மாதங்களில் சிறந்த மார்கழியின் முக்கியமான விசேஷங்களில் ஒன்று 'ஸ்ரீ ஹனுமத் ஜயந்தி.' மார்கழி அமாவாசையும் மூல நட்சத்திரமும் கூடிய தினத்தில் அவதாரம் செய்வதர் ஸ்ரீ ஆஞ்சனேயர். இவர் வாயு தேவரின் புதல்வர். இவரின் அன்னை அஞ்சனா தேவி, ஸ்ரீ ராமபிரானின் அணுக்கத் தொண்டர். இவரை
ஸ்ரீ ஹனுமான், ஆஞ்சனேயர், ராமதூதன், மாருதி, அஞ்சனை மைந்தன் என்று பல திருநாமங்களில் வழிபட்டாலும், 'ஸ்ரீ ராமபக்த ஹனுமான்' என்று துதித்து வழிபட்டாலே அகமகிழ்ந்து போவாராம். எல்லா பெருமாள் கோயில்களிலும் ஆஞ்சனேயருக்கு ஒரு தனி சன்னிதி உண்டு. இதைத் தவிர ஸ்ரீ ஆஞ்சனேயருக்கு என்றே தனிக் கோயில்களும் உண்டு. சுசீந்திரம், நாமக்கல் போன்ற ஊர்களில் ஸ்ரீ ஆஞ்சனேயர் மிக பிரம்மாண்ட ரூபத்தில் காட்சியளிக்கிறார். சென்னை, நங்கநல்லூரிலும் ஆஞ்சனேயர் பிரம்மாண்ட ஸ்வரூபத்தில் காட்சியளித்து
அருள்பாலிக்கிறார். அனைத்து அனுமன் கோயில்களிலும், 'ஸ்ரீ ஹனுமத் ஜயந்தி' மிக விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது.
ஹனுமத் ஜயந்தி வழிபாட்டிலும் தென்னிந்தியா, வட இந்தியா என்று வேறுபாடு உள்ளது. நாம் இங்கே மார்கழி மாத அமாவசையும் மூல நட்சத்திரமும் கூடிய தினத்தன்று ஸ்ரீ ஹனுமத் ஜயந்தி வழிபாடு செய்தால், அவர்கள் சித்திரை மாத பௌர்ணமி தினத்தில் ஸ்ரீ ஹனுமத் ஜயந்தியைக் கொண்டாடுகிறார்கள். 'கணபதி பப்பா மோரியா!' என்று ஆரவாரித்து பிள்ளையார் சதுர்த்தியைக் கொண்டாடுவது போல, 'சங்கட விமோசன ஹனுமான்' என்று அவரைப் போற்றி 'ஹனுமான் சலீஸா' போன்ற சுலோகங்களைப் பாடி துதித்து வணங்குகிறார்கள்.
மற்றவர்களுக்கு அசாத்தியமாக இருக்கக்கூடிய காரியங்கள் இவருக்கு துச்சமாக இருப்பதாலேயே,
'அஸாத்ய சாதக ஸ்வாமி அஸாத்யம் தவ கிம்வதராமதூத
க்ருபாசிந்தோ மத் கார்யம் சாத்திய பிரபோ'
என்னும் மந்திரத்தை சொல்லி வழிபடுகிறார்கள்.
'சொல்லின் செல்வர்' என்று புகழப்படுபவர் ஸ்ரீ ஹனுமான். அவருக்கு இந்த பட்டப்பெயர் எப்படிக் கிடைத்தது தெரியுமா? ஸ்ரீ ராமன் சீதையை பறிகொடுத்து விட்டு தவித்துக் கொண்டிருக்கிறார். அவரும் லட்சுமணனுமாக அலைந்து திரிந்து கிஷ்கிந்தைக்கு வந்தாயிற்று. அங்கே வாலியை வதம் செய்து சுக்ரீவனுக்கு உதவி செய்து அவனை வானர சாம்ராஜ்யத்துக்கு அரசனாக ஆக்கினார். அதனால் நன்றி மிகுந்த சுக்ரீவன் எப்பாடு பட்டாவது சீதையைக் கண்டுபிடித்து ராமனின் மனக்கலக்கத்தையும், துயரத்தையும் போக்க வேண்டும் என்று சங்கல்பம் செய்து கொண்டான். எல்லோரும் கூடி ஆலோசித்து ஸ்ரீ ஹனுமான் அதற்குப் பொருத்தமானவர் என்று தீர்மானித்து அவரை சீதையைத் தேட அனுப்புகிறார்கள். கடலைத் தாண்டி, கடலுக்குள் இருக்கும் பகைவர்களை வென்று லங்காபுரிக்குச் சென்று அந்த நாடு முழுவதும் தேடி, கடைசியில் அசோக வனத்தில் சீதையைக் கண்டார் அனுமன். கண்டதோடு மட்டுமல்லாமல், அந்தச் செய்தியை அவர் திருவாக்காலேயே ஸ்ரீ ராமனுக்குச் சொன்னார்.
