அனுபவச் சுவடுகள் 19 பணம் – அன்று அக்கறை; இன்று ஆசை! இன்னும் ஆசை...

ஆன்மிகச் சொற்பொழிவாளர் பி. சுவாமிநாதன்
ஆன்மிகச் சொற்பொழிவாளர் பி. சுவாமிநாதன்
Published on

திருப்புறம்பயத்தில் என் அப்பாவைத் தவிர, இன்னும் பல புரோகிதக் குடும்பங்கள் அப்போது உண்டு. ஒவ்வொருவருக்கும் பரம்பரை பரம்பரையாக சில கிராமங்கள் உண்டு. அதாவது, அந்தக் கிராமங்களில் வசிப்பவர்கள் வீட்டில் நல்லது, கெட்டது எதுவாக இருந்தாலும் சம்பந்தப்பட்ட புரோகிதர்கள்தான் போய் வர வேண்டும்.

திவச தினத்தன்று சம்பந்தப்பட்ட கர்த்தாவே எங்கள் அக்ரஹாரத்து வீட்டுக்கு மாட்டு வண்டி அனுப்பி வைத்து விடுவார். அதில் ஏறி அப்பா புறப்பட்டுப் போவார். அதுபோல் திவசம் முடிந்ததும் கொண்டு வந்தும் விட்டு விடுவர்.

சிலர் சைக்கிள் எடுத்து வந்து அப்பாவை அழைத்துச் செல்வார்கள். இன்னும் வசதியான சிலர் மோபெட் போன்ற இரு சக்கர வாகனம் ஏதாவது கொண்டு வந்து அப்பாவை அழைத்துப் போவார்கள்.

இந்த வசதி எதுவும் இல்லாத சிலர் வீடுகளுக்கு நானே பல முறை சைக்கிளில் அப்பாவைப் பின்ஸீட்டில் (கேரியரில்) உட்கார்த்தி வைத்து ஓட்டி இருக்கிறேன்.

இன்றைக்கு சென்னையில் வைதீகத்தில் இருக்கிற ஒரு சாஸ்திரிகளுக்கு மாதம் ஐம்பதாயிரம் ரூபாய் வருமானம் வந்தாலும் போக மாட்டேன் என்கிறது. இப்போது இருக்கிற காலம் அப்படி. எத்தனை சம்பாதித்தாலும் எவருக்கும் போத மாட்டேன் என்கிறதுதான். சாஸ்திரிகள்தான் என்றில்லை... சாஃப்ட்வேரில் லட்சக்கணக்கில் சம்பாதிக்கிறவர்களும் இதையேதான் சொல்கிறார்கள். 

சாஸ்திரிகள்...
சாஸ்திரிகள்...Image credit wikipedia.org

அலுமினியத்தாலான ஐந்து காசு, பத்து காசுகளை வலது உள்ளங்கைக்குள் வரிசையாக அடுக்கி வைத்துக் கொண்டு ஒரு முறைக்கு இரு முறை எண்ணி எண்ணிக் கொடுத்துச் செலவழித்தோம் – அன்று. 

ஒரு ரூபாய் நோட்டு, இரண்டு ரூபாய் நோட்டுகளை ஒரு முறைக்கு இரு முறை தடவிப் பார்த்து ‘ஒரே தாள்தானா? அல்லது இதனுடன் இன்னொரு தாள் ஒட்டிக் கொண்டிருக்கிறதா?’ என்று சந்தேகத்துடன் பார்த்துப் பார்த்துக் கொடுத்தோம்.

செல்வத்தின் அதிபதியான மகாலட்சுமி தேவியை அப்படிக் கொண்டாடினார்கள் முந்தைய தலைமுறையினர். தப்பித் தவறி ஏதேனும் காசோ, ரூபாய் நோட்டோ கீழே விழுந்துவிட்டால் அதை மிகுந்த ஜாக்கிரதையாக எடுத்து, கண்களில் ஒற்றிக்கொண்டு ‘லாபம்’ என்று சொல்லி விட்டுப் பத்திரப்படுத்துவார்கள்.

இன்றைக்கு இருநூறு ரூபாய் பரிவர்த்தனையில் ஆரம்பித்து, இரண்டு லட்சம் வரை வெகு சாதாரணமாக ஒரு கார்டைக் காண்பித்துத் தேய்த்து விட்டுப் போகிறோம். தேய்த்து முடித்தபிறகு, நாலு வரியில் ஒரே ஒரு குறுஞ்செய்தி கையடக்க போனுக்கு வருகிறது - உங்கள் வங்கிக் கணக்கில் இத்தனை ரூபாய் எடுக்கப்பட்டு விட்டதாக!

ஒரு ஐம்பது ரூபாய் மணியார்டர் அனுப்பி இருப்போம். ‘பணம் பட்டுவாடா ஆகிவிட்டதா?’ என்கிற சந்தேகத்தில் தினம் தினம் தபால்காரரிடம் பதில் கடிதத்தை எதிர்பார்த்துக் காத்திருப்போம் அந்த நாட்களில்.

ஆனால், இன்றோ, ஐம்பது லட்ச ரூபாயையே அசால்ட்டாக கம்ப்யூட்டரிலேயே மாற்றுகிறோம். அடுத்த விநாடியே பணம் டெலிவரி ஆனதற்கு அத்தாட்சி ரசீதும் வருகிறது.

