பழநி முருகனை தரிசிக்க உகந்தது ஆண்டி கோலமா? ராஜ அலங்கார கோலமா?

பழநி முருகனை தரிசிக்க உகந்தது ஆண்டி கோலமா? ராஜ அலங்கார கோலமா?

’ஆவினன்குடி’ என அழைக்கப்படும் பழனி முருகன் கோயில் குடமுழுக்கு வைபவம் வரும் 27ம் தேதி வெகு விமரிசையாக நடைபெற உள்ளது. பழனி முருகனை எந்தக் கோலத்தில், யார் தரிசித்தால் என்ன பலன் அதிகம் கிடைக்கும் எனக் காண்போம்.

மனிதனின் சுக வாழ்வுக்கும், இறை வாழ்க்கைக்கும் உகந்த ஒரே இறைவன் பழனி முருகன்தான். இதனால்தான் இவருக்கு ஆண்டி கோலம், ராஜ அலங்காரம் என இரண்டு விதமான அலங்காரங்கள் செய்யப்படுகின்றன. இந்த இரண்டு கோலத்தை யார் எந்த காரணத்துக்காக தரிசிக்கலாம் என்பதைப் பற்றி பார்ப்போம். தண்டாயுதபாணி விக்ரகத்துக்கு நான்கு விதமான அபிஷேகப் பொருட்கள் மட்டும்தான் உபயோகிக்கப்படுகின்றன. அவை, நல்லெண்ணெய், பஞ்சாமிர்தம், சந்தனம், விபூதி என்பவை. மார்கழி மாதத்தில் மட்டும் பன்னீர் உபயோகிக்கப்படுகிறது.

இவற்றில் சந்தனம், பன்னீர் தவிர மற்றவை எல்லாம் தண்டாயுதபாணியின் சிரசில் வைத்து, உட னே அகற்றப்படுகிறது. அதாவது, முடி முதல் அடி வரை அபிஷேகம் என்கிற முழு அபிஷேகம் சந்தனத்துக்கும், பன்னீருக்கும் மட்டும்தான். இதில் சிரசு விபூதி என்பது சித்தர் உத்தரவால் பக்தர்களுக்கு வழங்கப்படுகிற ஒரு பிரசாதம். அது கிடைப்பது மிகவும் புண்ணியம். ஒரு நாளைக்கு ஆறு முறை தண்டாயுதபாணிக்கு அபிஷேகம் அலங்காரம் செய்யப்படுகிறது. இது ஐந்து முதல் ஏழு நிமிடத்துக்குள் முடிந்துவிடும். அபிஷேகம் முடிந்து அலங்காரம் செய்து விட்டால், பின்னர் அடுத்த அபிஷேகம் வரை மாலை சாத்துவதோ, பூக்களால் அர்ச்சனை செய்வதோ கிடையாது.

இரவில் முருகனின் மார்பில் மட்டும் வட்ட வடிவில் சந்தனக் காப்பு சாத்தப்படுகிறது. விக்ரகத்தின் புருவங்களுக்கிடையில் ஒரு பொட்டு அளவுக்கு சந்தனம் வைக்கப்படும். முன்னொரு காலத்தில் சந்தனக் காப்பை முகத்திலும் சாத்திக் கொண்டிருந்தனர். பின்னாளில் இந்த முறை மாற்றப்பட்டது. தண்டாயுதபாணி விக்ரகம் மிகுந்த சூடாக இருக்கும். ஆதலால் இரவு முழுவதும் அந்த விக்ரகத்திலிருந்து நீர் வெளிப்படும். இந்த நீரை அபிஷேகத் தீர்த்ததுடன் கலந்து, காலை அபிஷேகம் நடக்கும்போது, அங்கு இருக்கும் பக்தர்களுக்கு அதை பிரசாதமாக விநியோகம் செய்கிறார்கள்.

தண்டாயுதபாணி சிலையைச் சுற்றி எப்போதும் ஒருவித சுகந்த மணம் பரவி நிற்கும். தண்டாயுதபாணி சிலைக்கு இடது பக்கத்தில் ஒரு சின்ன மரகத லிங்கம் உள்ளது. அவரை தரிசிக்க வலது பக்கமாக சென்று, தீபம் காட்டுதல் வேண்டும். ஏனெனில். தீப ஒளி இல்லாமல் அந்த லிங்கத்தை தரிசிக்க இயலாது. பழனியில் இரண்டு மரகத லிங்கம் உள்ளன. ஒன்று முருகர் சன்னிதியில், இன்னொன்று போகர் சமாதியின் மேல். இந்த இரண்டையுமே போகர் பூஜை செய்ததாக ஒரு தகவல் உண்டு. தண்டாயுதபாணி சிலையை ராஜ அலங்காரத்தில் தரிசிக்க வேண்டுமா? ஆண்டி கோலத்தில் தரிசிக்க வேண்டுமா? எது ‌சிற‌ந்தது? என்ற கேள்வி பலருக்கு இருக்கலாம்.

முற்றும் துறந்த தவநிலை, அதாவது அலங்காரம் இல்லாமல் ஆண்டிக் கோலத்தில் பார்க்கும்போது நமக்குள் ஒரு மெய்ஞானம் உண்டாகும் என்பதற்காக, பெரிய ஞானிகளெல்லாம் அந்தக் கோலத்தைக் காண்பதற்காகத்தான் துடிப்பார்கள். முற்றும் துறந்தவர்கள், குடும்பத்தில் பல நிலைகளைக் கடந்தவர்கள் எல்லாம் அந்தக் கோலத்தை விரும்பிப் பார்க்கலாம். கோர்ட், வழக்கு சம்பந்தப்பட்ட பிரச்னைகள் தீர, மனக் குழப்பம் விலக, பேச்சுக் குறைபாடு அகல, தடைப்பட்ட திருமணம் நடைபெற, சொந்த வீடு அமைய மற்றும் தீராத நோய்கள் தீர ராஜ அலங்கார கோல தரிசனம் மிகவும் பலன் தருவதாகும்.

குறிப்பாகச் சொல்ல வேண்டுமெனில், நம்மால் சரி செய்யக்கூடிய விஷயங்களுக்கு ராஜ அலங்கார தரிசனமும், நம்மால் முடியாது, மருத்துவராலும் முடியாது, யாராலும் முடியாது போன்ற விஷயங்களுக்கெல்லாம் ஆண்டிக் கோல தரிசனமும் மிக மிக உகந்ததாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com