எப்படிச் சொன்னார் தெரியுமா? சீதையை என்று ஆரம்பித்தால் கூட, ‘சீதைக்கு என்ன ஆனதோ’ என்று ஸ்ரீராமன் பயந்து விடுவார் என எண்ணி, ‘கண்டேன் சீதையை!’ என்றார். எப்பேர்ப்பட்ட நேர்மறை வார்த்தைகள்! எதிராளியின் பயம், மனக்கவலை எல்லாவற்றையும் தகர்த்தெறிந்து நொடிப்பொழுதில் உற்சாகமும், தைரியமும் கொடுக்கும் வார்த்தைகள்! இந்த வார்த்தைகளைச் சொல்லி ஸ்ரீ ராமரின் மனதை அமைதிப்படுத்தியதால் அல்லவோ அவர், 'சொல்லின் செல்வர்' என்று புகழப்படுகிறார் ஸ்ரீ ஹனுமான். அருணாசலக் கவிராயர் இந்த சம்பவத்தை, ‘கண்டேன், கண்டேன், கண்டேன் சீதையை! கண்டேன் ராகவா!’ என்னும் பாகேஸ்ரீ ராகப் பாடலில் மிக அழகாக எழுதியிருக்கிறார்.
எங்கெல்லாம் ஸ்ரீராம நாமம் ஒலிக்கிறதோ அங்கெல்லாம் ஆஞ்சனேயர் அமர்ந்திருப்பார். ஸ்ரீமத் ராமாயணம் உபன்யாசம் செய்யும்போது உபன்யாசகர் பக்கத்தில் ஒரு மணைப்பலகை கோலமிட்டு வைப்பது வழக்கம். ராமாயணத்தைக் கேட்க அங்கே ஸ்ரீ ஆஞ்சனேயர் நிச்சயம் வந்து உட்கார்ந்து கொள்வார் என்பதற்காகத்தான் அப்படிச் செய்வார்கள். சில இடங்களில் இந்த மாதிரி உபன்யாசமோ அல்லது ஸ்ரீ ராமருக்குப் பூஜையோ நடக்கும்போது ஒரு வானரம் எங்கிருந்தோ பூஜை அறைக்குள் வந்து நைவேத்தியத்துக்காக வைத்திருக்கும் வாழைப்பழத்தை எடுத்து சாப்பிடுவதையும் பலர் பார்த்திருக்கிறார்கள். நிறைய நேரங்களில் கண்ணுக்குத் தெரியாத அருவமாய் அமர்ந்திருந்து தானும் உபன்யாசத்தை ரசித்துக் கேட்டு அங்கே வந்தவர்களுக்கெல்லாம் வெற்றியையும், சந்தோஷத்தையும் வாரி வழங்கி விட்டுப் போகிறார். ராம நாமம் எப்போதும் எங்கேயும் ஒலித்துக் கொண்டேயிருப்பதால் அவர் அந்த இடங்களில் நித்ய வாசம் செய்வதால் அவர், 'சிரஞ்சீவி' என்று அழைக்கப்படுகிறார்.
ராம நாமம் லிகித நாம ஜபமாக, 'ஸ்ரீ ராமஜயம்' என்று பக்தர்களால் கோடிக் கணக்கில் எழுதப்படுகிறது. ராம நாமம் எழுதப்பட்ட காகிதங்களை அழகாகக் கத்தரித்துத் தொடுத்து அதையே ஸ்ரீ ஹனுமானுக்கு மாலையாக அணிவிப்பதை கோயில்களில் காணலாம்.
