மகோன்னதம் தரும் மார்கழி!

மகோன்னதம் தரும் மார்கழி!

மார்கழி மாதம் சிறப்பான மாதமாகும். தேவர்களுக்கு ஒருவருடம் என்பது ஒருநாளாகும். இதில் தட்ஷிணாயணம் என்பது இரவுக்காலமாகும். மார்கழி மாதம் பருவத்தின் கடைசி மாதமாகும். தட்ஷிணாயணம் தேவர்களுக்கு இரவு நேரமாதலால்  மார்கழிமாதம் பிரம்ம முகூர்த்தமாகும். எனவே இந்த மாதம் தெய்வங்களை வணங்க உகந்த மாதமாகும். இந்த மாதம் பெருமாள் கோவில்களில் காலை அபிஷேக அர்ச்சனை சேவைகள் நடைபெறும்.

மார்கழி மாதத்தில் பனிபெய்யும். அந்தக் குளிரிலும், 'திருப்பாவை பாசுரங்கள்', மற்றும் எம்பெருமான் பக்திப் பாடல்களைப் பாடிக்கொண்டு, பஜனை கோஷ்டியினர் வீதியில் வலம் வருவார்கள்.  அதில் ஒரு விஞ்ஞான பூர்வ உண்மையும் இருக்கிறது. மார்கழி மாத அதிகாலையில் 'ஆக்ஸிஜனின்' அளவு அதிகமாக இருப்பதால், அதிகாலையில் வெளியில் வரும்போது உடலும், உள்ளமும்  ஆரோக்கியமாக இருக்கும். இல்லத்தரசிகள் பஜனைப் பாடி வரும் பெரியவர்களின், காலில் நீர்வார்த்து, அவர்கள் கொண்டு வரும் விளக்கிற்கு பூச்சூடி  வணங்கி அருள் பெறுவர்.


சிறிய பெரிய பெருமாள் கோவில்கள் தோறும், தினம் ஒரு கட்டளைதாரரின் அன்பளிப்போடு, காலையிலேயே, அபிஷேக, ஆராதனைகள் நடத்தப்படும். அங்கேயே பஜனைகளும், திருப்பாவை விளக்கக் கதா காலட்சேபங்களும் நடைபெறும்.  பூஜை முடிந்து வழங்கப்படும், மார்கழி மாத பிரசாதங்கள்  விசேஷமானவை. பக்தர்கள் அதிகாலையிலேயே குளித்து முடித்து, ஸ்ரீ சூரணமிட்டுக் கொண்டு, பெருமாள் கோவிலுக்கு வந்து விடுவார்கள். பிரசாதத்திற்கென்றே சிறுவர் கூட்டம் கூடும்.

ஸ்ரீ வில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவிலில்  சிறப்பாக திருவிழா நடக்கும். பலபகுதிகளிலிருந்தும் பக்தர்கள் வந்து சூடிக் கொடுத்த சுடர்க்கொடியாளின் அருளையும், ஸ்ரீமன் நாரயணன் அருளையும் பெறுவார்கள்.  'மார்கழித் திங்கள் மதி நிறை நன்னாளால்', என்ற பாசுரத்தில் தொடங்கி, 'வங்கக்கடல் கடைந்த மாதவனைக் கேசவனை' என்ற முப்பதாவது பாசுரம் வரை தினம் தினம் பாடி மகிழ்வார்கள்.

இப்பொழுது சற்று நிலைமை மாறிவிட்டது.  சில கோவில்களில் அதிகாலையில் ஒலிபெருக்கி மூலம் பக்திப் பாடல்களை ஒலி பரப்புகிறார்கள். பூஜைகளும் விமரிசையாக நடத்தப்படுவதில்லை.ஆனாலும் பல தலங்களில் சிறப்பாக மார்கழி உற்சவம் நடந்து கொண்டுதானிருக்கிறது.

சிவத்தலங்களில் மாதம் முழுதும் திருவெம்பாவை நிகழ்ச்சி நடைபெறும்.சபாக்களில், கர்நாடக சங்கீத திருவிழா இந்த மாதத்தில் களைகட்டும்.

இந்தமாதம் முழுதும் பெண்கள் காலையிலேயே குளித்து விட்டு, வாசலில் வண்ண வண்ணக் கோலங்களிடுவார்கள்‌. கோலத்தினிடையே தீபங்கள் வைப்பதும் உண்டு.  பெரும்பாலும் அக்ரஹாரங்களில், வீட்டுக்கு வீடு வாசலில் வண்ணக் கோலங்கள் அலங்கரிக்கும்.  கிராமப்புறங்களில் கோலத்தின் நடுவே,  சிறிதளவு சாணத்தை வைத்து, அதன்மீது பூசணிப் பூவை வைப்பார்கள்.

எத்தனை காலங்கள் மாறினாலும், நமது இறைநம்பிக்கையும்,  வழிபாடும் என்றும் குறைவதில்லை.

ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்...!

         

 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com