அனுபவச் சுவடுகள் – 5 “எழுத்தில் சாதித்தது போதுமடா!”

காஞ்சி மகா பெரியவா
காஞ்சி மகா பெரியவா

னக்கு ஆத்மார்த்த குருவாக அமைந்தவர் காஞ்சி மகா பெரியவா. காஞ்சி காமகோடி பீடத்தின் 68வது ஆச்சார்யர்.

1994ல் இந்த மகான் சமாதி ஆகி இருந்தாலும், இன்றைக்கும் பல லட்சக்கணக்கான பக்தர்களுக்கு ஆத்மார்த்த குருவாக அமைந்து, அவர்களை வழி நடத்தி வருகிறார். இவரை ஆத்மார்த்த குருவாக நான் அடைந்தது, முன் ஜன்மங்களில் செய்த புண்ணியம் என்றே நினைக்கிறேன்.

ஆன்மிக சொற்பொழிவாளர் பி. சுவாமிநாதன்
ஆன்மிக சொற்பொழிவாளர் பி. சுவாமிநாதன்

ரு குருவைக் கொள்வதில் பலருக்கும் சந்தேகம் இருக்கிறது.

குருவை நாம் தேட வேண்டுமா? அல்லது

குருவே நம்மை வந்தடைவாரா?

முன்னதும் இல்லை; பின்னதும் இல்லை.

எதெது எவ்வெப்போது நடக்க வேண்டுமோ, அவையவை அந்தந்த நேரத்தில் நடந்தே தீரும்.

உயிரைக் கொடுத்த இறைவன்தான் உணவைத் தருகிறான். உடையைத் தருகிறான். உறையுளை (தங்குமிடம்) தருகிறான். இந்த மூன்றும் இல்லாமல் ஏழையாலும் வாழ முடியாது. பணக்காரனாலும் வாழ முடியாது.

பசி என்கின்ற ஒன்று வந்துவிட்டால், சுற்றுப்புற சூழ்நிலையை முற்றிலும் மறந்து, நமது அந்தஸ்து, தகுதிகளை மறந்து உணவைத் தேடுகிறோம். அப்போது எவர் பேசினாலும் மனதுக்குள் போகாது.

அதுபோல் ‘குருநாதர் தேவை’ என்கிற ஞானப் பசி வந்ததும், அதற்கான சூழ்நிலைகளை குருநாதரே அமைத்து நம்மை ஆட்கொள்வார்.

பெண் பித்தராக இருந்த அருணகிரிநாதர் எப்படி முருகப் பெருமானின் அடி பணிந்தார்?

கொள்ளைக்காரராக இருந்த வால்மீகி, எப்படி நாரதரால் ஆட்கொள்ளப்பட்டு ராமாயணம் எழுதினார்?

குருவை இறுகப் பற்றிக்கொள்ள வேண்டும் என்ற எண்ணமும் தாகமும் ஆழ்மனதில் இருந்துவிட்டால், குருவாகப்பட்டவர் அழையா விருந்தாளியாக நாடி வந்து நம்மை அடைந்து உணர்த்தி விடுவார்.

அப்படித்தான் மகா பெரியவா என்னை ஆட்கொண்டு அருள்வதாக உணர்கிறேன்.

பத்திரிகையாளனாக இருந்த நான் சொற்பொழிவாளன் ஆனேன்.

ஆம்! பன்னிரண்டு வருடங்களுக்கு முன் வரை மேடைகள் போன்ற பொது இடங்களில் எனக்கு சரளமாகப் பேச வராது.

இதையும் படியுங்கள்:
மனதை உறுதியைப் பெற வைக்கும் 5 வழிகள்!
காஞ்சி மகா பெரியவா

பத்திரிகைகளில் ஆசிரியர் என்கிற உயர் பொறுப்பை வகித்துக் கொண்டிருந்ததால், ஆன்மிகம் சார்ந்த சில மேடைகளில் நட்பு கருதியும், கவுரவம் கருதியும் ஒரு சில வார்த்தைகள் பேசுவதற்கு என்னை அழைப்பார்கள்.