அனுமனை பற்றி இன்னொன்றும் சொல்லப்படுகிறது. இவர் ராமனுக்கு அணுக்கத் தொண்டராக இருந்தபோதிலும் இவர் சிவனின் அம்சமாக அவதாரம் எடுத்தவர் என்றும் சொல்லப்படுகிறது. ராமாயணத்தில் மஹாவிஷ்ணு ராமனாகவும், மஹாலட்சுமி சீதா தேவியாகவும், மஹாவிஷ்ணு பள்ளிகொள்ளும் ஆதிசேஷன் லட்சுமணனாகவும் அவதரித்தனர். இந்தக் குழுவில் இடம்பெற்று, ராமாயணம் என்னும் மாபெரும் இதிகாசத்தில் பங்கு பெற சிவனுக்கும் ஆர்வம் மிகுந்ததாம். அத்துடன் காக்கும் கடவுள் ஸ்ரீ மஹாவிஷ்ணுவுக்கு சேவை செய்யவும் அவருக்கு ஆசை ஏற்பட்டதாம். அதனால்தான் அனுமனாக அவதரித்தார் என்று புராணங்கள் கூறுகின்றன. எனவே ஆஞ்சனேயரை வழிபட்டால் சிவனையும் பெருமாளையும் இணைந்து வழிபட்ட புண்ணியம் கிடைக்கும் என்கிறார்கள்.
அது மட்டுமல்ல, ஒருமுறை சனீஸ்வர பகவான் ஏழரை சனிக்காக ஸ்ரீ ஹனுமானைப் பிடிக்க வந்தார். அப்போது ஹனுமான் சேதுபந்தனம் அமைக்க பிற வானரங்களோடு தலையில் பாறைகளை சுமந்து கடலில் எறிந்து கொண்டிருந்தார். தன்னைப் பிடிக்க வந்த சனீஸ்வரனிடம், "எனக்கு ஸ்ரீ ராம சேவை செய்ய வேண்டியிருப்பதால் என் தலையை மட்டும் பிடித்துக்கொள்!" என்று கூற, சனி பகவானும் அவ்வாறே அவர் தலையில் ஏறி அமர்ந்து கொள்கிறார். ஸ்ரீ ஹனுமான் 'ஸ்ரீ ராம ஜயம்' என்று பாறைகளில் எழுதி அதைத் தன் தலையில் வைத்து சுமந்து வந்து கடலில் வீசி எறியும்போது பாறைகளின் கனத்தால் நசுக்கப்பட்ட சனி பகவான், 'தப்பித்தோம், பிழைத்தோம்' என்று தலையிலிருந்து கீழே குதித்து விடுகிறார். ஏழரை ஆண்டுகள் அவரைப் பிடிக்க வந்த சனி பகவான் வெறும் ஏழரை நொடி கூட ராம நாமம் எழுதப்பட்ட பாறைகளின் கனம் தாங்காமல் இறங்கி விடுகிறார். அப்போது ஆஞ்சனேயரை துதிப்பவர்களுக்கு தன்னுடைய ஏழரை சனி பாதிப்பு எதுவும் இருக்காது என்று வரம் ஒன்றும் அளித்து விட்டுப் போகிறார். மக்கள் பயந்து நடுங்கும் சனீஸ்வரனையும் அடக்கக் கூடியவர் ஆஞ்சனேயர் என்பதால் ஏழரை சனி மற்றும் சனியால் எந்த வகையில் பாதிக்கப்படுகிறவர்களும் ஆஞ்சனேயரை வலம் வந்து வணங்கி, தன்னை சனியின் பாதிப்பிலிருந்து விடுபடச் செய்யும்படி கோரிக்கை வைக்கிறார்கள். ஆஞ்சனேயருக்கு, வடை மாலை, வெற்றிலை மாலை சாத்தி வணங்குவார்கள். அத்துடன் வெண்ணெய்க் காப்பு, சிந்தூரக் காப்பு செய்தும் அலங்கரிப்பார்கள்.
இந்த வருடம் ஸ்ரீ ஹனுமத் ஜயந்தி டிசம்பர் மாதம் 23ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) அனுசரிக்கப்படுகிறது. அன்று ஸ்ரீ துளசிதாசரால் இயற்றப்பட்ட, 'ஹனுமான் சாலீஸா' பாராயணம் செய்தால் நினைத்த காரியம் நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. வீரத்தின் விளைநிலமாய், விஸ்வரூபமாய் நின்றவரை அவரது அவதாரத் திருநாளில் போற்றி வணங்குவது சிறப்பாகும்.