
-பொன்னம்மாள்
பிரம்மாவின் ஐந்தாவது தலையைக் கிள்ளியதும் பிரம்ம தேவருக்கு அடக்க முடியாத கோபம் ஏற்பட்டது. நெற்றியில் வழிந்த வியர்வையை வழித்து பூமியில் விட்டார். அதிலிருந்து, கவச குண்டலத்துடனும், வில், அம்புடனும் ஒரு மகா வீரன் தோன்றினான். அவன் பிரம்மாவை வணங்கி, ''நான் என்ன செய்ய வேண்டும்?" என்று கேட்டான்.
கிள்ளப்பட்ட தனது தலையோடு நின்றிருந்த ருத்திரனைக் காண்பித்து, "ஸ்வேதஜா அவனைக் கொன்றுவிடு" என்று உத்தரவிட்டார். ருத்திரன் மீது ஸ்வேதஜன் பாய்ந்தான். ருத்ரன் விஷ்ணுவைத் தஞ்சமடைந்தான். விஷ்ணு ஹுங்காரம் செய்ய ஸ்வேதஜன் மூர்ச்சையானான். பிறகு, ருத்ரன் விஷ்ணுவிடம் கபாலம் கீழே விழ பிட்சையிடுமாறு கோரினார். வலக்கரத்தை நீட்டினார் மகாவிஷ்ணு. சூலத்தால் அக்கரத்தைக் குத்த, அதிலிருந்து அருவியென உதிரம் கொட்டியது.
பிட்சா பாத்திரம் நிரம்பியதே தவிர, கபாலம் கீழே விழவில்லை. ருத்ரன் அந்தக் குருதியைத் துழாவினார். கடையப்பட்ட அந்த ரத்தத்திலிருந்து தேஜஸுடன் ஒரு வீர புருஷன் தோன்றினான்.
"சம்பு! இந்த நரன் யார்?" என்று விஷ்ணு கேட்க, "பிரபு! தாங்களே அவனுக்கு நரன் என்று பெயர் சூட்டியுள்ளீர்கள். உங்கள் உதிரத்திலிருந்து உருவான இவன், 'ரக்தஜன்' என்றழைக்கப்படுவான். இவன் அஸ்திர வித்தையில் நிகரற்றவனாவான். நர - நாராயணர் என்ற பெயரில் தங்களோடு தவம் செய்வான். சகல யுத்தங்களிலும் தேவர்களுக்கு உதவியாக இருந்து உலகத்தைப் பரிபாலனம் செய்வான்" என்று கூறினார் ருத்ரன்.
அவன் சிவனை வணங்கி,"என்னை சிருஷ்டித்த காரணம் என்ன? நான் என்ன செய்ய வேண்டும்?'' என்று கேட்டான். சிவன் அவனிடம் மூர்ச்சித்திருந்த ஸ்வேதஜனைக் காண்பித்து, ''பிரம்ம தேஜஸிலிருந்து உண்டான இவன் என்னைக் கொல்ல வந்தான். நீ அவனைக் கொன்றுவிடு" என்று கூறிவிட்டு மறைந்துவிட்டார். ரக்தஜன் தனது வலது காலால் ஸ்வேதஜனை உதைத்தான். அவனும் உடனே துள்ளி எழுந்து நின்றான். இருவருக்குமிடையே பயங்கரப் போர் மூண்டது. அவர்கள் வில்லிலிருந்து எழுந்த ஓசை சகல லோகங்களையும் நடு நடுங்கச் செய்தது. அவர்களுடைய அஸ்திரங்கள் அனல் கக்கிக்கொண்டு பாய்ந்தன. இருவரும் சளைக்காமல் இரண்டு ஆண்டுகள் யுத்தம் செய்தனர்.
மகாவிஷ்ணு, பிரம்மலோகம் சென்றார். இன்று ஸ்வேதஜன் தோற்று விழப்போகிறான். நீர் என்ன செய்வதாக உத்தேசம்?" என்று கேட்டார்.
"பகவானே! என்னால் சிருஷ்டிக்கப்பட்டவனுக்கு புது வாழ்வு அளியுங்கள்" என்று பிரார்த்தித்தார் நான்முகன்.
"அவ்வாறே ஆகட்டும்" என அங்கிருந்து மறைந்தார் விஷ்ணு. விஷ்ணு போரிட்டுக்கொண்டிருந்தவர் களிடையே தோன்றி போரை நிறுத்தும்படி செய்தார்.
"இந்த ஜன்மத்தில் நீங்கள் யுத்தம் செய்ததுபோதும். துவாபர யுகத்தின் முடிவில் ஒரு பெரிய யுத்தம் வரப்போகிறது. அதில் நீங்கள் இருவரும் போர் புரிந்து உங்களது பராக்கிரமத்தைக் காட்டலாம்" என்றார். அதன் பிறகு கிரகங்களின் அதிபதியான சூரியனையும், தேவர்களின் அதிபதியான இந்திரனையும் அழைத்து, "இவர்கள் பராக்கிரமசாலிகள். இவர்களில் ஒருவரை நீங்கள் ஏற்று ரட்சிக்க வேண்டும். ஸ்வேதஜன் சூரியனிடம் இருக்கட்டும், ரகத்ஜன் இந்திரனிடம் ஐக்கியமாகட்டும்!" என்றருளினார்.
துர்வாசருக்கு சேவை செய்து, ஐந்து வரங்கள் பெற்ற குந்தி (ப்ருதா), அந்த வரங்கள் பலிக்கிறதா என்று சோதித்துப் பார்க்க, சூரியன் வந்து கர்ணனை (ஸ்வேதஜன்) அருளினான். குந்தியின் காதின் வழியாகப் பிறந்தவன் கர்ணன் என்கிறது பத்ம புராணம். ரக்தஜனே அர்ஜுனனாகப் பிறந்தான். ஜன்மப் பகையால் அடித்துக்கொண்டார்கள் என்று புலஸ்தியர் பீஷ்மருக்குச் சொன்னார்.
பின்குறிப்பு:-
தீபம் ஏப்ரல் - 05 2018 இதழில் வெளியானது இச்சிறுகதை. இங்கு கல்கி ஆன்லைன் களஞ்சியத்திலிருந்து மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. சில விஷயங்கள் நமக்கு நன்கு அறிமுகமாகி யிருந்தாலும், தெரிந்திருந்தாலும்... அவற்றை நாம் மீண்டும் மீண்டும் படித்து பயனடையக்கூடிய தகவல்களாக... எவர்க்ரீன் செய்திகளாக நினைவுபடுத்திக் கொள்வது நல்லதுதானே !
- ஆசிரியர், கல்கி ஆன்லைன்