ஓட்டல்களிலோ, டிபார்ட்மென்ட் ஸ்டோர்களிலோ இன்றைக்கு நாம் பில்லுக்கு உண்டான பணத்தை ஒருவேளை கேஷாகக் கொடுக்கிறோம் என்றால், பில்லையும் சரிபார்ப்பதில்லை. மிச்சம் தருகிற கேஷையும் எண்ணிப் பார்ப்பதில்லை. அப்படியே வாங்கிப் போட்டுக் கொண்டு விடுகிறோம். இது அவசர யுகம். பல இடங்களில் நம்பிக்கை வைத்து செயல்படும்படி இருக்கிறது.

சொற்பமான சம்பாத்தியம் வாங்கிய காலத்தில், சம்பளம் வாங்கியபின் வீட்டுக்கு வந்து அதை அம்மாவிடமோ, அப்பாவிடமோ கொடுத்துவிடுவோம். அதன்பிறகு பணத்தைத் தாங்கி இருக்கும் அந்த ‘கவரை’ நாம் மறந்து விடுவோம்.

ஏதேனும் அத்தியாவசியமான செலவு என்றால், நாமே வீட்டில் கேட்டு வாங்கிக் கொள்வோம். அல்லது அம்மாவே ‘இந்தாடா... செலவுக்கு வெச்சுக்கோ’ என்று நாம் கேட்காமலேயே கொடுத்து விடுவார்.

இன்றைய மனிதனுக்கு ஆசை. ஆசை. ஆசை... எதைப் பார்த்தாலும் வாங்கி வைக்க வேண்டும் என்கிற வேட்கை.

அன்றைக்கு கடை கடையாக ஏறி இறங்கினோமா? பொருட்களை வாங்கிக் குவித்தோமா? பணத்தைத் தண்ணீராய்ச் செலவழித்தோமா?

இதையும் படியுங்கள்:
‘வாக்கு கொடுத்தால் காப்பாற்ற வேண்டும்’ என்று ஏன் சொல்கிறார்கள் தெரியுமா?
ஆன்மிகச் சொற்பொழிவாளர் பி. சுவாமிநாதன்

என் தந்தையார் ஒரு வீட்டில் திவசம் (சிராத்தம்) செய்து வைக்கப் போனால், எவ்வளவு கொடுப்பார்கள் தெரியுமா? ஒரு ரூபாய். ஒரே ஒரு ரூபாய். அமாவாசை அன்று தர்ப்பணம் செய்து வைத்தால், ஐம்பது காசு. இதைத் தவிர சம்பந்தப்பட்ட கர்த்தாக்கள் பெரிய மனசு பண்ணி, காய்கறிகளும் அரிசியும் தருவார்கள்.

அதுதான் எங்கள் குடும்பத்தின் வயிற்றுப் பசியைப் போக்கியது. அப்பா, அம்மா, நான், எனக்கு இரு சகோதரிகள், ஒரு அண்ணன். குடும்பத்தில் ஆறு பேருக்குப் புரோகிதம்தான் சாப்பாடு போட்டது.

இன்றைக்கு வீட்டில் இருப்பவர்கள் இல்லத்தரசிக்கு ஆர்டர் போடுகிறார்களே,  ‘இன்னிக்கு உருளைக்கிழங்கு கறி... குடமிளகா சாம்பார். அப்படியே அப்பளமும் பொரிச்சுடும்மா’ என்று!  இதெல்லாம் அப்போது கிடையாது. கிராமத்தில் பார்க்கவே முடியாது.

என் அம்மா ராஜலட்சுமி சமைத்துப் போட்ட காய்கறிகள் எல்லாம் கிராமத்திலேயே விளைகிற நாட்டுக் காய்கள். கொத்தவரங்காய், வாழைக்காய், அவரைக்காய், பூசணி, பரங்கி, பாகற்காய், பிரண்டை, கீரை... இப்படித்தான் இருக்கும். கேரட், பீட்ரூட், சௌசௌ, உருளைக்கிழங்கு போன்ற காய்கறிகளையெல்லாம் கிராமத்தில் பார்த்ததே கிடையாது.

கிராமங்களில் விவசாயம் செய்பவர்களின் வீடுகளை எளிதில் அடையாளம் கண்டு விடலாம். வாசலில் அறுப்பு அறுத்த நெல் மூட்டைகள் அடுக்கப்பட்டிருக்கும். அல்லது எள், கம்பு போன்ற இன்ன பிற தானியங்கள் மூட்டை மூட்டைகளாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும்.  வீட்டுக்கு வெளியே வைக்கோல்போர் ஒரு ஓரமாகக் காணப்படும். உழவு மாடுகளைக் கட்டி வைத்திருப்பார்கள்.

விவசாயக் குடும்பங்களில் இருப்பவர்கள் அவர்கள் வீடுகளில் திதி வந்தால் புரோகிதம் செய்து வைக்கும் என் அப்பாவுக்கு என்ன தருவார்கள்? அவர்கள் எவற்றைப் பிரதானமாக விளைவிக்கிறார்களோ, அவற்றையே தருவார்கள். 

அப்படியாக, எங்கள் இல்லத்தில் அதிகம் நாங்கள் சாப்பிட்டது கொத்தவரங்காய் கறி, வாழைக்காய் கறி. சாம்பார், வத்தக்குழம்பு என்று எடுத்துக்கொண்டால் பூசணியும் பரங்கியும்தான் அதிகம்.

அப்பாவின் புரோகிதத் தொழிலில் வந்ததை சாப்பிட்டு வளர்ந்த உடம்பு இது என்பதை எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் பெருமையாகச் சொல்வேன்.

(தொடரும்)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com