அனுபவச் சுவடுகள்- 6 குரு பூர்ணிமா தினத்தில் எடுத்த முடிவு!

ஆன்மிகச் சொற்பொழிவாளர் பி. சுவாமிநாதன்
ஆன்மிகச் சொற்பொழிவாளர் பி. சுவாமிநாதன்

ரு செய்தியோ, கட்டுரையோ, கதையோ சுவாரஸ்யம் குன்றிக் கொடுக்கப்பட்டால், அதை எடிட் செய்து சுவாரஸ்யமானதாக ஆக்கமுடியும். இந்த ஒரு தொழில்தான் எனக்குத் தெரியும்!

நிலைமை இப்படி இருக்க... நான் எப்படி இதுவரை செய்து வந்த தொழிலை மாற்றிக்கொண்டு சொற்பொழிவு ஆற்ற போகமுடியும்?

நண்பர் ரமணன் சொன்னார்: ‘‘ஸ்வாமீ... மகா பெரியவாளைப் பத்தி நிறைய படிச்சிருக்கீங்க... எழுதி இருக்கீங்க... அந்த அனுபவங்களையே மேடைகள்ல பேச ஆரம்பியுங்களேன்.’’

எனக்குப் பகீர் என்றிருந்தது.

கும்பகோணத்தில் ஆதி கும்பேஸ்வரர் கோயிலில் திருவிழாக் காலங்களின்போது வாரியார் சுவாமிகள், புலவர் கீரன் போன்றோர் பெரிய பிராகாரத்தில் பந்தல் போட்டுச் சொற்பொழிவாற்றுவதைக் கேட்டிருக்கிறேன்.

மேடைக்கு முன்னால் உட்கார்ந்திருக்கிற பக்தகோடிகளை இங்கிருந்து நகர விடக் கூடாது என்பதற் காகவும், அவர்களது கவனத்தைத் திசை திருப்பக் கூடாது என்பதற்காகவும், பேச்சில் சுவாரஸ்யம் கூட்டுவதற்காகவும் ஆரம்பித்த பிரதான சப்ஜெக்ட்டில் இருந்து அவ்வப்போது விலகிப் போவார்கள். ஒரு சில நிமிடங்கள் கழித்து, விட்ட இடத்துக்கே மீண்டும்  மெயின் சப்ஜெக்ட்டுக்குள் லாவகமாகப் புகுந்துவிடுவார்கள்!

இப்படிப்பட்ட ஜாம்பவான்கள் உலகத்தில், எனக்கு எப்படி சொற்பொழிவு சாத்தியப்படும்? பழக்கம் இல்லையே!

உதட்டைப் பிதுக்கிக்கொண்டு, ‘‘பேச்சு எனக்கு வராது சார். நான் எட்டிப் பார்க்காத துறையாச்சே’’ என்று பதில் சொன்னேன்.

‘‘எல்லாம் வரும் ஸ்வாமீ... இந்த உலகத்துல முடியாததுன்னு ஒண்ணும் இல்லவே இல்லை’’ என்றார் ரமணன் கண்களில் பிரகாசத்துடன்.

இவர் சொன்ன வார்த்தைகளை இதற்கு முன் பலமுறை படித்திருந்தாலும், பிறர் சொல்லக் கேட்டிருந்தாலும், அது சத்தியமான உண்மை என்பதைப் பின்னாட்களில் அனுபவ ரீதியாக உணர்ந்தேன்.

‘‘சரி சார்... பார்க்கலாம்’’ என்று நம்பிக்கை இல்லாமல் சொல்லிவிட்டு, வீட்டுக்கு வந்தபோது இரவு மணி ஒன்பதைத் தாண்டி விட்டிருந்தது.

ன்றைய தினம் குரு பூர்ணிமா. பவுர்ணமி தினம். குருமார்களை வணங்குவதற்கும் போற்றுவதற்கும் உகந்த நாள். எப்படியேனும் இன்றைய தினம் ஒரு தீர்மானத்துக்கு வந்து விட வேண்டும் என்று முடிவெடுத்தேன்.

ஒரு எழுத்தாளர் கட்டுரை எழுதுகிறார் என்றால், அது அச்சுக்குப் போவதற்கு முன், மீண்டும் மீண்டும் படித்துப் பல முறை திருத்தம் போட முடியும். அவ்வளவு ஏன்? அச்சுக்குப் போன பின்னும் மெஷினை நிறுத்தி, முக்கியமான திருத்தங்களைச் செய்து பிறகு மெஷினை ஓட விடவும் முடியும்.

சொற்பொழிவின்போது...
சொற்பொழிவின்போது...

