியும் தெரியும். ‘கண்ணன்’ என்ற பெயர் கேட்டாலே, கோதை மனம் வெண்ணெய் போல உருக ஆரம்பிக்கும். உடல், உயிர், உணர்வு என்று எல்லாவற்றிலும் அந்த திருவரங்கனே நிறைந்திருந்தார்.

ஒருமுறை பெரியாழ்வார் கண்ணனுக்காக வைத்திருந்த மாலையை எடுத்து கோதை போட்டுக்கொள்வார். ‘தான் அந்த கார்மேகக் கண்ணனுக்கு சரியானவளா?’ என்று பார்த்துவிட்டு, கண்டிப்பாக அவன் திருவருள் கிடைக்கும் என்று நினைத்து அதைக் கழட்டி வைத்துவிடுவார்.

ஒருமுறை கோதை மாலையை சூடும்போது பெரியாழ்வார் பார்த்துவிடுவார். அவருடைய வாழ்க்கையே அந்த மாலையை அர்ப்பணிக்கும் திருத்தொண்டுதான். இறைவனுக்கு மாலை படைக்கும் போது அதன் வாசனையை முகர்ந்து கூட பார்க்கக்கூடாது என்று சொல்வார்கள். ஆனால், கோதை அதை எடுத்துப்போட்டிருப்பதை கண்டுக் கடும்கோபம் கொள்கிறார்.

கோதையை திட்டி மாலையை கழட்டி வைக்கச் சொல்கிறார். இதனால் கோதை அழுதுக்கொண்டே சென்றுவிடுவார். அன்று பெரியாழ்வார் அந்த மாலையை இறைவனுக்கு அர்ப்பணிக்காமல் வருத்தத்திலேயே இருந்துவிடுவார். அன்று பெரியாழ்வாரின் கனவில் திருமால் வந்து, ‘ஏன் இன்று மாலை எடுத்து வரவில்லை?’ என்று கேட்பார். அதற்கு பெரியாழ்வாரோ, ‘இன்று மாலையை என் மகள் எடுத்து அணிந்துவிட்டால்’ என்று கூறுவார். அவள் சூடிக்கொடுத்த மாலை தான் எனக்கு மணம் மிகுந்ததாக இருக்கிறது. எனவே, ‘இனி அவள் சூடிக்கொடுத்த மாலையையே எனக்கு கொண்டு வா!’ என்று திருமால் சொல்லிவிடுவார். அதிலிருந்து பெரியாழ்வார் தினமும் கோதையிடம் மாலையை சூடக்கொடுத்து வாங்குவார்.

கோதைக்கு திருமண வயது வரும். பெரியாழ்வார் கோதையிடம் மெதுவாக கல்யாண பேச்சை ஆரம்பிப்பார். அதற்கு கோதையோ, ‘நான் மனிதனை திருமணம் செய்துக் கொள்ள மாட்டேன்’ என்று கூறிவிடுவார். வேறு யாரை திருமணம் செய்துக்கொள்ள போகிறாய்?  என்று கேட்டதற்கு, ‘நான் திருவரங்கனைத்தான் கல்யாணம் செய்து கொள்வேன்’ என்று கூறிவிடுவார். இதைக்கேட்ட பெரியாழ்வார் அதிர்ச்சியாகிவிடுகிறார்.

ஆண்டாள் அரங்கனைத்தான் திருமணம் செய்து கொள்வதாக கூறுகிறார். இது எப்படி சாத்தியமாகும் என்று பேசி அவர் மனதை மாற்ற முயற்சிப்பார். ‘திருவரங்கன் இல்லாமல் மனிதனுக்கு என்னை திருமணம் செய்து வைக்க முயற்சித்தால் நான் என் வாழ்க்கையை முடித்துக்கொள்வேன்’ என்று கூறுவார்.

அதற்கு மேல் எதுவும் பேசமுடியாமல் பெரியாழ்வார் சென்றுவிடுவார். ஆண்டாள் திருவரங்கனை நினைத்து சாப்பிடாமல் மெலிந்து போவார். இதை பார்த்த பெரியாழ்வாரால் தாங்கிக்கொள்ள முடியாமல், ‘உன் மனது சரியாக அப்பா என்ன செய்ய வேண்டும்’ என்று கேட்பார். ஆண்டாள், ‘எனக்கு 108 திவ்யதேசங்களை பற்றிச் சொல்லுங்கள்’ என்று சொல்வார். பெரியாழ்வார் வட திருப்பதியிலிருந்து சொல்ல ஆரம்பிப்பார். இல்லை எனக்கு ஸ்ரீரங்கத்திலிருந்து சொல்லுங்கள் என்று கூறுவார். பெரியாழ்வார் ஸ்ரீரங்கம் பற்றி சொல்ல ஆரம்பிப்பார். அதைக் கேட்கும்போது ஆண்டாள் கண்களில் இருந்து கண்ணீர் வழியத்தொடங்கும். திருவரங்கம் இருக்கும் திசையைப் பார்த்து வணங்குவார். ஆண்டாளின் காதல் பக்தியாக மாறியது பெரியாழ்வாருக்கு புரிந்துவிடும்.

இதையும் படியுங்கள்:
'பேயாக மாற வேண்டும்' என்று சிவனிடம் வரம் கேட்டவரைத் தெரியுமா?
Andal, with her pure love ruled  the god!

கோதை திருவரங்கனை திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்து நோன்பு இருப்பார். மார்கழி மாதம் தன் தோழிகளை எழுப்பி திருப்பாவை பாடுவார்கள். ஒருநாள் கோதை தன் தோழியைக் கூப்பிட்டு மிகவும் மகிழ்ச்சியாக, ‘எனக்கு ஒரு கனவு வந்தது என்று கூறுவார். அதில் ஆயிரம் யானைகள் சூழ்ந்துவர நாராயணன் ஊர்வலமாக வருவது போல கனவு கண்டேன்’ என்று கூறுவார்.

பெரியாழ்வார் கோதையிடம், திருவரங்கன் என் கனவில் வந்து, ‘உன் மகளை நான் திருமணம் செய்துக் கொள்கிறேன் என்று கூறினார்’ என்று சொல்வார். அப்போது பாண்டிய மன்னனின் தூதுவர்கள் வந்து மன்னருக்கும் இதே கனவு வந்தது. கோதை ஸ்ரீரங்கம் வருவதற்கான ஏற்பாடுகளை செய்ய சொல்லிக் கட்டளை இட்டிருப்பதாகக் கூறுவார்கள்.

யானைகள், பரிவாரங்கள், பல்லக்குகள் சூழ கோதையை ஸ்ரீவில்லிப்புத்தூரில் இருந்து ஸ்ரீரங்கம் கூட்டி வருவார்கள். திருவரங்கம் கோவிலுக்கு வந்த பெரியாழ்வாரையும், கோதையையும் பாண்டிய மன்னன் வரவேற்பார். ஆண்டாள் திருவரங்கன் சன்னதியை நோக்கி போவார், அங்கே அரங்கன் முன் நிற்பார், அரங்கனை பார்ப்பார். இத்தனை வருட தவம், பக்தி, ஏக்கம் என்று ஆண்டாள் கண்களில் உயிரே கண்ணீராக வழியும். திருவரங்கனின் திருமேனியை தழவிக்கொள்வார். அரங்கனுடன் ஒன்றாகக் கலப்பார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com