தயக்கத்துடன் மைக்கின் முன்னால் சென்று நின்று, ஓரிரு வார்த்தைகள் பேசி, ‘நன்றி’ சொல்லிவிட்டு அமர்ந்துவிடுவேன்.

பேசுவது என் வேலையல்ல என்பதால், அதற்குப் போதிய முக்கியத்துவம் தரவில்லை. தவிர, பேச்சுக் கலையைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும் என்கிற தேவையும் அப்போது எழவே இல்லை.

எழுத்து. எழுத்து. எழுத்து.

இதுதான் என் உயிர் மூச்சு.

நிறைய கோயில்கள் பார்த்தேன்.

நிறைய கட்டுரைகள் எழுதினேன்.

எல்லாம் நிறைவு பெற்று ‘எழுத்தில் சாதித்தது போதுமடா...’ என்று நான் வணங்கக்கூடிய குரு தீர்மானித்து விட்டார் போலிருக்கிறது. ஒரு சுப தினத்தில் தொடர் எழுத்துப் பணியில் இருந்து என்னை விலக வைத்து விட்டார். வந்து விட்டேன்.

ஆன்மிகம் சார்ந்த  மேடைகளில்
ஆன்மிகம் சார்ந்த மேடைகளில்

எல்லாம் காஞ்சி மகா பெரியவாளின் அருள்.

ஆத்மார்த்த குரு என்று சொன்னேனே... அவரைப் பற்றி எழுதியதால், அவரைப் பற்றியே சிந்தித்ததால் நான் கைவிடப்படவில்லை.

மூழ்கி விடவில்லை. தத்தளித்துக் கொண்டிருந்தேன்.

வேலை கிடைப்பது தாமதமானது.

பிறகுதான் புரிந்தது. முயற்சி நம்முடையது. தீர்மானம் கடவுளுடையது.

அதுபோல் மகா பெரியவாளையே நித்தமும் சிந்தித்துக்கொண்டிருந்ததால்  அவரைப் பற்றியே எழுதிக்கொண்டிருந்ததால் அவர் என்னைக் கைவிடவில்லை.

என் வாழ்க்கையின் இரண்டாவது சுற்றை அவர் தீர்மானித்தார்.

அப்போது ஒரு நாள் சென்னை தி.நகர் ஸ்ரீகிருஷ்ண கான சபாவில் என் நண்பர் இசைக்கவி ரமணனை சந்தித்தேன். ஸ்வீட்டோடுதான் பேச்சை எப்போதும் ஆரம்பிப்பார். வீட்டுக்குப் போனாலும் சரி, வெளியில் இருந்தாலும் சரி... பெரும்பாலும் பாதாம் அல்வாவோடுதான் பேச்சை ஆரம்பிப்பார். அன்றைக்கும் அது நடந்தது.

ஆனால், அன்றைக்கு அவர் கையில் எடுத்த இனிப்பு என் வாழ்க்கை!

இசைக்கவி ரமணன்
இசைக்கவி ரமணன்

‘‘ஸ்வாமீ... பத்திரிகைல வேலை செஞ்சது போதும். ஒரு கால் நூற்றாண்டு பத்திரிகைகளுக்காக ஒங்களை நீங்க அர்ப்பணிச்சாச்சு. ஒங்க ஃபீல்டை மாத்திப் பாருங்களேன்’’ என்று தற்செயலாக ஆரம்பித்தார்.

யோசித்துப் பார்த்தேன். 1987ல் துவங்கி 2012 வரை பத்திரிகைப் பணிகளில் இருந்துள்ளேன்.

பத்திரிகைப் பணி தவிர, வேறென்ன எனக்குத் தெரியும், ஃபீல்டை மாற்றிக்கொள்வதற்கு?

இருந்தாலும், நண்பர் ரமணன் சொன்னதும் இதெல்லாம் இனி சாத்தியப்படுமா என்று என் உள்மனம் யோசிக்க ஆரம்பித்தது.

பத்திரிகைப் பணியைத் தவிர்த்து வேறு என்ன தெரியும் எனக்கு?

யோசிக்க ஆரம்பித்தேன்.

(தொடரும்)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com