ஆனால், சொற்பொழிவு என்பது அப்படி அல்ல. ஒரு மேடையில் பேசுவதற்காக ஏறி சப்பணமிட்டு அமர்ந்து விட்டால், பேசுகின்ற வார்த்தைகள் அத்தனையும் ‘லைவ்’. தவிர, அத்தனை பேரின் முகமும் கவனமும் பேசுகிறவர் மீது காணப்படும்.

ஒரு விஷயத்தை மேடையில் பேசி முடித்த பின், ‘மன்னிக்கணும். சற்று முன் நான் பேசும்போது இந்த வார்த்தையை இப்படித் தவறாக உச்சரித்து விட்டேன். அதுபோல் இன்னாரின் பெயரை இப்படித் தவறாகச் சொல்லி விட்டேன்’ என்றெல்லாம் மெஷினை நிறுத்தி கரெக்ஷன் போடுவதுபோல் மைக் முன்னால் திருத்தங்கள் அறிவிக்க முடியாது.

பேச்சு என்பது எத்தனை சக்தி வாய்ந்தது பாருங்கள்!

இதையும் படியுங்கள்:
ஜெயிக்கும் வரை தோற்கலாம் தவறில்லை!
ஆன்மிகச் சொற்பொழிவாளர் பி. சுவாமிநாதன்

டுத்து நாம் என்னவாக ஆகப்போகிறோம் என்று யோசித்தேன். யோசித்தேன். யோசித்தவாறே படுக்கச் சென்றேன்.

அடி மனதில் இருக்கக்கூடிய உணர்வுகள்தான், உறக்கத்தில் சீர் தூக்கிப் பார்க்கப்படுகின்றன. அவைதான் கனவுகளாக வருகின்றன.

எனவேதான், இரவு படுக்கச் செல்லும்முன் நல்ல நினைவுகளுடன், நற்சிந்தனைகளுடன் ஒரு தம்ளர் தண்ணீர் குடித்து விட்டு, நெற்றியில் திருநீறு இட்டுக்கொண்டு, கடவுளை தியானித்து விட்டுப் படுக்க வேண்டும் என்பார்கள் நம் முன்னோர்கள்.

இரவு உறக்கத்தில் அப்படிக் கனவே வந்தாலும், கெட்ட நிகழ்வுகள் எட்டிக் கூடப் பார்க்காது.

எனக்குத் தூக்கம் வரவில்லை. இந்த குருபூர்ணிமா தினத்தில் எப்படியாவது ஒரு முடிவு எடுத்து விட வேண்டும் என்று வெறுமனே படுத்துக்கொண்டிருந்ததில், தூக்கம் வரவில்லை.

முதல் சொற்பொழிவே, அயோத்யா மண்டபத்தில்,
முதல் சொற்பொழிவே, அயோத்யா மண்டபத்தில்,

ன்னமும் நன்றாக நினைவிருக்கிறது. அதிகாலை இரண்டேமுக்கால் மணி.

இப்படியும், அப்படியும் பல விதமான எண்ணங்கள் அடுத்தடுத்து வந்து அலைக்கழித்துக் கொண்டிருந்த பொழுதில் திடீரென ஒரு சிந்தனை என்னுள் எழுந்தது.

பெரும் உத்வேகத்துடன் அது உதித்தது என்றே சொல்ல வேண்டும்.

ஆம்! ‘மேடைகளில் ஏறி பேச ஆரம்பிக்கலாம்... மகா பெரியவா பார்த்துக் கொள்வார்’ என்று திடமாகத் தீர்மானித்த முடிவு, அதிகாலை இரண்டேமுக்கால் மணிக்கு எடுக்கப்பட்டது.

பேசுவது என்பது என் தீர்மானம்.

இதை செயலாக்கம் பெற வைப்பது மகா பெரியவாளின் ஆசி என்று முடிவெடுத்தேன்.

‘மீண்டும் பத்திரிகையாளன் ஆக வேண்டாம். சொற்பொழிவாளனாகப் போய் விடலாம்’ என்று தீர்மானித்தாயிற்று!

ட்டுரைகள், கதைகள் எழுதினால் அவற்றை வெளியிடுவதற்கு ‘பத்திரிகைகள்’ என்கிற பிளாட்பாரம் தேவை.

பேச வேண்டும் என்று தீர்மானித்தால், மேடை தருவதற்கு சபாக்கள் தேவை.

எனக்கும் ஒரு மேடை கிடைத்தது. சாதாரணமான மேடை இல்லை அது. அத்தனை பெருமை கொண்ட மேடை.

ஆம்!

என் முதல் சொற்பொழிவே, சென்னை மேற்கு மாம்பலம் அயோத்யா மண்டபத்தில் அமைந்தது என்பது மகா பெரியவா எனக்குக் கொடுத்த மிகப்பெரிய ஆசிர்வாதம்.

2012ஆம் வருடம் செப்டம்பர் மாதம் 12ஆம் தேதிதான் என் முதல் சொற்பொழிவு.

(தொடரும்)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com